அறச்சீற்றம் —  இன்னைக்கு அடிக்கடி நாம கேள்விப்படும் ஒரு வார்த்தை.  திரைப்படமாகட்டும், திடீர்ப் போராளிகளாகட்டும், அரசியலுக்கு வந்து /  அரசியலுக்கு வருவதாகச் சொல்லி திரைப்படங்களை ஓட்ட நினைப்பவர்களாகட்டும் —  எல்லாரும் சொல்லும் ஒரு வார்த்தை அறச்சீற்றம். அதென்னங்க அறச்சீற்றம்? அதாவது நியாயமான கோவம், அதர்மத்தைக் கண்டு பொங்குவது,  நல்லவர்களுக்காகப் போராடுவது – இதெல்லாம் அறச்சீற்றமாம். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மாதிரி அறச்சீற்றத்தின் பின்னணியில் ஏராளமான கணக்குகளும் அதர்மங்களும் இருப்பதுதான்.  ஜல்லிக்கட்டு போராட்டத்தையே ஒரு அறச்சீற்றம் என்று வர்ணித்தார்கள் — ஆனால் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு மாடுகளுக்காகப் போராடினோம் என்று பின்னர் ஒரு கும்பல் குதித்தது என்ன மாதிரி அறச்சீற்றம் என்று தெரியவில்லை.  நதிகளை இணைக்க வேண்டும் என்று விவசாயிகள் என்று கூறிக் கொள்ளும் தொப்பை வைத்த சிலர் போராடினார்கள். ஆனால் நதிகளை இணைக்க வேண்டும் என்று இயக்கமாக ஒருவர் ஆரம்பித்தபோது அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர் சிலர். 2015 பெரு வெள்ளத்துக்குக் காரணம் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, நீர்நிலைகள் ஆக்ரமிப்பைத் தடுக்கவில்லை என்று பொங்கினார்கள் – இது அறச்சீற்றமாம். ஆனால் நீர்நிலைகளை ஆக்ரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அரசாங்கம் இடிக்க ஆரம்பித்த போது அரசு ஊழியர்களையும் அமைச்சர்களையும் கல்லெறிந்து விரட்டியடிக்க முற்பட்டதும் இதே மக்கள்தான்.  எங்கே போனது அறச்சீற்றம்? ராஜஸ்தானிலிருந்து இங்கே குடியமர்ந்த சேட்டுகள் வட்டி வாங்கி தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடிக்கிறார்கள், பணத்தில் கொழுக்கிறார்கள் என்று அறச்சீற்றத்துடன் பொங்கியவர்கள்தான் 500, 1000 பணமதிப்பிழப்பிற்குப் பிறகு அதே சேட்டுக்களின் பணத்தை வங்கிகளில் மாற்ற 100-200 கமிஷனுக்குக் கால் கடுக்க நின்றார்கள். இது மாதிரி கருப்புப் பணத்தை மாற்றுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கையில் மை வைத்த போது பொங்கியவர்களும் இவர்கள்தான். எங்கே போனது அறச்சீற்றம்?

 

இவங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று வாய்ஸ் கொடுத்தவர்கதான் அம்மாவுக்கு வாழ்த்து மடல் அனுப்பினார் – வழக்கிலிருந்து விடுதலையானவுடன்.  எந்த ஊழல் புகார் காரணமாக எதிர்த்துக் குரல் கொடுத்தாரோ அதே ஊழல் வழக்கில் நீதிபதி குமாரசாமியால் விடுதலையானவுடன் வாழ்த்து தெரிவித்தாரே. எங்கே போயிற்று அறச்சீற்றம்? திடீரென்று வந்தார் ஒருத்தர் —    ஒரு எழவும் புரியாம ட்வீட் போட்டு மக்களைக் குழப்பினார். நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று அதிர்ச்சி கொடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் மக்களுடன் நேரடி தொடர்பை உண்டாக்கித் தரும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஓடி விட்டார்.  – எங்கே போனது அறச்சீற்றம்?

 

வேட்பாளர் படிவம் எப்படி பூர்த்தி செய்வது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டவுடன் பொங்கி எழுந்தார் ஒருவர்.  மக்களுக்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னார். ஆனால் சில காலத்துக்கு முன்பு காவிரி பிரச்சினையோ வெள்ளமோ அது மக்கள் பிரச்சினை, நாங்கள் கலைஞர்கள், எங்களை இந்தப் பிரச்சினையில் இழுக்காதீர்கள் என்று சொன்னார். எங்கே போனது அறச்சீற்றம்?

 

அரசியல்வாதிகளெல்லாம் அயோக்கியர்கள் என்று அறச்சீற்றத்துடன் பொங்கும் இதே பொது ஜனம்தான்  ஆயிரத்துக்கும் இரண்டாயிரத்துக்கும் தனது வாக்குகளை விற்கிறது. எங்கே போனது அறச்சீற்றம்?

 

இந்த நிலையில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் எப்போ வந்தாருன்னே தெரியாத ஒருத்தர், எப்போ வருவாருன்னே தெரியாத ஒருத்தர், எப்படியாவது வரணுமுன்னே  ஒருத்தர் – இவங்க பின்னாடி காத்துக்கிட்டிருக்கு இந்த பொதுஜனம். உங்களுக்கு வைத்தியம் பாக்கற டாக்டர் சரியில்லைன்னா வேற டாக்டரைத்தான் தேடணும், கொத்தனார் கிட்டேயா வைத்தியம் பார்த்துக்க முடியும்?

 

ஆனால் ஸ்ரீராமன் அப்படியில்லை. தனது மனைவியைக் கடத்தி வைத்திக் கொண்டு போயிருக்கிறான் என்று தெரிந்ததும் வந்ததே அதுதான் அறச்சீற்றம்.  ஆனாலும் எந்த நிலையிலும் தர்மத்தைக் கைவிடவில்லை ராமன். எதிரி என்னதான் கெட்டவனாக இருந்தாலும் நான் தர்மத்தை மீற மாட்டேன் என்று இறுதி வரை உறுதியோடு இருந்து வெற்றி கண்டான் ராமன். இதுதான் உண்மையான அறச்சீற்றம்.

 

இதைத்தான் ஆண்டாள் தோழிகளிடத்தில் கூறி அவர்களை அழைக்கிறாள்.

பால்கறக்கத் தாமதமானதால் கன்றுகளை நினைத்துக் கொண்டு எருமைகள் பாலைச் சொரிய தரையெல்லாம் ஈரமானது.  கண்ணனை விட்டு எப்போதும் பிரியாத பக்தியினால் இத்தகைய பேறு பெற்றவனின் தங்கையே.. உன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறோம். எங்கள் தலையெல்லாம் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது.  அறச்சீற்றம் காரணமாக இராவணனை அழித்தவனும், தன்னை நினைப்பவர்களுக்கெல்லாம் நன்மையைத் தருபவனுமான ஸ்ரீராமனைப் பாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நீதான் வாயே திறக்கவில்லை. அப்படியென்ன ஒரு தூக்கம்? எழுந்திரு என்று கூறுகிறாள் ஆண்டாள்.

 

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

 

#12மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.