
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
ஆலயமணி படத்தில் வரும் ஒரு அழகான பாடல். கருப்பு வெள்ளையில் ஒரு காவியம். முதலில் அழகான பின்புலத்தில் அழகான விஜயகுமாரி – அதுவும் க்ளோஸப்பில். ஜானகியின் மயக்கும் குரலில் எஸ் எஸ் ராஜேந்திரன் உடம்பு சரியில்லாமல் படுத்திருப்பார். அவரைத் தூங்கவைக்க ஜானகியின் மயக்கும் குரலில் விஜயகுமாரி பாடுவார். ஆனால் எஸ்எஸ்ஆர் அந்தப் பக்கம் திரும்பி சரோஜாதேவி பாடுவதாக கனவு காண்பார். என்னடா நேத்தைக்கு அகில்புகை தூக்கத்தைப்பத்திப் பேசிட்டு, திருப்பாவைக்கும் திரைப்படத்துக்கும் என்னடா சம்மந்தம்னு கேக்கறீங்களா? கொஞ்சம் இருங்க.
இந்த தூக்கம் இருக்கு பாருங்க அது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளுக்கும் முக்கியமானது. அதுல பாருங்க இந்த குதிரை இருக்கே அது நிந்துண்டேதான் தூங்குமாம். அய்யோ பாவமா இருக்கில்லே… இந்த நாய் இருக்கு பாருங்க, அது தொடர்ந்து மூணுநாள் தூங்காம இருந்தா செத்தே போயிடுமாம். உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டுன்னு சொல்வாங்க. மதியம் சாப்பிட்டவுடனே ஒரு பத்து நிமிஷம் கண்ணசர்றது நம்ம வழக்கம். அது ரொம்ப புத்துணர்ச்சி கொடுக்கும்னு சொல்றாங்க. ஆனா அது அரைமணிக்கும் மேல போனால் தொப்பையத்தான் கொடுக்கும்
படுத்தவுடனே வருவது இளந்தூக்கம். இது இரவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும். அப்புறமா வருவது ஆழ்ந்த தூக்கம். இது சுமார் ஒண்ணரை மணி நேரம் வரை நீடிக்கும். அதுக்கப்புறம்தாங்க கனவுகள் நிறைந்த தூக்கம். அப்புறம் மறுபடியும் இது மாறி மாறிவரும்.
இந்த இளந்தூக்கம் உடல் மற்றும் மனஅமைதிக்கு முக்கியம். ஆழ்ந்த தூக்கம் நோய் எதிர்ப்புச்சக்திக்கு முக்கியம். இதனாலத்தான் கிராமங்களிலே சொல்லுவாங்க தூக்கங்கெட்டுப்போனா ஒடம்பு கெட்டுப்போகும்னு. இந்த கனவுத்தூக்கம் இருக்கே அப்போ நம்ம கண்கள் அலைபாயும். மூச்சு சீராக இருக்காது. இதயத்துடிப்பும் வேகமாக இருக்கும் – இருக்காதா பின்னே? கனவுல நயனதார வந்து உங்ககிட்டே என்ன ஏத்துக்க மாட்டீங்களான்னு உங்களை கெஞ்சும்போது இதயம் தறிகெட்டு ஓடாதா? ஆச்சரியம் என்னவென்றால் இந்த கனவுத்தூக்கத்தின்போதுதான் நமது மனது – அதாவது மூளை– அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து தேவையானவற்றை நிரந்தர நினைவகத்தில் போட்டு வைக்கிறது. அதனால்தான் உங்கள் காதலியை முதல் முதலில் பார்த்தபோது அவள் என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தாள் என்பது சாகும்வரை நினைவிருக்கிறது – அவள் வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிண்டு போயிருந்தாலும். என்ன ஒரு பிரச்சினைன்னா நடந்த சம்பவங்களை அது அலசிக் கொண்டிருக்கும் போது நமது ஆசைகள் குறுக்கே புகுந்துவிடும். அதனால் போனாப்போகட்டும்னு மூளை நமது ஆசைகளை கனவு மூலமா நிறைவேத்தி வைக்கிறது. இதனால் விரக்தியடைவது தடை போடப்படுகிறது. இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா கனவு காணும்போது கழுத்துக்குக் கீழே இருக்கும் உறுப்புக்கள் இயங்காது, கண் மற்றும் உள்ளுறுப்புக்களான இதயம் நுரையீரல் மட்டும்தான் இயங்கும். இல்லைன்னா நயனதாரான்னு நினைச்சி பக்கத்திலே படுத்திருக்கும் நண்பனைக் கட்டிப் பிடிச்சிப்பிங்க, இல்லே ஓசாமா பின்லேடன்னு நினைச்சி குத்திக் கொன்னுட்டீங்கன்னா? ஆனால் இந்த ஆழ்ந்த தூக்கம் இருக்கிறதே அப்போதுதான் உங்களை எழுப்புவது பெரும்பாடு.
இப்படி பொழுது விடிந்தும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தோழிகளை ஆண்டாள் எழுப்புகிறாள்.
போன ஜென்மத்தில் நாராயணனுக்கு நோன்பிருந்ததன் பயனாக இப்போது சொர்க சுகங்களை இங்கே அனுபவிக்கிறவளே… கதவைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசக்கூடமாட்டாயா? நாராயணனைப் போற்றிப்பாடினால் நோன்பின் பலனைத்தருவான். உன் தூக்கத்தில் கும்பகர்ணனையும் மிஞ்சிவிட்டாயே சோம்பேறித்தோழியே என்று ஆண்டாள் தோழிகளை அழைக்கிறாள்.
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுடொருநாள்
கூற்றத்தின்வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
#10மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்