
“ஒண்ணா ரெண்டா ஆயிரம் பொன்னாச்சே. மொதல்லே அந்த பால்காரன் கடனைத் தீத்துடணும்” இந்த வசனம் ஞாபகமில்லாதவர்களே இருக்க முடியாது. திருவிளையாடல் படத்தில் தருமியாக வந்து நாகேஷ் பேசிய வசனம். இந்தக் காட்சிகளின் ஷுட்டிங்கின் போது சிவாஜியே திணறிப் போய் விட்டாராம் – ஏன்னா நாகேஷின் வசனமும் பாடி லாங்வேஜும் அவரைச் சிரிக்க வைத்துவிட ரீடேக் போகவேண்டியதாயிற்றாம். எதற்கு ஆயிரம் பொற்காசுகள்? மன்னன் செண்பகப் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாட்டெழுதி வந்தால் பரிசு. என்ன சந்தேகம் என்று தெரிந்தால்தானே பதில் சொல்ல முடியும்? ஆனால் சந்தேகம் என்னதென்றே தெரியாமல் பரிசு வாங்க முயற்சி செய்தான் தருமி. கடைசியில் சந்தேகந்தான் என்ன? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா இல்லையா? அய்யோ பாவம் மன்னன் செண்பகப் பாண்டியன் இந்தக் காலத்தில் பிறந்திருந்தால் இந்த சந்தேகமே வந்திருக்காது. ட்ரெயினிலும் பஸ்ஸிலும் போகும்போது விரித்த கூந்தல் அடுத்தவரின் முகத்தில் நுழைந்து தொல்லை தருகிறதே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் பயணிக்கும் பெண்களின் பின்னால் பயணம் செய்திருந்தால் செண்பகப் பாண்டியனுக்கு இந்த சந்தேகமே வந்திருக்காது.
உங்கள் கூந்தல் வாசம் உங்கள் காதலருக்கோ அல்லது கணவனுக்கோ மட்டுமே பிடிக்கலாம், எல்லாருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, எல்லோரும் அதை நுகர வேண்டிய கட்டாயமும் இல்லை. கூந்தலை அள்ளி முடிந்துதான் வரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. யாராவது தப்பித் தவறி சொல்லிவிட்டால் உடனே அவன் ஆணாதிக்கவியாதி, பட்டிக்காடு, பெண் சுதந்திரம் என்ற பெயரில் குதறி எடுத்து விடுவார்கள். ஆனால் சுதந்திரத்தின் எல்லை தாண்டும்போது? அதாவது ஒருவனது சுதந்திரம் எதுவரை என்றால் அடுத்தவனது மூக்கு நுனி வரை என்று சொல்வார்கள். அப்படியிருக்க என் மூக்கு நுனியையும் தாண்டி மூக்கின் உள்ளேயும் நுழைந்து தொல்லைப் படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? நாகரீகம் சுதந்திரம் என்பதெல்லாம் ஒரு வரையறைக்குள்ளே இருக்க வேண்டும். உங்களது சுதந்திரம் என்னை தொல்லைப்படுத்தக் கூடாது என்பது முக்கியம். ஒரு பெரியவர், அய்யோ பாவம் மூக்கினுள்ளே கூந்தல் நுழைந்ததை எதிர்பார்க்கவில்லை. போட்டாரே பார்க்கலாம் ஒரு பயங்கர தும்மல். அசைய முடியாத கூட்டம். முன்னாலிருந்த பெண்ணின் மேலேயே தும்மி விட்டார். அவ்வளவுதான் அந்தப் பெரியவரைத் திட்டித் தீர்த்து விட்டார் அந்தப் பெண்மணி. கடைசியில் இன்னொரு பெண்தான் அந்தப் பெரியவருக்கு சப்போர்ட்டுக்கு வந்தார். ஏம்மா உன்னோட முடி அவரோட மூக்குல நுழைஞ்சா அவர் வேற எங்கே தும்முவாரு? கொஞ்சம் அடக்கமா கட்டிட்டு வரணும், இப்படிப் பொது எடத்துல விரிச்சு விட்டுக்கிட்டு அடுத்தவங்களுக்குத் தொந்தரவு குடுக்கறது சரியா? என்று அந்தப் பெண்மணி கேட்டவுடன் சண்டை பெரியவரிடமிருந்து பெண்களுக்குள் ஆரம்பித்து விட்டது. நீங்கள் எப்படித் தலை வார வேண்டும் என்பது உங்கள் உரிமை. ஆனால் என் மூக்கில் எது நுழைய வேண்டும் எது நுழையக் கூடாது என்று தீர்மானிப்பது என் உரிமை. அதை மீறி நுழைத்தால்? ஆகவே தயவு செய்து பின்னால் நிற்கும் ஆண்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் உங்களுக்கு ஆயிரம் பொன் பரிசு.
ஆண்டாள் காலத்திலே இந்தப் பிரச்சினை இல்லை போலிருக்கிறது. வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வதாலும் மணமுள்ள மலர்களைச் சூட்டிக் கொள்வதாலும் ஆயர்குலப் பெண்களின் கூந்தலுக்கு நிரந்தர மணம் இருந்திருக்கிறது போல.
ஆண்டாள் பாடுகிறாள் நப்பின்னையைப் பார்த்து. மதங்கொண்ட யானையையேத் தள்ளக் கூடிய பலம் பொருந்தியவர். எவரைக் கண்டும் அஞ்சாத தைரியம் கொண்டவர் நந்த கோபர். அத்தகைய ந்ந்தகோபரின் மருமகளே வாசனையான கூந்தலைக் கொண்டவளே சேவல்கள் ஒலியெழுப்புகின்றன குயிலினங்கள் கூவுகின்றன. இவையெல்லாம் உன் காதிலே விழவில்லையா? உன் கணவன் கண்ணனைப் போற்றிப் பாட வந்திருக்கிறோம் எழுந்திரு என்று பாடுகிறாள் ஆண்டாள்.
உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்;
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
#18மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்