
1983 உலகக்கோப்பை கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டங்கள் எல்லாமே இப்படியும் அப்படியுமாக மாறிமாறி வந்தன. திடீரென்று ஆஸ்திரேலியாவிடம் 162 ரன்களில் தோற்ற இந்தியா, மறுபடியும் ஆஸ்திரேலிய அணியை 118 ரன் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அப்போதைய பலமான அணியாக இருந்தது. ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்னார் இந்தியஅணி வெஸ்ட் இண்டீஸை வென்றது. இதையெல்லாம் ஒரு ஃப்ளூக் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று ஒருவரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
ஆனால் ஒரே ஒரு மனிதன் நம்பினான். அவன்தான் கபில்தேவ். அந்த தனிமனிதனின் சாதனையால்தான் இந்தியா ஜிம்பாப்வே அணியை வென்றது. அதனால்தான் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் இந்தியாவும். வெஸ்ட் இண்டீஸ் டீமில் ரிச்சர்ட்ஸ், ராபர்ட்ஸ், ஹோல்டிங், மார்ஷல், கோம்ஸ் என்று ஜாம்பவான்கள். இந்திய அணியில் அப்படிப்பட்ட புகழ் பெற்ற ஆட்டக்காரர்கள் ஒருவரும் இல்லை. போதாக்குறைக்கு டாஸ் வென்ற இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 183தான். இந்திய வீரர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது கபில்தேவ்தான். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. யாரென்று தெரியாமல் இருந்த இந்திய அணி வாமனன் மாதிரி வந்து கோப்பையை வென்றது.
ஆண்டாள் பாடுகிறாள் மூன்று உலகத்தையும் தனது காலால் அளந்த அந்த உத்தமனின் பேரைப்பாடி நாம் நோன்பு நூற்று நீராடினால் மாதம் மும்மாரி பொழிய நாடு செழிக்கும். எல்லா செல்வங்களும் நிறைந்திருக்கும். இந்த நம்பிக்கை நமக்கும் இருந்தால் எல்லா செல்வங்களும் உண்டாகும்.
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடுஎல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெறும் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்தமுலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்:
நீங்காதசெல்வம்நிறைந்து — ஏலோர்எம்பாவாய்.
#3மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்