
கம்பராமாயணத்தை எழுதினாரே ஒருத்தர்– சேக்கிழாரா? இல்லையா? யாரு.. கம்பரா? ஆச்சரியமாயிருக்கே…. சரி…. அவருக்கும் சோழனின் அரசவையில் இருந்த ஒட்டக்கூத்தருக்கும் எப்போதுமே ஆகாது. ரெண்டு பேரும் ரெண்டு கோஷ்டி – ஆனா ஒண்ணா இருக்கும் போது சிரிச்சிட்டே இருப்பாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள்போல. மறுபடியும் சொல்றேன் இதுல உள்குத்தெல்லாம் இல்லே. ஒருநாள் ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி. கம்பர் ஒருமுறை துமி என்ற வார்த்தையை ஒரு செய்யுளில் பயன்படுத்திவிட்டார். துமி என்றால் எ ன்ன என்று சபையிலே வைத்து ஒட்டக்கூத்தர் கேட்க, அது மிகமிகச் சிறிதானது, துளியைவிடச் சிறியது என்றார் கம்பர். இதை ஒட்டக்கூத்தர் ஒத்துக்கொள்ளவில்லை. இது மாதிரி வார்த்தை புழக்கத்திலேயே கிடையாது, நீங்கள் சொற்பிழையோடு எழுதிவிட்டீர்கள் என்று குற்றம் சாட்டினார். துமி என்ற வார்த்தை இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் கம்பருக்கு. உடனே இருவரும் தேசாந்திரம் புறப்பட்டார்கள் – எங்கேயாவது துமி என்ற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறதா என்று பார்க்க.
அப்படியான பொழுது ஒருநாள் நல்ல வெய்யிலில் சோர்வாக ஒரு வீட்டின் திண்ணையில் இருவரும் அமர்ந்தார்கள். உள்ளே தயிர் கடையும் சத்தம் கேட்டது. அது ஆயர் குலத்தினரின் வீடு. ஆகவே பாலுக்கும் தயிருக்கும் பஞ்சமில்லை. ஆயர்குலப்பெண் உட்கார்ந்து மத்தால் தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள். அவளது சின்னக் குழந்தை அவளருமே உட்கார்ந்து அம்மா தயிர் கடைவதைப் பார்த்துக் கொண்டிருந்தது. குழந்தையைத் தூரப் போகும்படி அம்மா அதட்டினாள், ஆனால் குழந்தையோ கேட்பதாயில்லை.
அவள் ஏன் குழந்தையை விலகிப் போக சொல்லவேண்டும்? ஒருவேளை குழந்தை தயிரையோ அல்லது வெண்ணெயையோ தின்றுவிடும் என்றா? இருக்காது. ஏனென்றால் அந்தக்காலத்தில் வெறும் ஏ2 பால்தான். அதனை விற்று சௌக்யமாக இருந்தார்கள் ஆயர்கள். வளத்துக்குப் பஞ்சமில்லை. ஆகவே குழந்தை ஒருகை வெண்ணெயை எடுத்துத் தின்றால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. அப்புறம் என்ன?
அடுத்த சில நிமிடங்களில் விடை தெரிந்து விட்டது– ‘’தள்ளிப்போ குழந்தாய், இல்லையென்றால் உன்மீது துமி தெரிக்கும்” என்றாள் ஆயர்குல மங்கை. இதனைக் கேட்டதும் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்த இருவருக்கும் இரு வேறுவிதமான உணர்ச்சிகள். கம்பருக்கு சந்தோஷம், ஒட்டக்கூத்தருக்கு அவமானம். இருந்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் கம்பர் தன்னுடன் ஒட்டக்கூத்தரையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணிடம் “அம்மா துமி தெரிக்கும் என்று சொன்னாயே. அப்படியென்றால் என்ன” என்று வினவினார். அதற்கு அந்தப்பெண் ‘’ஐயா, தயிரைக் கடையும்போது அதிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அளவில் தயிர்தெறிக்கும். அதுதான் துமி” என்றாள். உடனே ஒட்டக்கூத்தர் “தயிர்த்துளி தெறிக்கும் என்பதுதானே சரி?” என்றார். அந்தப் பெண் சிரித்துக் கொண்டே “யாரய்யா நீர்? தமிழ் அறியாதவரோ? துமி என்பது துளியைவிட மிகச்சிறியது. பல துமிகள் ஒன்று சேர்ந்தால்தான் ஒருதுளிஉருவாகும்” என்றாள். ஒருவழியாக கம்பர் தனது தரப்பை நிரூபித்துவிட்டார். ஆனால் இன்றைக்கும் துமி என்ற வார்த்தை ஒருவரும் அறியாத உபயோகிக்காத வார்த்தையாகவே இருக்கிறது. இதுமட்டுமா? இன்னும் பல வார்த்தைகள் அழிந்துகொண்டே வருகின்றன.
இப்படி ஒரு ஆயர்குலப்பெண் தயிர்கடையும் சத்தத்தைக் குறிப்பிட்டுப் பாடுகிறாள் ஆண்டாள்.
பறவைகளின் கீச்சுச் சத்தம் கேட்கவில்லையா பேதைப் பெண்ணே! அணிந்திருக்கும் ஆபரணங்கள் ஒலிக்க நறுமணம் கமழும் கூந்தலையுடைய ஆயர்குலப்பெண்கள் தயிர்கடையும் ஓசையும் கேட்கவில்லையா? அந்த நாராயணனை நாங்கள் பாடுகிறோமே அந்த ஓசையைக் கேட்டும் படுத்துக் கொண்டிருக்கிறாயா? எழுந்திரு என்று தன் தோழிகளைக் கூப்பிடுகிறாள் ஆண்டாள்.
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய்.
#7மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்