
கூச்சமும் பயமும்
பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள் அந்தக் கொடுமையை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ சொல்லக் கூட கூச்சமும், பயமும், தயக்கமும் இருக்கும். இது தான் நிதர்சனம். இது ஏன் என்று உளவியல் மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும். ஏதோ சிலர் துணிந்து உறவினர்களிடம் சொல்லி சில சமயம் உதவி கிடைக்கும் பல சமயம் கிடைக்கா சூழ்நிலை தான் உலக நடைமுறை. அதனால் இந்த அவமானத்தை பல வருடங்கள் மனத்தில் பூட்டி பலர் அதை தங்களுடனே இருத்தி வைத்து மரணிக்கின்றனர். வெளியே வரும் உண்மைகள் வெகு வெகு குறைந்த சதவிகிதமே! இது ஜாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து நிற்கும் ஒரு கேவலமான நியதி.
மிரட்டல்களும் அவமானமும்
இப்போ அமெரிக்காவில் நடந்ததையே உதாரணமாக சொல்கிறேன். நீதிபது Bret Kavanaugh என்பவரை சுப்ரீம் கோர்டுக்கு நீதிபதியாக அமர்த்த அந்நாட்டுப் பாராளுமன்றம் முடிவெடுக்கும் தருவாயில் Dr. Christine Blasey Ford (உளவியல் துறை பேராசிரியர், பாலோ ஆல்டோ பலகலைக் கழகம், கேலிபோர்னியா) என்பவர் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை வைத்து சுப்ரீம் கோர்டுக்கு அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று கூறினார். அவர் நீண்ட testimony அளித்தும் FBIஐ வெள்ளை மாளிகை சரியான புலன் விசாரணை மேற்கொள்ள விடாமல் முக்கியமான Ford, மற்றும் Kavanaugh இருவரையும் விசாரிக்க விடாமல் தடுத்தது. அந்நாட்டுப் பாராளுமன்றம் Kavanaughஐ சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அவர் நியமனத்தை உறுதி செய்துள்ளது. போர்டை 15 வயதில் கற்பழிக்க Kavanaugh முயற்சி செய்தார். Ford வாயில் கையை வைத்து அவரை கத்தவிடாமல் வன்கொடுமை நடந்துள்ளது. அப்பொழுது கவானாகிற்கு 17 வயது. இது நடந்தது ஒரு மேல் நிலைப் பள்ளி விழாவில். போர்ட் senateல் testimony கொடுத்த போது அவரை குறுக்கு விசாரணை செய்தவர்கள் அவரிடம் நீ உன்னைக் கற்பழிக்க முயன்றது Kavanaugh என்று மறதியில் சொல்கிறாயா? எப்படி இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறாய்? வேறொருவரை இவர் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாயா, எப்படி இவர் தான் என்பது உன் நினைவில் உள்ளது என்று தான் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்களே தவிர அவள் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நினைத்து விசாரணை நடத்தவில்லை. இறுதியில் Kavanaugh சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிவிட்டார். அவர் வாழ்நாள் முழுவதற்குமான பதவி இது. இந்தக் குற்றச்சாட்டை போர்ட் பொது வெளியில் வைத்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் இவரை கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்தினார். இது தான் வாழ்க்கையின் நிதர்சனம். இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் ஒரு முனைவர், ஒரு பெரிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்! இதை வெளியில் சொன்னதால் அவருக்கு கொலை மிரட்டல்கள் பல வந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழவேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளார்.
சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை
இவ்வாறு பொது வெளியில் வந்து இப்படி தனக்கு நேர்ந்தது என்று பல வருடங்கள் கழித்து ஒருவர் சொல்லக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இதனால் என்ன தனிப்பட்ட பயன் அவர்களுக்கு? இப்படி தான் அவர்கள் பிரபலம் ஆகவேண்டுமா? இல்லை இதற்குப் பெயர் பிரபலம் ஆகுதல் என்பதா? இல்லை ஒருவர் மேல் தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியினால் அபாண்டமாகப் பழிப் போட்டு தன் நிம்மதியான் வாழ்க்கை/எதிர்காலத்தை இழக்க ஒருவர் துணிவாரா?
