
ஒரு கற்பனையான கதை. எல்லா கதைகளுமே கற்பனைதானே அப்டீங்கறீங்களா? சரி அப்படியே இருக்கட்டுமே.
ஒரு தலைவர். வீட்டுக்குள்ளே இருக்கிறார். வெளியே தொண்டர் கூட்டம்.
“தலைவா, சீக்கிரம் வா தலைவா, உனக்கா இந்த நாடே காத்திருக்கு தலைவா. சீக்கிரம் வா”
“சும்மா மொலு மொலுன்னு கூப்பிட்டுட்டே இருக்காதீங்க. நான் வரும்போது வருவேன்.”
“ஆமா, நீங்க ரொம்பதான் வல்லவரு… உங்களோட பேச்சுத் திறமை எங்களுக்கு எப்பவோ தெரியும், அதுவும் எத்தினி வருஷமா தெரியும். இப்போ நீங்க வரப்போறீங்களா இல்லீங்களா தலீவா?”
“ஆஹா ஆஹா நீங்கள்தானப்பா உண்மையில் பேச்சுத் திறன் உடையவர்கள். இத்தனை வருஷமா என்னை எப்படியெல்லாம் முட்டுக் கொடுத்து, என்னா திறமையா சமாளிக்கிறீங்க? அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் – வாய்ப்பேச்சு வீரனாகவே. என்ன இப்போ?”
“சீக்கிரம் வாங்க தலைவா. நீங்க வருவதே ஒரு அதிசயம் நடக்கறா மாதிரி ஆயிடுச்சு தலைவா”
“எல்லாரும் வந்துட்டீங்களா?”
“நாங்க எல்லோரும் வந்துட்டோம். வந்து ரொம்ப நேரமா நடுத்தெருவிலே நிக்கறோம் – நீங்க வருவீங்கன்னு. நீங்கதான் வந்த பாடே காணோம்”
“எதுக்காகய்யா நான் வரணும்?”
“என்ன தலீவா இப்படிக் கேக்கறே? வர்றேன் வர்றேன்னு இத்தினி வருஷமா எங்களை உசுப்பேத்தி விட்டுட்டு இப்போ எதுக்கு வரணும்னு கேக்கிறியே நியாயமா? கல்யாணராமன் வந்துட்டாரு, கேப்டன் பிரபாகரன் வந்துட்டாரு, லொடுக்கு பாண்டி எப்பவோ வந்துட்டாரு, ஆனா நீ மட்டும்தான் வர்ற வழியக் காணோம் தலீவா”
இது கற்பனையா இருக்கலாம். ஆனா ஆண்டாள் தனது தோழிகளைக் கூப்பிடும்போது என்ன நடந்தது தெரியுமா? தோழியும் ஆண்டாளும் பதிலுக்குப் பதில் பேசுவதுபோல இருக்கும் இந்தப் பாசுரம்.
பச்சிக்கிளிக்குஞ்சு போல இருப்பவளே.. இன்னுமா தூங்குகிறாய்?
இப்போ எதற்கு இப்படி என்னை அழைக்கிறீர்கள்? இருங்கள் நானே வந்து விடுகிறேன்
ஆஹா நீ திறமைசாலிதான். உன் வாய் ஜாலம் எங்களுக்கு எப்போதே தெரியுமே
நீங்கள்தான் திறமைசாலிகள். நீங்க சொன்ன மாதிரியே இருந்து விட்டுப் போகிறேன்.
சீக்கிரம் எழுந்து வா. உனக்கென தனியா எதாவது அதிசயம் இருக்கா என்ன?
எல்லாரும் வந்துவிட்டார்களா?
எல்லாரும் வந்து விட்டார்கள். வேண்டுமென்றால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்.
எல்லாம் சரி, எதற்காக வர வேண்டும்?
குவலயபீடம் எனும் யானையைக் கொன்றவன், கம்சனை அழித்தவன், மாயாஜாலங்களில் சிறந்தவன் – அந்த மாயக் கண்ணனைப் பாட அழைக்கிறோம். நீ எழுந்து வா என்று தோழியை அழைக்கிறாள் ஆண்டாள்.
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்.
#15மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்