
தமிழ் இருக்கே மிகவும் பழமையான மொழி. அதுலும் இந்தப் பழமொழிகள் இருக்கே அது ரொம்ப ரொம்ப அறிவார்ந்தது. பழமொழின்னா என்னன்னு தெரியலயா? அதாங்க நாயக் குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சாலும் அது வாலக் கொழச்சிக்கிட்டு —– திங்கப் போகும்னு வீட்ல பெரியவங்க சொல்லுவாங்களே இதெல்லாம்தான் பழமொழி.
அதை விடுங்க. மஹாபாரதத்துல துரியோதனனுக்கு எல்லாருமே கெட்டவங்களாத்தான் தெரிஞ்சாங்களாம். அது அவனோட சுழி.
கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் வைரமுத்து அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார். அதில் எவனோ ஒருவன் ஆண்டாள் ஒரு தாசி என்று எழுதினான் என்று மேற்கோள் காட்டி எழுதினார். ஆண்டாளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது இவர் கண்ணில் இது மட்டும்தான் பட்டிருக்கு. இந்த விஷயம் கொஞ்ச காலம் பிரச்சினை ஆகிப் பிறகு அமுங்கிப் போய்விட்டது. நமக்குத்தான் யார் நம்மைக் கழுவி ஊத்தினாலும் கொஞ்ச நேரத்திலேயே மறந்து விட்டு அவர்களைத் தூக்கி வைத்து துதி பாடுவது நமது பிறவி குணமாயிற்றே?
இதில் குணம் என்பது என்ன? பிறப்பால் வருவதா? இல்லவே இல்லை. வளர்ப்பால் வருவதுதான் குணம். இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் விலங்குகளுக்கு மூளை வளர்ச்சி என்பது கருவிலேயே நடக்கிறது. பிறக்கும் போதே வாழ்வதற்குத் தேவையான செய்திகள் யாவும் அதன் மூளையில் ஏற்றப்பட்டிருக்கும். பட்டை தீட்டுவது மட்டுமே பிறந்த பிறகு. ஆனால் மனிதனுக்கு அப்படியல்ல, வளரும் சூழ்நிலையே அவனது மனநிலையே நிர்ணயிக்கிறது. இந்தப் பகுத்தறிவியாதிகளும் தீராவிடங்களும் மட்டும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை அறிய வேண்டுமென்ற ஆவல் உள்ளவர்களுக்கு மட்டுமே இது.
கண்ணன் யார்? இன்றைக்கும் யாதவர்கள் தங்களது முன்னோராகக் கண்ணனைக் கருதுகின்றனர். ஆனால் கண்ணன் பிறந்தது வசுதேவருக்கும் தேவகிக்கும் அல்லவா? வசுதேவர் ஷத்ரியர் அல்லவா? பிறகு எப்படி கண்ணன் யாதவன் ஆகிறான்? ஏனென்றால் கண்ணனை வளர்த்தது யது குலத்தைச் சேர்ந்த நந்தகோபன் அல்லவா? இப்போது புரிகிறதா குலமோ குணமோ வளர்ப்பாலும் தொழிலாலுமேயன்றி பிறப்பால் அல்ல என்று.
தேவகியின் மகனாகப் பிறந்த கண்ணா. நீ பிறந்த இரவே யசோதைக்கு மகனா மாறினாய். கம்சனுக்குப் பயந்து உன் பிறப்பும் வளர்ப்பும் மறைக்கப்பட்டது. ஆனாலும் உனக்குப் பயந்த கம்சன் உன்னைக் கொல்ல எத்தனித்தான். அத்தகைய கொடியவன் கம்சனுக்கு நெருப்பாக வந்தவனே உன்னை வாழ்த்திப் பாடுகிறோம் என்று பாடுகிறாள் ஆண்டாள்.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலானகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே? உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருகி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
#25மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்