
17, செப்டம்பர் 1950. குஜராத். சுதந்திர இந்தியாவில், ஒரு தாய் தனக்கு பிறந்த குழந்தையின் இன்முகம் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
அவள் அன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை, பின்னாளில் இந்த குழந்தைதான் உலகம் போற்றும் ஒரு மாமனிதனாக திகழப்போகிறான் என்று.
இவன் தனது இளம்பருவத்திலும் மற்ற குழந்தை போன்று வீதியில் விளையாடி கொண்டிருக்கவில்லை. தாய் மண்ணும், அந்த மண்ணின் புகளுமே அவனது கண்ணில் தெரிந்தது.
அந்த உன்னத எண்ணம் தான், அவனை எட்டு வயதில் RSS-இல் சேர வைத்தது. பள்ளியில் பயிலும் போதே அவனது பேச்சு திறமை பலரது பாராட்டையும் பெற்று தந்தது.
அன்றைய பொழுது, இந்தியாவில் குழந்தை திருமணம் தழைத்திருந்தது. அதற்கு, இவனது பெற்றோர்களும் விதிவிலக்கில்லை.
இவனுக்கு பதினாறு வயதான பிறகு இவனுக்கும் திருமணம் என்ற சடங்கு நடைபெற்றது. இச்சிறுவன் தனக்கு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டிய பெரும் கடமை இருப்பதை அன்றே உணர்ந்திருப்பானோ என்னவோ?
மற்றோரு குழந்தையான தன் மனைவிக்கு கல்வியே பெரியது என்றுணர்த்தி அவளையும் நன்கு கற்று ஒரு ஆசிரியர் ஆகும் ஊக்கம் அளித்தான்.
பின் இந்திய மண்ணின் வளர்ச்சிக்காகவே ஜனனம் கொண்ட இந்த இளைஞன், தனது அந்த சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி நாட்டு மேன்மைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தான்.
1971ம் ஆண்டு முதல் முழுநேர RSS வேளைகளில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். பின், 1985ம் ஆண்டு தன்னை பிஜேபி கட்சியில் இணைத்துக்கொண்டார்.
அன்று முதல் இவருக்கு அனைத்துமே ஏறுமுகம் தான். கட்சியில் தனக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டாலும் அதை சிரத்தையுடன் முடித்தார்.
இவரது வளர்ச்சி கண்டு அனைவரும் வியந்த வண்ணம் இருந்தனர். அப்பொழுது தான் அந்த எதிர்பாரா விபத்து நடந்தது.
ஆம், அதை விபத்து என்று தான் கூற வேண்டும்.
பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் அரசியல் கட்சி துவங்கி, நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு முதல்வர் கனவில் இருக்க, யாருமே நினைக்க முடியா வெற்றி சூடி குஜராத் மாநிலத்தின் முதல்வரானார்.
முதல் பந்திலேயே சிக்ஸர் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, அது தான் இவரது அரசியல் வாழ்வும்.
ஒரு முறை கூட தேர்தலில் போட்டி இட்டதில்லை. ஒரு முறை கூட சட்டமன்ற உறுப்பினர் ஆனதில்லை. ஆனால், முதல் முறை அவர் மாநிலவைக்கு செல்லும்போதே குஜராத் மாநிலத்தின் முதல்மந்திரியாக தான் சென்றார்.
மனம் போல் வாழ்க்கை என்ற சொல், யாருக்கு பொருந்துகிறது இல்லையோ, இவருக்கு நன்றாக பொருந்தும்.
மூன்று முறை குஜராத் மாநிலத்தின் முதல்வராக, யாராலும் அசைக்க முடியா வண்ணம் மக்கள் செல்வாக்கு பெற்று திகழ்ந்தார்.
அவர் உண்டு அவர் வேலை உண்டென்று இருந்த மனிதரை, வசைப்பாடியே டெல்லி அரசியலுக்குள் இழுத்து விட்டார்கள் சிலர். அவர்கள், இன்று ஏன் அந்த தவறை செய்தோம் என்று ஏங்கி கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
ஆம், சிவனே என்று இருந்த அவரை சீண்டி இன்று அவர் சினம் கொள்வாரோ என்று சினுங்க ஆரம்பித்து விட்டார்கள் எதிரிகள்.
உண்மையை கூற வேண்டுமாயின்,அவர்களுக்கு தான் நம் இந்திய நாட்டு மக்கள் நன்றி கூறவேண்டும்.
மூன்று முறை ஓர் மாநிலத்தின் முதல்மந்திரியாக இருந்த அவரை, சற்றும் மரியாதையின்றி, எங்கள் கட்சி கூட்டங்களுக்கு டி விற்க தான் அவருக்கு தகுதியுள்ளது என்று எள்ளி நகையாடினர் சிலர். அதில் ஆரம்பித்தது அவர்களுக்கு சனி திசை. இன்று வரை முடிந்த பாடில்லை.
