
கதவு — இதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிட்டே போகலாம். சிங்காபூரிலே வீடுகளுக்குக் கதவே கிடையாதாம். அந்த வீடுகளில் யாராவது திருடினால் அவர்களை சனீஸ்வரன் பிடித்துக் கொண்டு விடுவான், அப்புறம் அவர்கள் வாழ்வே நாசம் என்பது நம்பிக்கை. கதவு என்ற பெயரில் கி.ராஜநாராயணன் ஒரு சிறுகதை எழுதியிருப்பார். ஒரு வீட்டின் பெரிய கதவில் குழந்தைகள் ஏறிக் கொண்டு முன்னும் பின்னும் அசைந்து பல ஊர்களுக்கும் போவதாக விளையாடுவார்கள். ஒரு நாள் நிலவரி கட்டவில்லை என்று வீட்டின் கதவை தலையாரி கதவைக் கழட்டிக் கொண்டு போய்விடுவார். கதவு போனதும் வீட்டின் நிம்மதியே போய்விடும் – குறிப்பாகக் குழந்தைகளுக்கு. ஒரு நாள் சாவடியில் தங்கள் வீட்டுக் கதவு புழுதி படிந்து கிடப்பதைக் காணும் குழந்தைகள் கண்ணீரோடு கதவைத் தடவிப் பார்ப்பதோடு முடிகிறது கதை.
குழந்தைகள் கதவைத் திறந்து மூடி விளையாடினால் உடனே தாழ்ப்பாளை ஓசைப்படுத்தாதே, திருடன் வருவான் என்று பெரியவர்கள் அதட்டுவார்கள். அது வேறொண்ணுமில்லீங்க. திறந்தி திறந்து மூடினால் தாழ்ப்பாள் கெட்டுப் போய்விடும், அப்புறம் கதவைக் கழட்டி விட்டு திருடன் உள்ளே வர சுலபமாக இருக்கும் என்பதுதான் அர்த்தம்.
அந்தக் கால அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் அறை வாசலில் ஒரு அரைக் கதவு இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? மேலேயும் இல்லாமல் கீழேயும் இல்லாமல் பாதி மூடிய கதவு – அந்தக் காலத்திலேயே ட்ரான்ஸ்பேரன்ஸி — வெளிப்படைத் தன்மையை அரசு அலுவலகங்களில் கொண்டு வந்தார்கள். பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லாத அந்த காலத்திலேயே இப்படி. ஆனால் இன்றைக்கு முழுவதும் மூடிய கதவுகள். மறுபடியும் பழைய அரைக் கதவு அறைவாசலில் வருமா? எது எதுக்கோ போராடும் பெண்கள் இதற்குப் போராடக் கூடாதா?
பெண்கள்னு சொன்னோமில்லையா? சரி, பெண்களை எப்படி அழைப்பது? அக்கா, அம்மா இப்படியெல்லாமா? இல்லேங்க. பொதுக்கூட்டம் போன்ற இடங்களில் பெண்களை எப்படி அழைப்பது? இதென்னங்க கேள்வி? தாய்மார்களே…. அப்போ ஆண்களை தந்தைமார்களேன்னு அழைக்கலாமா? அதை விடுங்க. தாய்மார்களே என்ற வார்த்தை தமிழை வளர்ப்பதாகச் சொல்லி தமிழைக் கொலை செய்பவர்கள் கண்டு பிடித்தது. உண்மையான வார்த்தை தாயர் — தாய் என்பது ஒருமை. தாயர் என்பது பன்மை. முத்தொள்ளாயிரம் பாடல் ஒன்று சேர மன்னனின் அழகையும் அவன் நகர்வலம் வரும்போது அவனைக் காண கன்னிப் பெண்கள் அலை பாய்வதையும் அதனை அவர்களது தாய் தடுப்பதையும் காட்டுகிறது.
தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலா
வண்டுலா அங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு !
சேரனைக் காண பெண்கள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரப் பார்க்கையில் அவர்களது தாயர் – தாய்மார்கள் இல்லை – கதவைத் தாழிட, இப்படி மூடி மூடித் திறந்ததால் கதவின் கீல் தேய்ந்தது என்று பாடுகிறார்.
தலைவன் வெளியூர் சென்று விட்டுத் திரும்பி வரும் நாளன்று தலைவனின் வருகைக்காகக் கதவருகிலேயே காத்திருந்து கதவாகவே மாறிவிட்ட தலைவி — அதனால் தலைவன் கதவைத் தட்ட கதவில் கை வைத்தவுடனே கதவைத் திறக்கிறாள் தலைவி
இப்படிக் கதவு பற்றி சுவையான பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
பூங்கதவே தாழ் திறவாய் – இந்தப் பாடல் ஞாபகமிருக்கிறதா? நிழல்கள் படத்தில் இடம் பெற்ற பெரிய வெற்றி பெற்ற பாடல். இளைய ராஜாவின் இசையில் வைரமுத்துவின் பாடல். இந்தப் படத்தின் வெற்றிக்கு இந்தப் படத்தின் பாடல்கள் முக்கிய காரணம்.
இதைப் போலத்தான் ஆண்டாள் கதவைத் திறக்க வாயில்காப்போனைக் கேட்டுப் பாடுகிறாள்.
ஆயர்களுக்கெல்லாம் தலைவனான நந்தகோபனின் வீட்டு வாசலில் நின்று வாயில் காப்போனைக் கேட்கிறார்கள். அழகிய மணிகள் அமைந்த கதவைத் திறந்து விடு. நாளை வந்தால் பறை தருவேன் என்று கண்ணன் எங்களிடம் நேற்றே சொல்லியிருக்கிறான். அதனால் கண்ணனை எழுப்புவதற்காகப் பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதலிலேயே ஏதாவது மறுப்பு சொல்லாமல் கதவைத் திறந்து விடு என்று பாடுகிறாள் ஆண்டாள்.
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே, கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்,
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
#16மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்