
நிரந்தர நம்பர் 2 ஆக இருந்த நெடுஞ்செழியன் — தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தவர். அவர் ஒரு முறை மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார் — ஒண்ணு ரெண்டு பஸ் மட்டுமே வெச்சிருக்கவங்களெல்லாம் லட்சாதிபதியாக இருக்கும்போது இத்தனை ஆயிரம் பஸ் வெச்சிருக்க அரசாங்கம் ஏன் எப்பவுமே கடனிலே ஓடிட்டிருக்கு என்றார்.
யோசித்துப் பாருங்கள் – தனியார் பஸ்ஸில் சாதாரணமாக இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்கள். கூட்டம் அள்ளும், ஆனால் குறித்த நேரத்துக்குச் செல்லும். டயர் பஞ்சர் அல்லது வண்டியில் பழுது என்றால் உடனே ட்ரைவர் கண்டக்டர் என எல்லோரும் இறங்கி எப்படியாவது சரி செய்து வண்டியைக் கிளப்பி விடுவார்கள். சம்பளம் குறைவுதான் – அரசு சம்பளம் கிடைக்காது. ஆனால் மக்களுக்கு சேவையில் குறையிருக்காது. இவ்வளவு சம்பளம் கொடுப்பதுதான் அரசு நஷ்டத்தில் இயங்கக் காரணமா என்றால் கிடையாது.
பிறகு என்ன? பல காரணங்கள். தரமற்ற உதிரி பாகங்கள், பராமரிப்பில் அலட்சியம், பணிமனையில் ஊழியர் பற்றாக்குறை – யூனியன் தலையீடு, இப்படிப் பல காரணங்கள். இதெல்லாம் இன்று நேற்று தோன்றிய விஷயங்கள் இல்லை. பல வருடங்களாகத் தொடர்ந்து நடந்து வந்தது இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. யூனியன் பேரைச் சொல்லிக் கொண்டு வேலை செய்யாமல் இருக்கும் தொழிலாளர்கள் ஒருபுறம் என்றால் இதனைக் கண்டு கொள்ளாமல் தங்களது பாதையில் மாமூல் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதிகாரிகள், இதனைத் தலையிட்டுத் தட்டிக் கேட்காத அமைச்சர்கள், செலவுகளுக்கும் விலைவாசிக்கும் ஏற்ப டிக்கெட் விலை ஏற்றினால் உடனே போராட்டம் என்று குதிக்கும் உண்டி குலுக்கு டோலர்கள் மற்றும் பொறுப்பற்ற எதிர்க்கட்சிகள்.
தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்த வேண்டும், ஏறும் விலைவாசியை சமாளிக்க வேண்டும் – ஆனால் பஸ் கட்டணம் மட்டும் உயர்த்தப் படவே கூடாது என்றால் நஷ்டத்தை ஈடுகட்ட என்ன செய்ய வேண்டும் அரசு பணமா அச்சடிக்க முடியும்? கடன் வாங்கத்தான் வேண்டும், அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவு செய்யாமல் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும், அதுவும் இல்லையென்றால் டாஸ்மாக்கின் விற்பனை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்.
ஆனால் ஜப்பானில் வேலை நிறுத்தம் கிடையாது, ஆனால் அதற்குப் பதிலாக புதுமையாக ஒரு போராட்டம் நடத்துகிறார்கள் – அதாவது வழக்கமாக உற்பத்தி செய்வதை விடவும் அதிகமாக உற்பத்தி செய்வார்களாம். ஆனால் போராட்டம் இல்லாமலேயே ஆண்டாள் காலத்தில் ஆயர்பாடிப் பசுக்கள் ஏராளமான பாலை உற்பத்தி செய்யுமாம்.
ஆண்டாள் பாடுகிறாள் — நந்தகோபர் கணக்கில்லாத பசுக்களை வைத்திருக்கிறார். பால் கறக்க வந்தவர் பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் ஏமாற்றாமல் பாத்திரம் நிரம்பி வழிய வழியப் பாலைப் பொழியுமாம் பசுக்கள். அப்படிப்பட்ட பசுக்களை வைத்திருக்கும் நந்தகோபரின் மகனே எழுந்திரு. பகைவர்கள் உன் வலிமையைக் கண்டு உன் காலில் விழுந்து வணங்குகிறார்கள். ஆனால் நாங்கள் உன் மேல் உள்ள பக்தியினாலும் அன்பினாலும் உன் கால்களில் விழுந்து வணங்குகிறோம் என்று பாடுகிறாள் ஆண்டாள்.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே ! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
#21மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்