
மதுரை– அதாங்க நம்ம தளபதி இருக்கற ஊரு – அட நம்ம இளைய தளபதி முருகன் திருப்பரங்குன்றத்துல இருக்காருல்ல, அதச் சொன்னேன், அது மிகமிகப் பழமையான ஒரு நகரமாகக் கருதப்படுகிறது. அறிவியல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவனைத் தொழுகின்றோம். அதென்ன தெந்நாடுடைய சிவனே? சொல்லப் போனா சிவன் இருப்பது திருக்கயிலாயத்தில், அதாவது பாரதத்தின் வடகோடியில். ஏன் தெரியுமா அவரைத் தெந்நாடுடைய என்று போற்றுகிறோம், ஏன்னா அவர் பெண்ணெடுத்தது மதுரையிலே அல்லவா? அதனால தெந்நாட்டின் மாப்பிள்ளையை அப்படி மரியாதையாக அழைக்கிறோம்.
அது போகட்டும் அந்த நாராயணின் திருஅவதாரங்களில் எல்லோருக்கும் பிடித்தமானதான ராமராகட்டும், கிருஷ்ணராகட்டும் வடக்கேதான். ராமர் ஏதோ தமிழ்நாட்டு வழியாக நடந்து போயிருக்கிறார், இங்கேயிருந்துதான் இலங்கைக்குப் போய் யுத்தம் செய்திருக்கிறார் .கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் இருந்துதான் ஹனுமனைக் கண்டடைகிறார். ஆனாலும் வெற்றி பெற்ற பிறகு அயோத்திக்குத்தானே சென்றுவிட்டார். கிருஷ்ணரோ கேட்கவே வேண்டாம். முழுக்க முழுக்க வடக்கு. அதனால்தோனோ என்னவோ சிவன் அவரது திருவிளையாடல்களை எல்லாம் தெற்கிலே, அதிலும் குறிப்பாக தனது மாமியார் ஊரான மதுரையிலே வைத்து அரங்கேற்றினார்.
அதுமட்டுமா? வடக்கிலும் மதுரா என்று ஒரு ஊர் இருக்கிறது. ஆனால் நம் மதுரைதான் பழமையானது என்பது உறுதி. எப்படி சொல்றேன்னு கேக்கறீங்களா? ஒரு சின்ன உதாரணம். சென்னையில் வடபழனி இருக்கு. அது ஏன் வடபழனி? ஏன்னா தெற்கே பழனி என்றொரு ஊர் இருக்கு. அது பழமையான ஊர், அதற்கப்புறம் வந்த பழனி இது ஆதலால் இது வடபழனி. அதுமாதிரிதாங்க மதுரைதான் பழமையானது, வடக்கிலே இருக்க மதுராவை அதனால்தான் வடமதுரை என்று பாடுகிறாள் ஆண்டாள்.
வடமதுரையில் பிறந்த மாயக்கண்ணனை, யமுனை நதிக்கரையில் இருப்பவனை, இடையர் குலத்தில் பிறந்த அவனை மலர்கள்தூவி வாயாரப்பாடி மனமாரத்துதித்தால் நமது பாவங்களையெல்லாம் போக்கியருள்வான் என்று பாடுகிறாள் ஆண்டாள்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூயபெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர்குலத்தினில் தோன்றும் அணி – விளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால்பாடி, மனத்தினால் சிந்திக்க,
போயபிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பு — ஏலோர்எம்பாவாய்.
#5மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்