
அதிகாலையில் எழுந்திருப்பவனும் இளமையிலேயே கல்யாணம் செய்து
கொள்கிறவனும் வருந்தமாட்டார்கள் என்கிறது ஒரு சீனப்பழமொழி. நல்ல
வேலை கிடைப்பதற்கே வருடங்களாகும் நிலையில் கல்யாணம் என்பது
ரொம்பவே தள்ளித்தான் போகிறது இந்தகாலத்தில். வேலை
கிடைத்தாலும் வீடு, கார் என்று வசதிகள் வந்த பிறகுதான் கல்யாணம்
என்பதும் ஒரு பக்கம். ஆனாலும் சீக்கிரம் எழுந்து கொள்வதில்
பிரச்சினைகள் இல்லையே? இரவு நிம்மதியான உறக்கம் இருந்தால்தான்
அதிகாலையில் எழுந்திருக்க முடியும். பகலெல்லாம் உழைத்துக் களைத்த
உடலுக்குக் குளிர்ச்சியான சூழலென்றால் உறக்கம் தன்னால் வரும்.
ஆனால் எல்லோராலும் ஏ ஸி போட்டுக் கொள்ள முடியுமா?
அதற்காகத்தான் மார்கழி மாதம். இயல்பாகவே இரவின் வெப்பநிலை
சென்னையிலேயே வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் அதிகாலை
எழுந்திருந்து காற்றிலே உள்ள ஓசோன் படலத்தைக் குளிர்ந்த காற்றுடன்
அனுபவித்துக் கொண்டே ஓட்டம் அல்லது நடைப்பயிற்சி என்று
ஆரம்பித்தால் கோடையிலும் அது தொடரும், ஆரோக்கியத்தைக்
காக்கும்.
ஆண்டாளும் பௌர்ணமியன்று ஆரம்பித்த மார்கழி மாதத்தில்
தன்னுடைய பாவை நோன்பைத் தொடங்குகிறார். செல்வத்துக்குக்
குறைவில்லாத ஆயர்பாடிச் சிறுமிகளே, சூரியசந்திரர்களைப் போல
பிரகாசமான அழகுடையவனும், சிவந்த கண்களும், கரியமேனியும்
கொண்டு சிங்கம் போலத் திகழ்கின்ற நந்தகோபன் – யசோதையின்
மகனைப் புகழ்ந்து பாட அவன் நமக்கு முக்தி தருவான் என்று
அழைக்கிறாள்.
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்
நீராடப் போதுவீர் பொதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமிகாள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
#1மார்கழி2019-20 #திருப்பாவை1 #ஸ்ரீஅருண்குமார்