ஆயுள் பரியந்தம் உனைப் பிரியமாட்டேன்” என்று அக்னி சாட்சியாகக் கைப்பிடித்து விட்டு அடுத்த வருடமே பரஸ்பர சம்மதத்தின் பேரில் பிரிகிறோம் என்று விவாகரத்து மனு கொடுப்பது சரியா?  

 

சுகதுக்கத்திலும், ஏற்றத் தாழ்விலும், சாகும் வரை பிரிய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு  பாதியிலேயே பிரிந்து போவது சரியா?

 

ஒரு அப்பா ஒரு அம்மா –  இதை மாற்ற முடியாது. அப்புறம் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் / கணவர்கள்?  அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணா தம்பி அக்கா தங்கை – இவர்களை மாற்ற முடியாது. யாரை வேண்டுமானாலும் அண்ணா அக்கா என்று கூப்பிடலாம், ஆனாலும் கூடப் பிறந்த அண்ணா அக்கா மாதிரி ஆகுமா?  கணவனோ அல்லது மனைவியோ இறந்து விட்டார்கள் என்றால் கூட ஒரு விதத்தில் நியாயம் — இன்னொரு மணம் செய்து கொள்வது. ஆனால் உயிரோடு இருக்கும் போதே ஒத்து வரவில்லை என்று பிரிந்து விட்டு இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்வது சரியா?  

 

இதற்கெல்லாம் முக்கிய காரணம்  வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் பணமே பிரதானம் என்று ஆனதால்.  கொஞ்சம் பொறுங்க — மனசுக்குப் பிடிக்காதவரைத் தூக்கி எறிவதும் மனசுக்குப் பிடிச்சவங்களோட சேருவதும் சொந்த விருப்பம் – அதுக்குப் பணம் காரணமில்லேன்னு சண்டைக்கு வராதீங்க.  வேலை– ஒன்று பிடிக்காவிட்டால் இன்னொரு வேலைக்குப் போகலாம். ஆனால் பிடிக்கவில்லை என்றால் உடனே விட்டுவிட முடியுமா? முடியாதே. ஏனென்றால் அடுத்த வேலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.  அல்லது இன்னொரு வேலை உடனே கிடைக்கும் என்ற தைரியம் இருந்தால் சட்டென்று விட்டு விடலாம். ஆனால் பிடிக்காத வேலை என்பதற்காக வேலையை விட்டவர்களை விடவும் அதிக சம்பளத்துக்காக பழைய வேலையை விட்டவர்கள்தான் அதிகம்.

 

ஆக அடுத்த வேலை கிடைக்கும் வரைக்கும் இந்த வேலையில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட துணைக்குக் கொடுப்பதில்லையே? ஏன்?  அடுத்தது வேலையும் வாழ்க்கையும் ஒன்றா – பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ள…

 

அதற்காக ஒத்துப்போகாத இருவர் கல்யாணம் செய்து கொண்ட பாவத்திற்காக ஒன்றாக இருந்து நரக வாழ்க்கை வாழ வேண்டுமா? சரியான கேள்வி.  யோசிச்சிப் பாருங்க… நீங்க வேலை செய்யுமிடத்தில் பிரச்சினை. வேறு வேலைக்குப் போக முடியாத சூழல். அப்போ பிரச்சினைகளை சகித்துக் கொண்டும் அதற்கேற்றபடி நம்மை மாற்றிக் கொண்டும் வேலையில் தொடரவில்லையா? வேலையில் காட்டும் இந்த சகிப்புத்தன்மையை ஏன் வாழ்க்கையில் காட்டுவதில்லை?    

 

இதற்கெல்லாம் உண்மையான காரணம் இப்போதைய தலைமுறைக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை என்பதெல்லாம் பழக்கமே இல்லை. இவையிரண்டும் இல்லையென்றால் வாழ்க்கையில் நிம்மதியும் இருக்காது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.  ஆனால் இன்று எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு திருமண உறவைத் துண்டித்துக் கொள்கிறோம்.

 

ஆனால் ஆண்டாள் அப்படியல்ல.   நீராடுவதற்கு எங்களை எழுப்பி விடுவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அதனை மறந்து உறங்கிக் கொண்டிருந்த தோழிகளிடம் கோபம் கொள்ளாமல் அவர்களை அன்புடன் அழக்கிறாள்.

 

வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள குளத்தில் காலை என்பதை உணர்த்தும் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன, ஆம்பல் மலர்கள் மூடிக் கொண்டன. காவி ஆடைகளை உடுத்திய துறவிகள்  கோவிலில் ஆராதனை செய்யப் புறப்பட்டு விட்டனர். ஆனால் நீராடுவதற்கு எங்களை எழுப்பி விடுவேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு வாய்ச்சொல் வீரராக நின்று விட்டாயே…. சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாயே..  சீக்கிரம் எழுந்திரு…. சங்கையும் சக்கரத்தையும் கையிலேந்து முழங்காலளவுவரை கைகளைக் கொண்டவனுமாகிய தாமரைக் கண்ணனின் புகழ் பாடுவோம் என்று தோழிகளை அழைக்கிறாள் ஆண்டாள்.

 

“உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்”

 

#14மார்கழி2019-20  #ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.