arun jaitley

“மோடி சாத்தியமாக்குகிறார்!” நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி வியாழக்கிழமை அவர் வலைப்பதிவில் அரசின் ஐந்து வருட சாதனைகளை கோடிட்டு காட்டி தேர்தல் முழக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

புது தில்லி: கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மோடி ஒரு நாளில் இருபத்தி நாலு மணி நேரமும் உழைத்து தன்னுடைய அயராத உழைப்பினால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அதனால் வரும் தேர்தல் முழக்கம் “மோதி ஹை மும்கின் ஹை” “மோடி சாத்தியமாக்குகிறார்” என்பதே ஆகும்!

“கொள்கை விஷயங்களில் அவர் தன் குழுவுடன், மந்திரிகளுடன், அதிகாரிகளுடன் மணிக்கணக்காக அமர்ந்து ஆலோசனை நடத்தி முக்கியமான முடிவுகளை எடுக்கிறார். அவர் இலக்குகளை வைப்பதே அதை தாண்டி போவதற்கு தான். அவர் சாதனையாளர் என்பதை பெரும்பாலான இந்தியர்கள் உணர்ந்திருக்கின்றனர். அதனால் பாஜக நல்ல ஒரு தேர்தல் முழக்கத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது.” என்று ஜெயிட்லி தன் வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கடந்த ஐந்து வருடங்களில் அரசு நடத்திய சில மிகப் பெரிய வளர்ச்சி திட்டங்களை எடுத்துக்காட்டாக காட்டி நமது வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து ஐந்து வருடங்களாக இந்தியா உலக நாடுகளின் மத்தியில் மிக விரைவாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக சாதித்து வந்துள்ளதை தெரிவித்துள்ளார்.

“5 லட்சம் வரை நிகர வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கை அளித்துள்ளது பாஜக அரசு. ஒவ்வொரு பொருள் மற்றும் சேவை வரி (GST) குழு சந்திப்பிற்கு முன்னும் எந்தெந்த வரிகள் குறைக்கப்படும் என்று நாட்டு மக்கள் ஊகிப்பது வழக்கம். நாற்பது லட்சத்துக்கு கீழ் விற்றுமுதல் உள்ள சிறு வியாபாரிகளுக்கு பொருள் மற்றும் சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1.5 கோடி ரூபாய் விற்றுமுதல் உள்ள வியாபாரங்கள் 1% பொருள் மற்றும் சேவை வரி செலுத்தினால் போதும். எளிமையான வீடுகளுக்கு இப்பொழுது பொருள் மற்றும் சேவை வரி 1% தான். வரிச் சுமையை குறைத்து அதே சமயம் அடித்தள வரி வருமானத்தைப் பெருக்கியும் அரசுக்கு வசூல் தொகை வெகு விரைவில் கிடைக்குமாறும் செய்துள்ளது அரசு” என்கிறார் ஜெயிட்லி.

இந்தியா வரி விகிதத்தைக் குறைத்து வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகப்படுத்தி வசூலிக்க முடியும் என்று யாருமே நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் அரசியலமைப்பில் மாறுதல்கள், அதன் கீழ் வரும் வரி விதிப்பதற்கான சட்ட திட்டங்கள், தீர்வைகள் அனைத்தும் ஒருமனதாக பாராளுமன்றமும் பொருள் மற்றும் சேவை வரிக் குழுவும் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.

நெடுஞ்சாலை கட்டுமான புள்ளிவிவரத்தையும் குறிப்பிட்டு 2014ல் ஒரு நாளைக்கு 7 கிலோமீட்டர் கட்டப்பட்டு வந்த நெடுஞ்சாலை தற்போது ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் கட்டப்பட்டு வருகிறது என்ற ஒப்பீட்டு விவரத்தையும் தந்துள்ளார். 91% கிராமப்புறங்கள் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சாலைகள் அமைக்க மூன்று மடங்கு அதிகத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்வச் பாரத்(தூய்மை இந்தியா), உஜ்வாலா யோஜனா(குடும்பங்களுக்கு மானிய சமையல் எரிவாயு திட்டம்) உஜாலா ஆயுஷ்மான் பாரத்(மருத்துவ காப்பீட்டு திட்டம்) ஆகிய மத்திய அரசின் முக்கிய திட்டங்களை முன்னிலைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார்.

“மார்ச் 13 வரை 15.27 லட்சம் நோயாளிகள் இலவச மருத்துவ உதவி பெற்றிருக்கிறார்கள்*. இதுவரை 99% கிராமப்புற வீடுகளுக்கு டாய்லட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள எட்டு கோடி மக்களுக்கு வீட்டு சமையல் எரிவாயு வசதியும், அடுப்பும், சிலிண்டரும் வழங்கப்பட்டுள்ளன. முப்பத்தைந்து கோடி மக்களுக்கு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அக்குடும்பங்கள் வங்கி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.” என்று எழுதியுள்ளார்.

(*மார்ச் 15 வரை 15.70 லட்சம் நோயாளிகள் இலவச மருத்துவ உதவி பெற்றிருக்கிறார்கள்.)

சுய வேலை வாய்ப்பை அளிக்கவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பதினாறு கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஜெயிட்லி மேலும் கூறியுள்ளார்.

“இதில் பயனடைந்தவர்கள் 54% பிற்படுத்தப்பட்டோர் (SC/ST/OBC) மற்றும் சிறுபான்மையினர். பயனடைந்தவர்களில் பெண்கள் 72%” என்று கூறியிருக்கிறார்.

விமான நிலையங்களை 101 எண்ணிக்கைக்கு அதிகரிப்பதை பற்றியும், 22 வகை பயிர்களுக்கு குறைந்த பட்ச விலையுடன் (MSP) 50% கூடுதலாக தருவதைப் பற்றியும் 6000 ரூபாய் விவசாயிகளுக்கு உதவித் தொகை அளிப்பதைப் பற்றியும் எழுதியுள்ளார்.

வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள கிராமத்தில் உள்ளவர்களுக்கு 2022ஆம் வருடத்திற்குள் சொந்த வீடுகள் கிடைத்திருக்கும் என்றும் வருடத்திற்கு 55 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த வான்வெளி போர் விமான தாக்குதல் இந்தியா நாட்டிற்குள் நடக்கும் தீவிரவாதத்தை மட்டும் எதிர்த்துக் கொண்டிருத்தல் போதாது என்பதை நிரூபித்துள்ளது. “தீவிரவாதம் தொடங்கும் இடத்தில் தாக்குதல் நடத்தி வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையை பின்பற்ற இந்தியா தயாராக உள்ளது என்பதை காட்டுகிறது” என்று எழுதியுள்ளார்.

2014-2019 இது வரை மோடி அரசு செயல்படுத்திய திட்டங்கள் விவரம்:modi schemes at a glance 2014-2019

~பல்லவி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.