
திடீர்னு அரசியலில் களமிறங்கியவர் என்னடான்னா நான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதே அரசியலுக்கு வந்துட்டேன்னு சொன்னார். எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாதுன்னு சொன்னவர் “கடமையைச் செய் – பலனை எதிர் பார்” என்று பேனர் வைக்கிறார். போருக்குத் தயாராகுங்கள்னு உசுப்பேத்தறார். யாரை எதிர்த்து விளம்பரம் தேடினாரோ அவரையே வாழ்த்திப் பாடினார். ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னார் — சொன்னார். அவ்வளவுதான். காவிரி பிரச்சினைக்காக தனியா ஒரு குறுக்கு சால் ஓட்டினார்.
இதுல இவரு அரசியலுக்கு வரக்கூடாதுன்னு ஒரு கும்பல். இவரு வந்தாதான் தமிழ்நாட்டுக்கே விடிவுகாலம்னு ஒரு கும்பல். இவரு ரொம்ப நல்லவரு, தைரியசாலி, தர்மவான், மக்கள் செல்வாக்கு உள்ளவர், அதனால அவராலதான் நாட்டைக் காப்பாத்த முடியுமுன்னு ஒரு கூட்டம். வாடகை கொடுக்கலை, சம்பளம் கொடுக்கலை, கார்ப்பொரேஷன்லே வாடகை ஏத்தினா குடுக்க முடியலை, கோச்சடையான், போத்ரா – இப்படி இன்னொரு கும்பல்.
மக்கள் செல்வாக்கு உச்சத்துல இருக்குன்னு சொல்றாங்க. எப்படி? எங்க தலைவர் வந்தா ஆயிரக் கணக்குல கூட்டம் கூடும். அப்படியா? கடை திறப்புக்கு நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வந்தபோது கூடிய கூட்டத்தை விடவா? படம் ஓடுவது ஒரு அளவு கோல் என்றால் ஊத்திக்கிட்ட பாபா, லிங்கா இவையெல்லாம் என்ன? 1996ல் இவர் வாய்ஸ் கொடுத்ததால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாம். அப்படியா? அப்போ அடுத்த வந்த பாராளுமன்றத் தேர்தலில் பாபா படப் பெட்டியை பா ம க தொண்டர்கள் தூக்கிக் கொண்டு ஓடியதால் அந்தக் கட்சியைத் தோற்கடிக்கச் சொல்லி வாய்ஸ் கொடுத்தபோது எடுபடவில்லையே ஏன்?
இதெல்லாம் போகட்டும், செல்வி ஜெயலலிதா திரு.கருணாநிதி ஆகியோர் இப்போது இல்லை. அது சரி, அவங்க இருக்கும்போது உள்ளே நுழைந்திருந்தா தில்லான ஆளுன்னு பாராட்டலாம். அவங்க இருக்கும்போது மாத்தி மாத்தி ரெண்டு பேரையும் பாராட்டி விட்டு இப்போ அவங்க இல்லேன்னபோதும் நுழையலாமா வேணாமான்னு ஊசலாடிக்கிட்டே இருக்கிறது என்ன நிலை?
இத பாருங்க. நடிகர்கள் என்ன….. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இது ஜனநாயக நாடு. யாருக்கும் தடையில்லை அரசியலுக்கு வருவதற்கு. ஆனால் வரேன் வரேன்னு சொல்லிக்கிட்டே இருந்தா போரடிக்குதுங்க. அரசியலுக்கு வாங்கன்னுதான் நான் சொல்றேன். நான் மட்டுமா? அவரது ரசிகர்கள் எல்லோருமே இதைத்தான் கூறுகிறார்
என்ன ஆச்சரியம்… ஆண்டாளும் தனது தோழியைப் பார்த்து கபடத்தை விட்டு எழுந்து வா என்று பாடுகிறாள்.
பறவை போல வந்த பகாசுரன் வாயைப் பிளந்து கொன்றான் கண்ணன். ராவணனைக் கொன்றான் ஸ்ரீராமன். கடவுளின் புகழ் பாடுவதற்காகப் பெண்கள் எல்லோரும் கூடியுள்ளனர். சுக்கிரன் உதயமாகியது, வியாழன் அஸ்தமனமானது. அதிகாலை நேரத்தில் பறவைகள் பெருத்த ஆரவாரத்துடனும் குதூகலத்துடனும் இரை தேடப் புறப்பட்டன. கண்ணனின் புகழ் பாட வேண்டிய நேரத்திலே, எங்களுடன் குளத்திலே குளித்து எழ வேண்டிய வேளையிலே படுக்கையிலேயே கிடக்கிறாயே. உன் கபடத்தை விட்டு எழுந்து வா என்று தோழியை அழைக்கிறாள் ஆண்டாள்.
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
#13மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்