மன்மத லீலையை வென்றார் உண்டோ?”  எம் கே தியாகராஜ பாகவதர். ஒரு காலத்தில் இவர்தான் தமிழ்நாட்டின் ஒரே ஒரு கனவுக் கதாநாயகன். பாகவதர் கிராப் என்று அவரது சிகையலங்காரம் அந்தக் கால இளைஞர்களால் பின்பற்றப்பட்டு பெரியவர்களால் மழுங்க மொட்டையடிக்கப்பட்டு வந்ததாக இந்த காலப் பெரியவரின் தாத்தா சொன்னதாக கர்ண பரம்பரைக் கதை.  எம் கே டி என்று அன்பாக அழைக்கப்பட்ட அவர் தெருவில் நடந்து வந்தாரென்று தெரிந்தால் வீட்டுப் பெண்கள் ஓடோடி தெருவுக்கு வந்து விடுவார்களாம் அவரைப் பார்ப்பதற்கு. அந்தக் காலத்திலேயே அப்படி என்றால் பெண் சுதந்திரம் கொடி கட்டிக் பறக்கும் இந்தக் காலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. ஹ்ரிதிக் ரோஷன் – நினைவிருக்கிறதா?  சினிமாவில் நுழைவதற்கு முன்னர் இவர் இதே மும்பையின் தெருக்களில் நடமாடிக் கொண்டுதான் இருந்தார் – அப்படி ஒன்றும் பெண்கள் இவரை மொய்த்து விடவில்லை. ஒரே ஒரு சினிமாவில் நடித்தார் – அவ்வளவுதான் – தமிழ்நாட்டிலிருந்தெல்லாம் அவருக்கு ஈமெயில். இன்பாக்ஸே அடைத்து விட்டதாம். அவர் கனவில் வந்து தொல்லை செய்கிறார் என்று சொல்லாதவர்களே கிடையாது.  அடுத்தது வினய் — தமிழ் படத்தில் தலை காட்டியதும் இவரைக் கனவுக்கதாநாயகனாக்கியது தமிழ் இளைஞிகள் உலகம்.

 

எம் கே டி கடைசி காலத்தில் வறுமையில் வாடி இறந்தார்.  தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் வாரி வாரிக் கொடுத்தார்.  இவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு விழாவுக்கு இவரை அழைத்து ஒரு வெள்ளித்தட்டை பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.  இதனைப் புரிந்து கொண்ட எம் கே டி, அதனையும் நன்கொடையாகக் கொடுத்து விட்டார். ஹ்ரிதிக் ரோஷன் — வரிசையாக நாலு படம் ஊற்றிக் கொண்டதும். இப்போது யாரும் இவருக்கு ஈமெயிலும் அனுப்பவதில்லை. வினய் – அய்யோ பாவம் – வில்லனாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

 

இதெல்லாம் ஒரு ஷணப் பித்தம்.  ஒருவர் புகழின் உச்சியில் இருக்கும்போது அவரையே நினைத்து உருகுவதும், கொஞ்சம் கீழே இறங்கி வந்தால் உதாசீனப் படுத்துவதும் இந்தக் கலிகாலத்தின் நிகழ்வுகள். ஆனால் அந்தப் பரம்பொருள்? என்றைக்கும் சாஸ்வதமானவர், என்றைக்கும் அழகானவர்.  நாத்திக மாநாடு என்று சொல்லி விட்டு திருப்பதி ஏழுமலையானைத் திட்டி விட்டு வந்தவர் தனது வீட்டில் பூஜை நடந்த போது எங்கே சென்றிருந்தார் என்று தெரியவில்லை. குடும்பமே காளஹஸ்தியில் பூஜை செய்யும்போது எங்கிருந்தார் தெரியவில்லை. கடவுளுக்குப் பாதுகாப்பு தேவையில்லை, கடவுளிடம் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்குப் பாதுகாப்பு தேவை, கடவுளின் விக்ரகத்துக்குப் பாதுகாப்பு தேவை. என்ன செய்வது, பகுத்தறிவு மிகுந்து விட்டதால் கடவுள் சிலைகளையும் காணிக்கைகளையும் திருடத் துணிந்து விட்டார்களே நமது உடன்பிறப்புக்கள். அவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டாமா?

 

கடவுளின் அர்ச்சாவதார அழகே அழகு. எந்த பகுத்தறிவுவியாதியாவது அந்த அழகை எவனோ ஒருத்தனுக்கே கோடிகளுக்கு விற்று விட்டானென்றால்?   இதைத்தானே பொன்.மாணிக்கவேல் தோண்டித் தோண்டி கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்? அதனால்தான் பாதுகாப்பு. ஏன்னா திருடனுக்கே அருள் செய்து வழக்கிலிருந்து விடுவித்து விடுகிறார் பகவான்.  தெய்வம் நின்றுதான் கொல்லும் – எத்தனை வருடம் ஆனாலும் காத்திருக்கும். வெச்சி செய்யும்.

 

இப்படிக் கொடியவர்களுக்குக் கூட எதற்கு மன்னிப்பு? 

 

பகையைக் கொல்வதல்ல வீரம், மன்னித்து பகையை வெல்வதுதான் உண்மையான வீரம். ஆனால் இந்தக் காலத்தில் ஆண்களுக்கு வீரத்தை விடவும் சிகப்பழகுதான் தேவையானதாக இருக்கிறது.  அதனால்தான் ஆண்களுக்கென்றே தனியான சிகப்பழகு க்ரீம் மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால் கண்ணன் கார்மேக வண்ணனாயிற்றே? சிகப்புக்கும் அவனுக்கும் சம்மந்தமே கிடையாதே! ஆனாலும் அவன் அழகுக்கு ஈடு உண்டோ?

 

என்றும் மாறாத கண்ணனின் அழகையும் அவனது வீரத்தையும் பாடுகிறாள் ஆண்டாள்.

 

தன் காலடியால் மூன்று உலகத்தையும் அளந்தவனே…  கொடியவன் இராவணன் வாழும் இலங்கைக்கே சென்று அவனை முடித்தவனே…  சகடாசுரனை உதைத்து கொன்றவனே… கன்று வடிவெடுத்து வந்த அசுரனைக் கொன்றவனே.. கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களைக் காத்தவனே… உன் வீரத்தைப் புகழ்ந்து பாட வந்துள்ளோம் என்று பாடுகிறாள் ஆண்டாள்.

 

அன்று இவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி

கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,

குன்று குடையாய் எடுத்தாய்! குணம்போற்றி!

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றேன்று உன் சேவகமே ஏத்திப்பறை கொள்வான்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

 

#24மார்கழி2019-20  #ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.