
விரதம் இருப்பது என்பது பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள்
கடைப்பிடித்து வந்த வழக்கம். மாதம் இருமுறை விரதம் இருப்பது என்பது
சாதாரணம். கிருத்திகை, சஷ்டி முருகனுக்கு, சனிக்கிழமை பெருமாளுக்கு,
திங்கட்கிழமை சிவனுக்கு, வியாழக்கிழமை ஆஞ்சனேயருக்கு என
எப்படியாவது விரதம் இருப்பது என்பது நமக்கு மிகவும் தெரிந்த விஷயம்.
அதே மாதிரி குளிர்காலத்தில் உண்ட உணவு சீக்கிரம் செரிக்காது. நாம
பாட்டுக்கு மே மாசம் மாதிரியே மூக்கப் பிடிக்கத்தின்னா?
போதாக்குறைக்கு மார்கழி மாசம்பாத்து சின்னச் சின்ன கோவில்கள்லே
கூட பொங்கல் பிரசாதம் கிடைக்கும். ஸ்வாமி பிரசாதம்னா கேக்கணுமா?
ஆனா விரதம் இருந்தா இதயம் சீராகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது,
கொழுப்பு கரைகிறது, எடை குறைகிறது, உடம்பு ரொம்ப ஃபிட்டாகிறது.
இன்னும் என்னென்னவோ நடக்கிறது – எல்லாம் நல்லதுக்குத்தான்.
ஆனால் விரதமிருக்கிறேன் என்று பலகாரம் மட்டும் சாப்பிடலாம் என்று
நமக்கு நாமே சில விதிவிலக்குகள் ஏற்படுத்திக் கொண்டு, சாதம்தான்
சாப்பிடக்கூடாது, தோசை இட்லி பூரி சாப்பிடலாம் என்று ஒரு கட்டு
கட்டுவது விரதமல்ல. அத்துடன் விரதமிருக்கும் காலத்தில் நல்ல
விஷயங்களையே நினைக்க வேண்டும், பேச வேண்டும், செய்ய
வேண்டும்.
ஆண்டாள் தன் தோழிகளைப் பார்த்துப் பாடுகிறாள் விரதமிருக்கும்
காலத்தில் நெய் பால் முதலியவற்றை உண்ணக்கூடாது, காலையில்
எழுந்து நீராடுவோம், செய்யக் கூடாத காரியத்தையெல்லாம் செய்ய
மாட்டோம், கோள் சொல்ல மாட்டோம், தருமம் செய்வோம் என்று
விரதமிருக்க வேண்டிய அவசியத்தையும் விரதமிருக்க வேண்டிய
வழிமுறைகளையும் தோழிகளுக்குச் சொல்லுகிறாள்.
வையத்து வாழ்வீர்காள்!
நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ!
பாற்கடலுள் பையத்துயின்ற
பரமன் அடிபாடி,
நெய்உண்ணோம், பால்உண்ணோம்,
நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம்,
மலர்இட்டு நாம்முடியோம்,
செய்யாதன செய்யோம்,
தீக்குறளை சென்றுஓதோம்,
ஐயமும் பிச்சையும்
ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
#2மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்