
பாட்டு வாத்தியார் — ரொம்ப பரிச்சயமான ஒரு வார்த்தை. அந்த கால சினிமாவிலேர்ந்து கதைகள் வரைக்கும் பாட்டுன்னா ஆம்பிளை வாத்தியார்தான். ஏனுங்க? சரி, இந்த பாட்டு எப்படி மனுஷ ஜாதி கத்துக்கிட்டது தெரியுமா? உடனே நீங்க பதில் சொல்லிடுவீங்க – பறவைகள்கிட்டேர்ந்துன்னு. சரி, இந்த உலகத்திலே எத்தனை பறவையினங்கள் இருக்கு தெரியுமா? சுமார் 9000 வகைகள் இருக்காம். அதிலே பாதி, அதாவது கிட்டத்தட்ட 4500 பறவையினங்கள் பாடுமாம். காக்கா எந்த பாதியிலே வரும்னு தெரியலை.
சரி, மீன்குஞ்சுக்கு நீந்தக் கத்துக் குடுக்கணுமான்னு கேக்கறா மாதிரி பறவைகளுக்கு பாட கத்துக் குடுக்கணுமான்னு கேக்காதீங்க. எந்தப் பறவையும் முட்டையிலேர்ந்து வெளியே வந்தவுடனே பாட ஆரம்பிக்காதாம். பெரிய பறவைகள் பாடும்போது அதைப் பார்த்து அதற்கப்புறம்தான் பாட ஆரம்பிக்குமாம். அது மட்டுமல்ல, நமக்கென்னவோ குயில் கூவுவது ஒரே மாதிரித்தான் தோணும். ஆனா அதிலே ஏராளமான அர்த்தங்கள் இருக்கு. ஒரு குயில் தனது ஜோடியிடம் சொல்லித்தாம் – ‘’இதப்பாரு இந்த மனுஷப் பயலுவ கூவறது எல்லாமே ஒரேமாதிரித்தான் இருக்கும். ஆனா அதுலே ஏராளமான வித்யாசம் இருக்கும்’’. சில பறவைகள் டூயட் மாதிரி இருகுரலில் கூடப்பாடுமாம்.
பறவைகளின் பாட்டு அவற்றின் நெஞ்சுப்பகுதியில் இருந்து எழுவதால் வாயில் இரை இருந்தாலும் அவை பாடும். பாடிக் கொண்டிருக்கும்போதே நடுவில் குரலை மாற்றும் சக்தியும் சில பறவைகளுக்கு உண்டாம். நம்ம ஊரு காக்காதாங்க. எப்பவும் ஒரே குரல். எல்லாம் சரிதான், பாட்டு வாத்தியாருக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா? வரேன். பறவைகள் பிறந்தவுடன் பாட்டு கத்துக்கறது யார்கிட்டே தெரியுமா? அவங்க அப்பா பறவைகிட்டேர்ந்துதானாம். அப்புறமா பிற ஆண் பறவைகளிடமிருந்துமாம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை? பறவைகளிடம்கூட பாட்டுவாத்தியார் ஆண்கள்தானாம்.
ஆண்டாளும் இந்தப் பறவைகளின் பாடலைக் கேட்டுத்தான் எழுந்திருக்கிறாள் போல. ஆண்டாள் தனது தோழிகளை அழைக்கிறாள்
பறவைகள் பாடத் தொடங்கி விட்டன. கருடன் மேல் ஏறிப் பறந்துவரும் அந்த பகவானின் கோவிலில் பெரிய சங்கொலி ஒலிப்பதைக் கேட்கவில்லையா? பூதனையின் முலையில் பாலருந்தி அவளைக் கொன்றவனும் சகடாசுரனை காலால் உதைத்துக் கொன்றவனும் பாற்கடலில் பாம்பின்மேல் துயில் கொண்டவனுமான அந்த நாராயணனை முனிவர்களும் யோகிகளும் அரி என்று வணங்கும் குரல் கேட்டு உள்ளம் குளிர்ந்து வாருங்கள்.
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.
#6மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்