பாலியல் வன்முறைக்குப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள்/இளைஞர்களாக இருப்பினும் இதில் மட்டும் ஆண் பெண் இருவருமே சமம். இருவரையும் சரிசமமாகவே கேவலமாக சமுதாயம் பார்க்கும், உதவி செய்யாது. இந்த #MeToo இயக்கம் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அதன் பின் பாலிவுட்டில் நானா படேகர் மேல் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நம் நாட்டிலும் இது வலுப் பெற ஆரம்பித்தது.
இங்கே குற்றம் சாற்றப்பட்டவர்களை விட குற்றம் சாட்டுபவர்களை தான் சமுதாயம் தண்டிக்கிறது. அவரின் நிலை என்ன, ஓ சினிமாவில் இருக்கிறாரா அப்போ வேசி தான் (ஸ்ரீ ரெட்டி இதைத் தான் எதிர்கொண்டார்) இவள் என்ன இயக்குநரை, நடிகரைப் பற்றி குற்றம் சொல்வது? நடிக்க வாய்ய்புத் தருவார் என்று தானே படுக்கப் போனாள் இப்போ என்ன திடீர் ஞானோதயம்? இதே தான் கேரளா கன்னியாஸ்திரீக்கும் நடந்தது. ஏன் இத்தனை முறை பாலியல் தொடர்பு நடந்த பிறகு வெளியே வந்து சொல்கிறார்? அப்போ அது வரை அந்த ருசி தேவையாக இருந்ததோ போன்ற கேள்விகள் உண்மையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தான். இந்தக் கேள்விகளால் தப்பிப்பது யார் என்று யோசித்தீர்களா?
சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள்
எப்பொழுதும் harass செய்கிறவர்கள் பவரில் இருப்பவர்கள். அதாவது மேலதிகாரியாகவோ, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களாகவோ, அவரை பகைத்துக் கொண்டால் வேலை வாய்ப்பில் முன்னேற்றத்துக்குத் தடை விதிக்க சக்தியுள்ளவராகவோ, நம்முடைய உறவினர்கள் எனில் தந்தை ஸ்தானத்தில் அல்லது தந்தையேவோ, மாமா, அக்கா புருஷன், கணவனின் சகோதரன், மாமனார் என்கிற நெருங்கிய உறவினர்களாகவோ தான் இருப்பார்கள். அவர்களை எதிர்க்க துணிச்சல் தேவை, குடும்ப ஆதரவு தேவை. குடும்ப உறுப்பினர்கள் செய்யும் பாலியல் வன்முறைகள் மற்ற உறவினர்களுக்குத் தெரியாமல் நடக்காது. ஆனாலும் உதவிக்கு வரவேண்டியவர்களே குடும்பம் உடைந்து விடும் என்று உதவ வரமாட்டார்கள். பின் எப்படி பாதிக்கப்பட்டவள் வெளியே வந்து தனக்கு நேர்ந்தக் கொடுமையை சொல்ல முடியும்? மேலதிகாரி எனில் அவனை எதிர்த்தால் வேலை போகும் அல்லது மேலதிக கொடுமைகள் நடக்கும். மாதச் சம்பளத்தை நம்பி குடும்பம் நடத்தும் பெண் எப்படி எதிர்ப்பது? இந்த தொழில் துறையிலேயே வேலை கிடைக்காதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டுபவரை எப்படி எதிர்ப்பது?
பெண்ணின் நிலை
பின்னர் ஒரு நாள் எப்போதாவது நல்ல ஆதரவு கிடைத்த பிறகு வெளியே வந்து சொன்னால் ஏன் இவ்வளவு தாமதம்? நீ அந்த ஆபிசரோடு தானே எல்லா மீட்டிங்கிலும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய்? அப்போதே செருப்பை கழட்டி அடித்திருக்க வேண்டாமா என்கிற கேள்விகளைக் கேட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டவரை இன்னும் நோகடிக்கிறீர்களே தவிர உதவி செய்யவில்லை. இந்த எதிர்வினைகளுக்குப் பயந்து தான் இத்தனை நாள் அவர் வாய் மூடி இருந்தார். இதையே ஒரு ஆண் கேட்டால் கூட புரிந்து கொள்ளலாம் ஏனென்றால் அவனுக்கு பெண்ணின் நிலை புரியாது. ஆனால் கேள்வி கேட்பது பெண்களாக இருப்பின் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பாலியல் வன்கொடுமையை அனுபவித்து இருக்க மாட்டீர்கள் என்று கடந்து போவதா இல்லை அப்பெண்ணின் நிலையை உணரும் தன்மை இல்லாமல் போனதே என்று உங்கள் அறிவைக் குற்றம் சொல்வதா என்று புரியவில்லை.
