
“மாதொருபாகன்” நினைவிருக்கிறதா? பெருமாள் முருகன் என்ற ஒரு அறிவுஜீவி எழுதிய கதை. கதை என்று நாம் சொல்கிறோம், ஆனால் இதை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்றுதான் அவர் ஆரம்பித்தார். இதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு வழக்கம் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதாவது குழந்தை இல்லாத பெண்கள் வருடத்தில் ஒரு நாள் அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருவிழாவின் போது தங்களைப் பொதுவில் வைப்பார்களாம், அப்போது யார் வேண்டுமானாலும் அவர்களுடன் உறவு கொள்ளலாமாம். அப்படி உண்டாகும் குழந்தையை கடவுளின் குழந்தை என்று சொல்வார்களாம். இது ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துவது என்பதை விட மொத்தத்தில் பெண்களை இழிவுபடுத்துகிற விஷயம். ஆனால் இதில் என்ன தவறு என்று வாதிட்டது முற்போக்குவியாதி கும்பல். இதில் விஷமத்தனம் என்னவென்றால் அப்படி உறவு கொண்டு குழந்தை கொடுக்கும் ஆண்கள் தலித்துகள் என்று போகும் கதை. இதனால் தலித்துகளுக்கும் பிற சாதியினருக்கும் பகை மூட்டியது இந்த விஷம்.
இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து வந்த புத்தகக் கண்காட்சியில் ஒரு அரங்கத்தில் ஒரு பெரிய பலகை வைத்திருந்தார்கள். அதில் சிலர் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தனர். என்னையும் அந்த அரங்கத்தில் இருந்தவர் கையொப்பம் இடச் சொன்னார். எதற்கு என்று கேட்டேன். பெருமாள் முருகனுக்கு ஆதரவாக என்று சொல்லி என் கையில் பேனாவைத் தந்தார். அதை அவரிடமே திருப்பித் தந்து விட்டு சொன்னேன் “ கடவுளின் குழந்தைகள் மட்டுமே அவருக்கு ஆதரவாகக் கையொப்பம் இடுவார்கள். மன்னிக்கவும், நான் கடவுளின் குழந்தை அல்ல”. இதைக் கேட்டதும் எனக்கு முன்னே நின்று கொண்டு கையெழுத்திட்டவர் அவசர அவசரமாக் அதை அழித்து விட்டுச் சென்று விட்டார்.
இந்தக் கேவலமான கதைக்கு மன்னிப்புக் கேட்க பல மாதங்களானது பெருமாள் முருகனுக்கு.
பன்னாடை என்று கிராமத்தில் சொல்லுவார்கள். பனை மரத்திலிருந்து கிடைக்கும் ஒரு பொருள் அது. அதன் குணம் என்னவென்றால் நல்லதையெல்லாம் விட்டுவிட்டு கசடுகள் அழுக்குகளை மட்டும் தன்னகத்தே வைத்துக் கொள்ளும்.
கவர்னரைப் பற்றி அசிங்கமாக எழுதி விட்டு கவர்னரின் புகழைக் கெடுத்து அவரைப் பற்றி அவதூறு பரப்பிய நக்கீரன் இப்போது கீழிறங்கி வந்து வருத்தம் தெரிவித்திருக்கிறது. திடீரென்று மன்னிப்பு கேட்டதற்குக் காரணம் என்ன? இதற்கு ஹிந்து ராம் இடையில் இருந்து சமரசம் செய்து வைத்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. என்ன திடீரென்று மன்னிப்பு? பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு மிரண்ட துரியோதனன் போல இன்று நக்கீரன் மிரண்டு போனதற்குக் காரணம் என்ன? ஒருவேளை நக்கீரனும் சங்கொலி கேட்சு மிரண்டிருப்பாரோ? சங்கொலி என்பதைத் தமிழ் இலக்கணப்படி சங்க + ஒலி என்றும் பிரிக்கலாம். எந்த சங்கமாயிருக்கும்? சங்கொலித்தது யாராயிருக்கும்? ஒருவேளை சந்தானபாரதி சங்கொலித்திருப்பாரோ? இந்த சங்கு எப்போதோ நமக்குக் கிடைத்திருந்தால் இன்று பல கேவலமான ஜந்துக்களுக்கும் நம்மைப் பழித்துப் பேசவும் உண்மைக்கு மாறாக உளறவும் தைரியம் வந்திருக்குமா?
ஆண்டாளும் இதைத்தான் கேட்கிறாள். பிரளய காலத்தில் ஆலிலையின் மேல் துயில் கொண்டு இந்த அகிலத்தைக் காத்தவனே! அடியார் மீது மிக்க அன்பும் கருணையும் கொண்டவனே! நோன்புக்குத் தேவையானவை என்னவென்று கேட்பாயாகில் கூறுகிறேன் கேள்! ஒலித்தவுடனே அகில உலகத்தையும் நடுங்கச் செய்ய வல்ல பாஞ்சஜன்யம் என்ற உனது சங்கு வேண்டும். பாலைப் போன்ற வெண்மையான சங்கு வேண்டும். முழங்குகின்ற பறைகள் வேண்டும். கொடிகள் வேண்டும் என்று பாடுகிறாள் ஆண்டாள்.
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
#26மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்