
வாசனை வைத்தியம்– புரியலையா? அரோமா தெரபி. அதாவது வாசனை தரும் மலர்கள், தண்டுகள், மரங்கள், பட்டைகள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள். அதுலயும் இந்த எண்ணெய் இருக்கு பாருங்க அதை விளக்கிலேயும் விட்டு எரிக்கலாம், இல்லேன்னா உடம்பிலேயும் தேய்க்கலாம். ஒவ்வொரு விதமான வாசனையும் ஒவ்வொரு விதமாக வினை புரிந்து உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நமக்கு நல்லது செய்யுதாங்க. இது மேல்நாட்டினரின் சமீபத்திய கண்டுபிடிப்பு. ஆனா பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நம்மாளுங்க கடைப்பிடிச்சிருக்காங்க. உடனே அவிங்களெல்லாம் எந்த காலேஜில படிச்சாங்கன்னு ஒரு சுடலையோ இல்லே லொடலையோ கேட்டுத் தொலைக்கும். அந்த மரமண்டைகளை என்ன செய்யணும்னு உங்களுக்கே தெரியுங்கறதால மேல போகலாம்.
உங்க எல்லாருக்குமே ஞாபகம் இருக்கும் ஒரு விஷயம்.“ சொக்கா சொக்கா ஆயிரம் பொன்னாச்சே” மறக்க முடியுமா தருமியை? ஆமாங்க, தென்னாடுடைய சிவன் திருவிளையாடல்களெல்லாமே அவரோட மாமியார் ஊர் மதுரைலேதாங்க… அதுல ஒண்ணுதாங்க இது. மன்னன் செண்பகப்பாண்டியனுக்கு வந்த சந்தேகம் என்ன? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா இல்லையா. “பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்” அப்டீன்னு தேவிகா பாடிக்கிட்டே குளிப்பாங்க. குளிச்சி முடிச்சதும் அகில், சந்தனம், ஜவ்வாதுன்னு வாசனைத் திரவியங்களினாலே கூந்தலுக்கு புகை போடுவாங்க… ஒரு காலத்துல நம்ம ஊரு பொண்ணுங்களும் அந்தளவுக்கு வசதியில்லாட்டாலும் சாம்பிராணி புகை போடுவாங்க. ஆனா இந்த காலத்துல குளிக்கறதுக்கு முன்னாடி போடறாங்க– லோரியால் ஹேர்டை.
கூந்தல் மணமாக இருப்பது பெண்களுக்காக இல்லை– அவர்களது கணவன் அல்லது காதலனுக்காக. உடனே இது ஆணாதிக்கம்னு பொங்காதீங்க. ஆம்பிளைங்க உபயோகப்படுத்தற சென்டின் மணம் பெண்களுக்குப் பிடிச்ச மாதிரியும் பெண்கள் உபயோகப்படுத்தற செண்ட் ஆண்களுக்குப் பிடிச்ச மாதிரியும்தான் தயாரிக்கறாங்க. இது என்ன ஆதிக்கம்? வேணும்னா மன்மதனின் ஆதிக்கம்னு சொல்லலாம்.
கசப்பான மருந்து குடிக்கணுமா? அம்மா என்ன சொல்வாங்க ஞாபகமிருக்கா? மூக்கப் பிடிச்சிண்டு குடிச்சிடுப்பா.. எதுக்கு மூக்கப் பிடிச்சிக்கணும்? வேற ஒண்ணுமில்லேங்க. யோசிச்சுப் பாருங்க… ஒரே ஜலதோஷம். அதான் கண்றாவி எந்த டேஸ்டுமே தெரியலைன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பீங்க… ஜலதோஷத்துல மூக்குதான் அடைக்கும். நாக்குக்கு என்ன வந்தது? ஏன்னா வாசனை தெரியலேன்னா நாக்கு வேலை செய்யாது. ஆமாங்க, வாசனை தெரியாம ஒரு பொருளை சாப்பிட்டா அதனோட சுவை உங்க நாக்கு உணராது. இப்போ தெரியுதா வாசனை எவ்வளவு முக்கியம்னு…
அதனாலதான் இரவில் தூங்கும்போது அந்த காலத்து ராஜகுமாரிகளெல்லாம் அகில் புகைவாசத்துடன் தூங்குவாங்களாம். இந்த காலத்து ராஜகுமாரிகள் கொசுவத்திப் புகையோடதான் தூங்கறாங்க. எந்தளவுக்கு நல்ல வாசனை நன்மையைத் தருமோ அந்தளவுக்கு இந்த துர்கந்தங்கள் கெடுதலைத்தரும். என்ன செய்யறது? டெங்குவா இல்லே நாட்பட்ட நுரையீரல் வியாதிகளான்னுதானே பாக்கவேண்டியிருக்கு.
இப்படித்தான் ஆண்டாளின் தோழிகளும் அகில்புகை வாசம் நிறைந்த அறைகளில் தூங்கிக் கொண்டிருக்கிறார்களாம். அவர்களை எழுப்புகிறாள் ஆண்டாள்.
அழகான மணிவேலைகளைச் செய்த மாடங்களில் அழகிய விளக்குகள் எரிய, அகில்புகை வாசம் கமழ இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே… வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளைத் திற. மாமி, இவளென்ன செவிடா? ஊமையா? சோம்பேறியா? அல்லது நாராயணின் பெருமைகளைப் பாடுவதைக்கேட்டு மெய்மறந்து நிற்கின்றாளோ? அவளை எழுப்ப மாட்டீர்களா?
தூமணிமாடத்துச்சுற்றும்விளக்கெரிய
தூபம்கமழதுயில்அணைமேல்வளரும்
மாமான்மகளே! மணிக்கதவம்தாள்திறவாய்!
மாமீர்! அவளைஎழுப்பீரோ?உம்மகள்தான்
ஊமையோஅன்றிச்செவிடோஅனந்தலோ
ஏமப்பெருந்துயில்மந்திரப்பட்டாளோ?
மாமாயன்மாதவன்வைகுந்தன்என்றென்று
நாமம்பலவும்நவின்றுஏல்ஓர்எம்பாவாய்
#9மார்கழி2019-20 #ஸ்ரீஅருண்குமார்