
“ எருமை மாடே” என்று திட்டு வாங்காத இளமைப்பருவம் இருக்காது. கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருப்பவர்களை இது மாதிரி திட்டுவார்கள். ஏன்? எருமை மாடு சுலபத்தில் அசையாது, ரொம்பவே நிதானமாகத்தான் நடக்கும். உருவமும் பெரிது. கன்னங்கரேலென்ற நிறம். போதாக்குறைக்கு எமன் இதன்மேல்தான் ஏறி வருவார் என்ற பெருமை வேறு. கேக்கணுமா? ஆனா இந்த எருமைகள் அப்படி ஒன்றும் மோசமான விலங்குகள் இல்லை. சொல்லப்போனால் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்குவதற்கு எருமைப்பாலைப் போன்ற ஒரு ஔஷதம் வேறு எதுவும் கிடையாது. பசும்பாலை விடவும் அதிகநாள் பாதுகாத்து வைக்கலாம், கால்சியம் அதிகமாகக் கொண்டது. இன்னொன்றும் சொல்கிறார்கள் – அதாவது எருமைப்பால் எல்லாமே ஏ2தானாம்.
இதற்கு வியர்வைச்சுரப்பிக் குறைபாட்டினால் எப்போதும் தண்ணீர் எங்கு இருக்கிறதோ அங்கே மூழ்கிக் கிடக்கிறது. தண்ணீர் இல்லாத இடங்களில் சேற்றில் கூட முழ்கிக் கிடக்கும். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போல கர்நாடகாவில் எருமைமாடுகளை வைத்து ஒரு விழா நடத்துகிறார்கள். அதற்கும் ஜல்லிக்கட்டு மாதிரி போராட்டங்கள் நடந்தன.
பசும்பாலைவிடவும் எருமைப்பால் கொழுப்புச்சத்து அதிகமானது என்பதால் — வேறென்ன – நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உகந்தது. கொஞ்சம் பால் வாங்கினாலும் தண்ணீர் ஊற்றி நிரவலாம். எருமை மாடுகள் பாலுக்காக மட்டுமல்ல, உழவுக்கும் பயன்படுத்துகிறார்கள் பல இடங்களில். ஆமாங்க, எருமைகளில் எருதுகளை உழவுப் பணிகளுக்கும் வண்டி மாடாகவும் கூடப் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வளவு இருந்தும் ஏன் எருமையை அவமதிக்கிறோம்?
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலருன்னு பாடுவோம், ஆனால் வெள்ளையைத்தான் எப்போதும் தேர்ந்தெடுப்போம். கவிஞர் முதல் பாமரன் வரை இதுதானே இங்கு உண்மை? கறுப்புதான் திராவிட நிறமென்று மார்தட்டுவோம், ஆனால் எல்லாமே வெள்ளை வெளேரென்று செக்கச்செவேலென்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். பால் பண்ணை வைக்க விரும்புபவர்களுக்கு எருமை ஒரு வரப்பிரசாதம். NABARD எனப்படும் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தில் மானியத்துடனான கடனும் வழங்கப்படுகிறது எருமைப்பண்ணைகள் அமைக்க. இதிலும் 30% உதவிகள் பட்டியலினத்தவர்களுக்காகவே என்பது சிறப்பு. பண்ணை அமைக்க கடனுடன் இல்லாமல், பண்ணையைப் பராமரிக்கப் பயிற்சி, உபகரணங்கள் வாங்க கடன் என முழுமையான உதவி அளிக்கப்படுகிறது.
அரசாங்க வேலைதான் என்று காத்துக்கொண்டே இராமல் இதுபோன்ற பண்ணைகள் அமைத்தால் சொந்தமாகத் தொழில் செய்வதுடன் பத்து பேருக்கு வேலையும் கொடுக்கலாம்.
என்ன ஆச்சரியம் பாத்தீங்களா? கிருஷ்ணன் எப்போதும் பசுக்களுடன்தான் காட்சி தருவான். ஆனால் ஆண்டாள் காலத்திலே எருமை வளர்ப்பு என்பது பெரிய அளவில் இருந்துள்ளது. இதைத்தான் ஆண்டாள் பாடுகிறாள்.
கிழக்கு வெளுத்துவிட்டது. எருமைகள் பசும்புல் நிறைந்த மைதானங்களுக்கு மேய்ச்சலுக்குப் புறப்பட்டு விட்டன. எல்லாப் பெண்களும் நீராட வந்துவிட்டார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி வைத்துவிட்டு உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறேன். குதிரை வடிவில் வந்த கேசியை வாயைப்பிளந்து கொன்றான், கம்சன் அனுப்பிய மல்லர்களை வென்றான், அந்த ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால் நமக்கு ஏதாவது என்றால் உடனே அலறியடித்துக் கொண்டு உதவ வர மாட்டானா? என்று கேட்டு ஆண்டாள் தோழிகளை அழைக்கிறாள்.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
#8மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்