பொது வெளியில் ஒரு பெண் நான் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று சொல்வதனால் வரும் பாதிப்புகளை முதலில் பட்டியலிடுகிறேன். இப்படி ஒரு பெண் சொன்னால் சராசரி ஆண்களும் பெண்களும் நினைப்பதை இங்கே பதிவிடுகிறேன்.
- எல்லாம் போய் படுத்திருப்பா, இப்போ என்னமோ பத்தினியாட்டம் வெளியே வந்து சொல்றா.
ஏன் இத்தனை நாள் சொல்லலை, 5 வருஷம் முன்னாடி நடந்தது, 10 வருஷம் முன்னாடி நடந்தது இப்போ தான் சொல்ல நேரம் வந்ததா? - பணம் கேட்டிருப்பா, படிஞ்சிருக்காது அதான் ஓபனா சொல்ல வந்துட்டா.
- அவனை எதுக்குத் தன்னோட திருமணத்துக்கு அழைப்பு கொடுத்தா? அப்போ மதிச்சு கூப்டுட்டு இப்போ மட்டும் ஏன் குத்தம் சொல்றா?
- அம்மாகாரி அப்பன்காரன் எல்லாம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாங்க? நாலு அப்பு அப்பி பொண்ணை காப்பாத்தியிருக்க வேண்டாமா?
- எல்லார்கிட்டேயும் சிரிச்சு சிரிச்சுப் பேசுவா அப்படி இருந்தா எந்த ஆம்பளை தான் இப்படி கூப்பிட மாட்டான்?
- அவ உடையும் அவளும்! ஆபிசுக்கே ஸ்லீவ்லெஸ் தான் போட்டுக்கிட்டுப் போவா அதான் அவளுக்குப் பாலியல் தொந்தரவு வந்திருக்கு!
- எவ்வளவு விவரமா தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை விவரிச்சு எழுதியிருக்கா, படிக்கவே பிட்டுப் படம் பார்த்த பீலிங் வருது. அப்ப அனுபவிச்சிட்டு இப்போ வந்து குறை சொல்றா பாரேன்.
இவை தான் மக்கள் மனத்தில் ஓடும் என்று தெரிந்தும் அப்பெண் ஏன் துணிந்து வெளியே வந்து அவளுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்கிறாள்? பாதிக்கப்பட்டவள் மணமானவள் என்றால் கணவனும் அவன் குடும்பத்தாரும் அவள் வெளிப்படையாக பேசிய பின் மரியாதையோடு பார்ப்பார்களா என்பது மிகப் பெரிய கேள்வி. சாட்சிகள் வைத்து இக்குற்றங்கள் நடப்பதில்லை. அதனால் தான் இவை நிரூபிக்க இயலா குற்றங்கள் ஆகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணோ ஆணோ வாய் மூடி மௌனித்திருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அப்படி இருந்தும் இவை அனைத்தும் தாண்டி ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார் என்றால் அது எதனால்?
- முதலில் சொன்ன அமெரிக்க நீதிபதி விவகாரத்தின் உதாரணம் மாதிரி ஒரு கெட்டவன் பலரையும் பாதிக்கும் ஒரு பதவியை அடைந்து மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்கிற நல்லெண்ணம்.
- குடும்ப ஆதரவு கிடைத்து அவர்கள் இதை வெளியே சொல் மற்றவர்களுக்கும் அவன் உண்மை முகம் தெரியட்டும் என்று ஆதரவு கரம் நீட்டுவதால்.
- சில சமயம் மனச்சிதைவு அதிகம் ஏற்பட்டு அவர்களே தாங்க முடியாமல் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் இதை வெளியே சொல்லியே தீருவேன் என்று முடிவெடுப்பதால்.
- சமூகத்தில் ஒரு நம்பகத் தன்மையான இடத்திற்கு வந்த பிறகு நான் சொல்வதை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கும்போது உண்மையை பலரும் அறியட்டும் என்று சொல்வது.
