
“மந்திரி, மாதம் மும்மாரி பொழிகிறதா’ வழக்கமாக அரசன் மந்திரியைப் பார்த்து கேட்பதாக கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். அந்த காலத்துல மாசத்துல மூணு தடவை மழை பெஞ்சிருக்கும் னுநினைக்கறேன், இப்போல்லாம் வருஷத்துக்கு மூணு மழை பெய்யறதே பெரிய விஷயமாயிருக்கு.
சமீப காலமாக, குறிப்பாக திரு.ரமணன் வந்த பிறகு புதுசா ஒரு வார்த்தையைக்
கேள்விப்பட்டோம். “வெப்பசலனம்” காரணமாக மழை பெய்ததுன்னு சொல்லுவார்.
அதென்னங்க வெப்பசலனம்? அதுக்கு மழை எப்படிப் பெய்யுதுன்னு தெரிஞ்சுக்க்கணும். ஆறு, குளங்கள், கடல் இவற்றிலுள்ள நீர் ஆவியாகி மேகமாகி குறிப்பிட்ட வரையறைக்குள் வரும்போது மழையாகப் பொழிகிறது. இப்போ புவிவெப்பமயமாதல் பத்தி எல்லாம் பேசறாங்க. யோசிச்சுப் பாருங்க, வெப்பம் அதிகமானா தண்ணியெல்லாம் வத்திப்போயி உலகமே பாலைவனமாயிடுமில்லையா? இல்லை. வெப்பம் அதிகமாவதால் உலகமே தண்ணீரில் மூழ்கிவிடுமாம். எப்படி? வெப்பம் அதிகமாவதால் கடலிலுள்ள நீர் அதிகளவில் ஆவியாகிறது. கடல்மட்டத்துக்கும் நிலத்துக்குமுள்ள வெப்பநிலை வித்யாசம் புயல்களை உருவாக்குகிறது. இதனால் முன்பைவிட அதிகமாக மழை பொழியும், வெள்ளம் ஏற்படும். ஆக மொத்தத்தில் வெப்பம் அதிகமானால் தண்ணியிலே உலகம் மூழ்கிவிடும் – ஏற்கெனவே மூழ்கியிருக்கற டாஸ்மாக் தண்ணியை சொல்லலை. இதைத் தள்ளிப்போட என்ன செய்யணும்? வேற ஒண்ணுமில்லே, கையிலே எப்பவும் ஒரு துணிப்பையை எடுத்துட்டுப் போங்க. பாலிதின் பைக்களை உபயோகிக்காதீர்கள். செய்வீர்களா? செய்வீர்களா?
இந்த மழை பொழியும் விதத்தைத்தான் ஆண்டாள் பாடுகிறாள். (ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படித்தாரா என்று எந்த மண்டூகமாவது கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும் என்பதால் நான் அதை சொல்லப் போவதில்லை)
வருணதேவா, நீ ஒளிக்காமல் மறைக்காமல் கடலில் உள்ள நீரை முகர்ந்து வானத்திலே ஏறி அந்த பகவானின் உடல்போல கருநிற மேகமாகி, பகவானது கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து, அவனது இன்னொரு கையில் உள்ள சங்கு போல முழங்கி வில்லிலிருந்து ஏவிய பாணங்கள் போல மழை பொழிந்து மக்களைக் காப்பாயாக.
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீகைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி,
ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழஉலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
#4மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்