
நேற்று வரைக்கும் ஒருவரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு விட்டு திடீரென்று இன்றைக்கு இன்னொருவரைத் தலைவன் என்று கொண்டாடுவது சரியா? மறுபடியும் நாளைக்கே பழைய தலைவனைத் தேடிப் போய்ச் சேர்வது சரியா? என்ன வெட்கங்கெட்ட விளையாட்டு இது? ஆனால் இதையும் மக்கள் அங்கீகரிக்கிறார்களே? அதுதான் கொடுமை.
நீ இங்கே இருந்தால் எனக்கே ஆபத்து என்று தலைவர் ஒருவரை வெளியேற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி வெளியே போனவன் மீண்டும் அந்தத் தலைவனோடு சேரலாமா? நீ என்னைக் கொலை செய்யப் பார்த்தாய் என்று பழி சொன்ன பிறகும் அவனோடு போய் சேர்ந்தால் தலைவனுக்கும் வெட்கமில்லை, தொண்டனுக்கும் வெட்கமில்லை என்றுதான் அர்த்தம். ஆனால் இந்தத் தலைவனையும் தொண்டனையும் கொண்டாடும் மக்களுக்கு எதுவுமே இல்லை என்பதுதான் அதனினும் கொடுமை.
இப்படி மாறிக் கொண்டே இருந்தாலும் மக்கள் ஆதரவு மட்டும் மாறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? மக்களின் அறியாமை என்று தோன்றும். மக்கள் திருந்தினால் இவர்களுக்கு ஆதரவு குறையும் என்று நினைக்கலாம். ஆனால் அதல்ல உண்மை.
தலைவன் ஒழுங்கானவனாக இருந்தால் இவர்கள் ஏன் மாறுகிறார்கள்? மறுபடியும் காந்திக்கே வருவோம். காந்தியைத் தலைவராக ஏற்ற எவராவது அவரை விட்டு நீங்கினார்களா? இல்லேயே. ஏன்? இன்றைக்கு ஒழுங்கானவன் எவன் என்று காட்டு என்னும் கையறு நிலை. இதுல இங்கே இருந்தா என்ன அங்கே இருந்தா என்ன. எல்லாம் ஒரே சாக்கடைதான் என்ற மனநிலையில் எல்லாமே சாத்தியமாகி விடுகிறது.
அப்போ இதற்கெல்லாம் என்னதான் வழி? சுலபமான வழி. ஜெயிக்கறவனே என் தலைவன் என்பதற்குப் பதிலாக என் தலைவன் ஜெயிக்கணும்னு எல்லாரும் — எல்லாரும் – நினைக்க வேண்டும். அப்படியே ஒரு நல்லவனைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நல்லவர்களுக்கு மட்டுமே வாழ்வு என்பதை நிரூபித்துக் காட்டினால் அப்புறம் கெட்டவர்களெல்லாம் ஓடி ஒளிய வேண்டியதுதானே? செய்வீர்களா? செய்வீர்களா?
ஆண்டாள் அப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற தலைவனைப் பற்றித்தான் பாடுகிறாள். அழகான விடியற்காலைப் பொழுதில் எழுந்து உன்னை வணங்க வந்தோம் கண்ணா. பசுக்களைக் கொண்டு ஜீவனம் நடத்தும் எங்கள் குலத்தில் வந்துதித்தாய். கேட்டது கிடைத்தவுடன் உன்னை விட்டு விலகும் கூட்டம் நாங்களில்லை. ஏழேழு பிறவிக்கும் நீயே எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்று கண்ணனை வேண்டுகிறாள் ஆண்டாள்.
சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
#29மார்கழி201718 #ஸ்ரீஅருண்குமார்