- மிரட்டல் பயம் நீங்கும்போது. பலரும் blackmail செய்யப்படும் சூழ்நிலையில் தான் இருப்பார்கள். புகைப்படம் வீடியோ harass செய்பவன் வசம் இருக்கும். பெரும் பதவியில் இருப்பவர்களை தனியாக எதிர்கொள்ள முடியும் சூழல் வரும்போது.
- ஒரு குருட்டு தைரியம்.
உண்மை
ஒரே ஒரு நிமிஷம் பாலியல் குற்றச்சாட்டை முன் வைப்பவர் உண்மையாகத் தான் பேசியிருக்கிறார் என்று நம்பி அவர் பக்கத்து நியாயத்தைப் பாருங்களேன். அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட மகானுபாவர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு சமூகத்தில் பெரிய மனுஷன் என்கிற போர்வையோடு வளைய வருகிறார் என்கிற உண்மை பகீர் என்று உரைக்கிறது அல்லவா? இதேக் கொடுமை நம் வீட்டில் யாருக்காவது நிகழ்ந்து அப்பெண் பொது வெளியில் இப்படி மனச்சிதைவின் காரணமாக போட்டு உடைத்திருந்தால் நீங்கள் சின்மையிக்கும் #MeToo வில் மற்ற பெண்களின் கதைகளுக்கும் ஆதரவு தராமல் கொடுத்த எதிர்வினையைத் தான் கொடுத்திருப்பீர்களா? உங்கள் வீட்டுப் பெண்ணை தள்ளி வைத்துவிடுவீர்களா? வேசி என்று அழைப்பீர்களா?
சமூக சூழ்நிலை
ஏதோ ஒரு சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தைரியம் வரும். இப்படி எல்லாம் எனக்கும் நிகழ்ந்திருக்குன்னு ஒருவர் வெளிப்படையா சொல்லும்பொழுது அவளே சொல்றா சின்னப் பெண், அவளுக்கு இருக்கும் துணிச்சல் கூட நமக்கு இல்லையே என்று தோன்றி சிலர் தங்களுக்கு நேரந்ததை பகிரலாம். அது தாமதமாகத் தான் நடக்கும். அத்தனை நாள் குற்றம் சாற்றப்பட்டவர்களுடன் தொழில் சார்ந்த தொடர்பு இருந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு தான் கொடுமை இழைத்தவர்களை விட்டு வெட்டிக் கொண்டு விலகியிருக்கும் பேரு கிடைக்கும். பலருக்கும் அந்தக் கயவனோடே தொடர்பில் இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்தால் அது பாதிக்கப்பட்ட பெண்ணின் தவறல்ல. சமூக சூழ்நிலையின் நிர்பந்தம்.
நாம் ஆதரவாக இருப்போம்
பாதிக்கப்படவ்வர்களை குற்றம் சாட்டி பார்க்கும் நிலையிருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஷியாக பாலியல் வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு பெரிய மனிதர்கள் என்று தான் வலம் வந்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் தன் அனைத்தையும் தியாகம் செய்து ஒருவர் மேல் வன்கொடுமை குற்றம் சாட்டும்போது செவி கொடுத்துக் கேளுங்கள். நீதிமன்றத்தால் சாட்சியம் இல்லா குற்றங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது. சமூகத்தில் நாமாவது அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். கெட்டவர்களின் தோலுரித்த அவர்களின் துணிச்சலுக்கு நன்றி சொல்வோம். குற்றம் சாட்டுபவரின் ஜாதி, செய்யும் தொழில், அன்னார மேல் நமக்கிருக்கும் பழைய பகை இவற்றை வைத்து பாதிக்கப்பட்டவரை இகழாதீர்கள். நேர்மையோடு அணுகுங்கள். அது மட்டுமே நம்மால் இயன்றது. அவர்கள் பட்ட துன்பத்தை நாம் வாங்கிக் கொள்ள முடியாது, இனி வருங்காலங்களில் அவர்கள் இதனை வெளிப்படையாக சொன்னதால் படப் போகும் துனப்த்துக்கும் நாம் பொறுப்பேற்கப் போவதில்லை. ஆறுதல் கூற மனம் இல்லாவிட்டாலும் இகழாமல் இருப்போம்.
பெண்மையை போற்றுவோம் என்று பேச்சளவில் நில்லாமல் மனத்தளவில் நினையுங்கள். உலகம் சற்றே மாற்றம் பெறும்.
~பல்லவி