விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற கோஷம் அரசியல்வாதிகளின் மாறாத பழக்கம்.  இதனால் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடுமா? நோய் நாடி நோய் முதல் நாடி என்றார் வள்ளுவர். விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் —  இடுபொருள்களின் விலை உயர்வு, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துதல், ரசாயன உரங்களை சார்ந்திருத்தல், விளை பொருட்களுக்கு சரியான விலை கிடையாமை, கூலித் தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்றவை.  இலவச மின்சாரம் கொடுத்தால் இவையெல்லாம் தீர்ந்து விடுமா? புண்ணுக்குப் புனுகு பூசும் வேலை இது. ஒரு மனிதனுக்கு அத்யாவசியம் எவை? உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் – இந்த வரிசையில்தான் சொல்வார்கள். ஆனால் இது தவறு என்பேன் நான்.  என்னதான் பசி தாகமாக இருந்தாலும் உடுத்த உடை இல்லாவிட்டால் பிச்சை கேட்கக் கூடப் போக முடியாது. ஆக முதலில் உடை. அப்புறம் பசி காதடைத்தாலும் கத்திக் கேட்டால்தான் பிச்சை கிடைக்கும். ஆகவே நாக்கை நனைக்கத் தண்ணீர். அப்புறம் சோறு. இருக்க இடம் எங்கேயாவது ஒதுங்கிக் கொள்ளலாம்.  இதுதான் உண்மையான வரிசையாக இருக்கும். ஆனால் இலவசங்கள் எப்போதுமே பிரச்சினையைத் தீர்ப்பதில்லை –அவற்றைப் பெரிதாக்குகின்றன என்பதுதான் உண்மை. வள்ளி படத்துல “சேல வேட்டி கேக்காத, வேல வெட்டி கேளு” என்றொரு பிரபலமான வசனம் வந்தது ஞாபகமிருக்கிறதா? அன்னிக்கு அப்படிச் சொன்னவர் இப்போ அரசியலுக்கு வருவேன்னு சொல்லியிருக்கார். அரசியலுக்கு வந்தால் இவரும் இலவசங்களை ஆதரிப்பாரா? அது அவரோட ஜனநாயக உரிமை. ஆனா அதுக்குள்ளே ஒரு கும்பல் அவர் அரசியலுக்கு வரக்கூடாதுன்னும் அவர் வலதுசாரி அரசியல்வாதி, அதனால் அவரை ஏற்கக் கூடாதுன்னும் கூவுகிறது.  ஒருவரை அரசியலுக்கு வா வா என்று அழைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு அசிங்கமோ அவ்வளவு அசிங்கம் ஒருவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வது. ஆனால் இரண்டு அசிங்கங்களும் இங்கேதான் அரங்கேறும் என்பது தலைகுனிய வேண்டிய விஷயம். இன்று ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொன்னவுடன் ஒரு கும்பல் கத்துகிறது கதறுகிறது — ஏன்? இனிமேல் எங்கே தாங்கள் கொள்ளையடிப்பதற்குத் தடையாக இவர் வந்து விடுவாரோ? எங்கே நமது வியாபாரம் படுத்து விடுமோ என்ற பயம்தான்.  

என்ன ஒரு ஆச்சரியம்?  இலவசங்களைப் பற்றிப் பேசினோம், அதிலே எது முக்கியம் என்பதையும் வரிசைப் படுத்தினோம்.  இங்கே ஆண்டாளும் அதே வரிசையில் அறஞ்செய்பவரைப் பற்றிப் பாடுகிறாள்.

 

உடுக்க உடை, பருக நீர், உண்ண உணவு இவற்றைத் தர்மம்  செய்யும் நந்தகோபாலனே எழுந்திருங்கள். முல்லைக் கொடி போன்ற ஆயர்குலப் பெண்களில் முதன்மையானவளான யசோதைத்தாயே…  எங்கள் துன்பத்தை உணர்ந்து நீ எழுந்திருக்க வேண்டும். விண்ணையும் மண்ணையும் அளந்து திருவடிகளை ஓங்கிய கண்ணனே. நீயும் எழுந்திருக்க வேண்டும்.  செம்பொன் சிலம்பணிந்த பலராமனே நீயும் உன் இளவல் கண்ணனும் எழுந்திருந்து எங்களுக்குத் தரிசனம் தாருங்கள் என்று பாடுகிறாள் ஆண்டாள். 

 

அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்!

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்

அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!

செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!

 

#17மார்கழி2019-20  #ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.