காதலிக்கறவங்களைக் கேட்டுப் பாருங்க எதுக்கு காதலிக்கிறீங்கன்னு? பட்டுனு பதில் வரும் – இதென்ன கேள்வி?  கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கறதுக்காக. ஆனா இன்னைக்கு கல்யாணம் பண்ணிட்டுன்னு சொல்றது கொறைஞ்சிட்டு வருது.  சேந்து சந்தோஷமா இருக்கறதுக்கு, அப்புறம் அதுவும் மாறி சந்தோஷமா இருக்கறதுக்கு அப்டீன்னு வரலாம். அதை விடுங்க, காதலிக்கும்போது ஒருத்தருக்கொருத்தர் கிஃப்ட் வாங்கிக் குடுக்கறதும், சர்ப்ரைஸ் குடுக்கறதும், ஒரே ஜாலியா இருக்கும்.  ஆனா கல்யாணம் ஆன பிறகு இதெல்லாம் குறைந்து கொண்டே போகிறதே ஏன்? கல்யாணம் ஆகி நாலஞ்சு வருஷம் ஆனதும் – அது வரைக்கும் குடும்ப கோர்ட் போகாம இருந்தா — ரெண்டுபேருக்கும் நடுவிலே ஒரு பெரிய விரிசல் பல தம்பதிகளிடையே. காரணம்? அவர் என்னோட பேசறதே இல்லை, என் மேலே அக்கறை காட்டறதே இல்லை – இதுதான் ரெண்டு பேரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்வது.  ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வதில்லையே தவிர மொபைலில் மணிக்கணக்கில் பிறருடன் பேசுவதும் வாட்ஸப்புவதும் தொடர்கிறது. இது விரிசலை இன்னமும் அதிகமாக்குகிறது. இப்போதெல்லாம் திருமணத்தை மீறிய உறவு என்பது கொஞ்சம் கொஞ்சமாக சாதாரணமாகி வருகிறது. இதற்கு இன்னொரு காரணம் திரைப்படங்கள். சமூகத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று ஒரு புறம் வாதம்.   நல்ல படத்தைப் பார்த்து திருந்தாத மக்கள் இந்தப் படங்களைப் பார்த்துக் கெட்டுப் போனால் நாங்கள் பொறுப்பல்ல என்று இன்னொரு பக்கம் பொறுப்புத் துறப்பு. ஒரு விஷயம் கவனிச்சுப் பாருங்க. பிள்ளைகள் முன்னால் கெட்ட பழக்கங்களைத்தான் தவிர்ப்பார்கள் பெற்றோர்கள் – ஏனென்றால் கெட்ட பழக்கங்கள்தான் பழகுவதற்கு சுலபமானது. நல்ல பழக்கங்களைப் பழகுவதற்கு நிறைய பொறுமை தேவை, நாட்களும் அதிகமாகும்.  

 

இப்போ நீங்களே பாருங்களேன் மார்கழி மாதம் 30 நாளும் தவறாமல் தினமொரு பாசுரத்துக்கு எதையோ மனதில் தோன்றிய ஒன்றை எழுதி வந்தேன்.  எப்படியோ நீங்களும் இதை சகித்துக் கொண்டு படித்து வந்தீர்கள். நாளைக்கு தை முதல் நாள். மார்கழி இன்றோடு முடியப்போகிறதே? ஆகவே பாசுரமும் விளக்கமும் கிடையாது.  காலையில் எழுந்ததும் வழக்கம்போல வாட்ஸப்பைத் தேடி இன்று ஒன்றும் இல்லை என்று காணும்போதுதான் தெரியும். ஆனால் அத்தோடு விட்டு விடாதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ காலையில் கொஞ்சம் சீக்கிரமாகவே இந்தப் பாசுரம் உங்கள் வாட்ஸப்பில் நுழைந்து டொய்ங்க் என்று நோட்டிஃபிகேஷன் சவுண்டைக் கொடுத்திருக்கும்.  அதை அப்படியே பிடித்துக் கொண்டு காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்வோம். முதல் பாசுரத்தில் சொன்னது போலத்தான், இந்தக் குளிர் காலம் அதிகாலையில் எழுந்து கொள்வதை எளிதாக்கும். அப்புறம் கொஞ்சம் வாட்ஸப்பை விட்டு வெளியே வந்து புத்தகங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றைப் படிக்கும் வழக்கத்தை மீட்டெடுங்கள்.  ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்றவற்றில் எவ்வாறு பொய்ச்செய்திகள் நுழைந்து ஆக்ரமித்து விட்டதோ அது போலவே செய்தி சேனல்களும் ஒருபட்சமாகவே நிகழ்ச்சிகளை வெளியிடுகின்றன பெரும்பாலும். பத்திரிக்கைகளில் படிக்கும்போது உங்கள் மூளை அவற்றை அசை போட நேரம் கிடைக்கிறது, கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பொய்த்தகவல்களை அப்படியே நம்பாமல் அலசிப் பார்க்க முடியும்.  அது போலப் புத்தகங்களும். புத்தகங்கள் நம் கற்பனையை வளர்க்கும். கற்பனை இல்லாத மனிதன் ஒரு ரோபோவுக்கு சமம். மனிதர்களாகவே வாழலாமே? புத்தகம் படிக்கச் சொல்வதின் பின்னால் இன்னொரு விஷயமும் இருக்கிறது. இந்த மார்கழிப் பதிவுகள் புத்தகமாக வரப்போகிறது. படிக்கிற பழக்கம் வளர்ந்தால்தானே உங்களை நம்பி புத்தகம் போட முடியும்? அதானால்தான்.

 

இத்தனை நாட்களாக மார்கழிப் பதிவுகளையும் பாசுரங்களையும் தொடர்ந்து படித்து வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நாளை தை முதல் நாள்.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை முதல் நாளன்று சூரியன் உத்திராயணத்தில் புகுகிறான். இதனைப் புண்ணிய காலம் என்பார்கள் முன்னோர்கள். பீஷ்மர் கூட இந்த உத்திராயண புண்ணிய காலத்துக்காகத்தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தார் போர்க்களத்தில்.  உத்திராயணத்திற்கு என்ன சிறப்பு? சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் வேளையில் கிளம்பினால் பயணம் சுலபமாயிருக்குமா? அப்படியென்ன பயணம்? எங்கே போகிறோம்? இஸ்ரோ விஞ்ஞானிகள் பேசுவது மாதிரி இருக்கா? அடுத்த தொடர் இதுவரை நாம் அறியாத அறிவியல் பற்றியும் நாளை என்ன நடக்கப் போகிறது என்பது பற்றியுமான ஒரு நெடுந்தொடர்.  தொடர்வோம் நம் பயணத்தை.

 

பாற்கடலைக் கடைந்த மாதவனை கேசவனை  நிலவு போன்ற முகத்தைக் கொண்ட அழகிய பெண்கள் சிரமம் பாராமல் தினமும் அதிகாலையில் எழுந்து கண்ணனை தரிசித்து இந்த முப்பது நாளும் பாவை நோன்பிருந்து பெற்ற பயனைப் பெரியாழ்வாரின் மகளாகிய ஆண்டாள் முப்பது பாசுரங்களில் பூமாலையாகத் தொடுத்திருக்கிறாள்.  இதனைப் படிப்பவர்கள் அந்த திருமாலின் ஆசீர்வாதத்துடன் எங்கிருந்தாலும் சுபிட்சமாக இருப்பார்கள்..

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

#30மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.