ஒரு முறை கூட மக்களவை உறுப்பினராக மக்களவையுள் கால் பதித்ததில்லை. ஆனால், எதிரணிகளின் அதீத முயற்சியால் நேராக இவர் இந்நாட்டின் பிரதமமந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வவையினுள் நுழைந்தார்.
பிழைப்பிற்காக டி விற்று வயிற்றை நிரப்பி கொண்டிருந்த ஒரு சிறுவன், பின்னாளில் இந்நாட்டு பிரதமர். நினைத்து பார்க்கவே மக்களுக்கு பிரமிப்பாக இருந்தது.
ஆனால், அவரோ, நான் பிழைக்க டி விற்றவன் தான், ஆனால் ஒருபோதும் இந்த நாட்டை விற்பவன் அல்ல என்று அனைவருக்கும் உணர்த்தி கொண்டுள்ளார்.
அந்த வியப்பு விலகுவதற்குள் இந்த உலகமும் அவரை கண்டு வியக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நாடும் இவரது காலடி படாதா என்று ஏங்க ஆரம்பித்தது. அதற்கு காரணம், இவர் கடைப்பிடித்த தன்னிகரற்ற தாய்நாட்டு நலன் மட்டுமல்ல. கையாண்ட வியாபார யுத்திகளும் தான்.
தன் நாட்டிற்கு லாபம் கிடைக்க பாடுபட்ட இவர் ஒருபொழுதும் மற்ற நாடுகளுக்கு தீங்கு இழைக்க முன்வந்ததில்லை.
ஒவ்வொரு முறை வெளிநாடு சென்று வந்த போதும் தன் நாட்டிற்காக பல கோடி முதலீட்டை பெற்று வந்தார். நமது இந்திய நாட்டின் மதிப்பும் உலகில் உயர ஆரம்பித்தது.
ஒரு முறை மக்கள் இவரின் பேச்சை கேட்டு ஏமாந்து விட்டார்கள், இனி இவரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கொக்கரித்த எதிரிகள் முகத்தில் மீண்டும் கரியை பூசினார்கள் மக்கள்.
அது என்ன மாயமோ தெரியல. என்ன மந்திரமோ புரியல.
அவர் மேல் வீசப்பட்ட வசை சொல்களும் வாசனை கொண்ட மலராய் அவரது பாதத்தில் வீழ்ந்தது. அவரை வீழ்த்த நடந்த மாய வேலைகளும் அவரது தோள்களில் மாலையாய் அலங்கரித்தது.
ஆம், சென்ற முறையை விட இம்முறை அதிக பெரும்பான்மையாக வாக்களித்து அவரை மீண்டும் இந்நாட்டின் பிரதம மந்திரியாக அழகு பார்த்தனர் இந்திய மக்கள்.
பதவி பிரமாணம் ஏற்கையில் “நரேந்திர மோடியாகிய நான்“, என்று அவர் கூற ஆரம்பித்ததும் ஆனந்த கண்ணீர் வடித்தவர் எத்தனை பெயரோ நான் அறியேன் பராபரமே.
இம்முறை அவர் பதவி ஏற்ற சில தினங்களிலேயே உள்ளூர் எதிரிகள் முதல் வெளிநாட்டு எதிரிகள் வரை பதற துவங்கினார்கள்.
ஆம், சென்ற முறை ஆட்சியின் இறுதியில் தான் தீபாவளி கொண்டாடினார். ஆனால் இந்த முறையோ, பதவியில் அமர்ந்து 100 நாட்களுக்குள் பல அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நம் எதிரிகளுக்கு.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி.
அமித்ஷா உடையான் எதற்கும் அஞ்சான், இது புதுமொழி.
பின் வேறன்ன சொல்வது? அவரது உற்ற தோழன், அமித்ஷா அவர்கள் தேர்தலில் வென்று உள்நாட்டமைச்சர் ஆனது தான் தாமதம், இவ்விருவர்களும் சேர்ந்து 70 ஆண்டுகள் நடைபெறா பல அறிய நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டியுள்ளனர். அதுவும் உலகமே பாராட்டும் வகையில்.
பதவிக்கு வந்து 100 நாட்களிலேயே இப்படி பிரதமர் மோடி நம் நாட்டின் எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறாரே, இன்னும் போகப்போக, என்னவெல்லாம் நடக்குமோ என்று எதிரணி குழம்பி தான் போய் உள்ளது.
எது எப்படியோ, சும்மா இருந்த ஓணாண்ணை எடுத்து வேட்டியின் உள்ளே விட்டதை போன்று நெளிய துவங்கிவிட்டார்கள் எதிரிகள்.
பின் குறிப்பு: இது வேட்டி கட்டிய யாரையும் குறிப்பதாய் இருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
இன்று போன்றே என்றும் இவரது சாகசங்களும், நற்தொண்டுகளும் இந்த இந்திய மண்ணில் பல்லாண்டு வாழ வேண்டும்.
ஜெய்ஹிந்த்.