தமிழ்நாட்டில் பிரிக்க முடியாதது சினிமாவும், அரசியலும். கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும் நான்கு பேர் சந்தித்துக் கொண்டால் பேசுவது சினிமா அல்லது அரசியலாகத்தான் இருக்கும். அந்தளவுக்குச் சினிமா தமிழ் மக்களை மதிமயக்கி வைத்துள்ளது.

ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம்.

இணையத்தில் மீம்ஸ் வெளிவர ஆரம்பித்தபோது அமெரிக்கர்கள் பல வேடிக்கையான சித்திரங்களை மீம்ஸ்களாகப் போட்டு கலாய்த்தனர். இந்தக் கலாச்சாரம் தமிழகத்திலும் பரவியது. ஆனால் இங்கு வந்த மீம்ஸ்களோ வடிவேலு, கவுண்டமணி, ரஜினி, விஜயகாந்த் போன்றவைதான்.

அதாவது சினிமாவைத் தாண்டி வேறு எதையும் creative ஆக யோசிக்க முடியாதபடி தமிழ் சினிமா நம்மை zombieகளாக மாற்றி வைத்துள்ளது. தமிழனின் இந்தக் கலாச்சாரம் இன்றோ நேற்றோ முளைத்தது அல்ல, என்று நாம் திராவிடக் கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டுப் போட ஆரம்பித்தோமோ அன்றே ஆரம்பித்தது இந்தத் தலைவலி.

 

சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போடுவது அவ்வளவு பெரிய குற்றமா? கண்டிப்பாகக் கிடையாது. ரொனால்ட் ரீகன் ஒரு சினிமா நடிகர், அவர் அமெரிக்க அதிபர் ஆகவில்லையா? அர்னோல்ட் ஷ்வார்ஸ்நேகர் ஒரு புலம் பெயர்ந்த அமெரிக்க நடிகர், அவர் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருமுறை ஆட்சி புரியவில்லையா? இவர்கள் நன்றாக ஆட்சி புரிந்ததாகத் தானே மக்கள் கூறினார்கள்?

சரி அப்புறம் என்னதான் பிரச்சனை உங்களுக்கு? மேற்கூறிய இருவரும் இன்னும் பலரும் சினிமா புகழை வைத்து அரசியலுக்கு வந்தார்களே தவிர,சினிமாவை வைத்து அரசியலுக்கு வரவில்லை. அதாவது, சினிமாவில் தங்களுக்கு இருந்த புகழைக் கொண்டு அதை முதலீடாக வைத்து அதை ஓட்டுகளாக மாற்றி அதன் பின் அரசியல்வாதி ஆனார்கள். அரசியல் வசனங்களைச் சினிமாவிலும், சினிமா வசனங்களை அரசியலிலும் பேசி நம்மைக் குழப்பவில்லை.

 

நம்ம ஊரிலும் இதுதானே நடக்கிறது?

இங்கே நடிகர்கள் ஆட்சிக்கு வரமுடியும் என்று வித்திட்ட எம்.ஜி.ஆர் ஆட்சியை மறக்க முடியுமா? மக்களை உணர்ந்து மக்களோடு நின்று ஆட்சிக்கு வந்தார். அதனாலேயே மக்கள்திலகம் என்று அறியப்பட்டார். அவரும் பின்னர் வந்த ஜெயலலிதாவும் தாங்கள் அரசியலுக்கு அடையாளப்படுத்த மட்டுமே இந்த புகழை பயன்படுத்தினர். பெரும் புகழ் சம்பாதித்த பின்னர் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் சாதித்தார்.

ஜெயலலிதா அரசியலுக்கு முன் பெற்ற சினிமா புகழை விட அரசியல் உழைப்பே அவருக்கு பெயரை தேடி தந்தது. இன்று நம் ஊரில் இதுவா நடக்கிறது? ஒரு கதாநாயகனுக்குத் தொடர்ந்து 3 படம் வெற்றியடைந்துவிட்டால் CM ஆசை,5படம் வெற்றியடைந்துவிட்டால் PM ஆசை என்றுதானே போய்க் கொண்டு இருக்கிறது?

இதை விடக் கொடுமை இவர்களுக்கு இந்த ஆசை வந்த பின்னே சினிமாவில் அவர்கள் போடும் ஆட்டம்தான்.

அது பின்வருமாறு:

சர்ச்சைக்குரிய வசனங்கள்:

இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் சற்றும் உண்மையே கலக்காத, நையாண்டி நிறைந்த, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வசனங்கள் இருக்கும்.

Whatsapp கதைக்கரு

படத்தில் கதை என்ற பேச்சுக்கே இடமில்லை.அப்படியே இருந்தாலும் நாலைந்து Whatsapp மெசேஜ்களின்சங்கமமாகத்தான் அது இருக்கும். மற்றபடி படத்தில் குத்தாட்டமும்,அரசியல் கேலிப் பேச்சுகளும் இருந்தாலே போதுமானது.

ரசிகனுக்கு advice

நமது நாயகர்களுக்கு உயிர்நாடியே பாலாபிஷேக ரசிகர்கள்தான். ஒரே ஒரு நாள் மட்டும் இவர்களது IQ 10 புள்ளிகள் மட்டும் உயர்ந்தால் கூட நம் நாயகர்களின் பிசினஸ் இழுத்து மூடப்படும் என்பது நம் நாயகர்களுக்கும் தெரியும். இதனாலேயே எல்லாப் படத்திலும் ரசிகனுக்கு ஒரு advice பாடல் நிச்சயம் உண்டு.

அதே போல அடிக்கடி தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்புகள் வெளியிட்டு கொண்டே, ரசிகர்களிடம் அரசியல் ஆர்வத்தை தூண்டி கொண்டே இருக்கவும் வேண்டும். இங்கே ரசிகன் தான் இவர்கள் முதலீடு. பிற அரசியல் கட்சிகளை பார்த்து ரசிகனும் அரசியல் ஆசையில் வலம்வர வேண்டும். இதைவைத்து ஒரு சில நடிகர்கள் ஆண்டுகணக்கிலும் அரசியல் ஆசையை தூண்டி கொண்டே இருப்பர்.


இண்டெலக்ச்சுவல் நாயகன்

அதே போல், நாயகனுக்கு தான் ஒரு சிறந்த அறிவாளி என்ற தோற்றம் ஏற்படுத்தி கொண்டே இருக்கவேண்டும். பெரும்பான்மைக்கு எதிரான கருத்துக்களும், பிரிவினைவாத கருத்துக்களும், அரசுக்கு எதிரான கருத்துகளும் தொடர்ந்து பொதுவெளியில் பரப்பி கொண்டே இருக்க வேண்டும்.

அய்யாக்கண்ணு போன்ற ஏழை விவசாயிகளுக்கும் சிறுபான்மையினர்க்கும் மறக்காமல் ஆதரவுதெரிவிக்க வேண்டும். சமூக சீர்திருத்த கருத்துகளை ஆதரிக்க வேண்டும், ஆனால் அரசின்சீர்திருத்தங்களை எதிர்க்க வேண்டும்.

ஊழலுக்கு எதிரானவர் போல தோற்றத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். ஆனால் வரிஏய்ப்பில் சாதனையும் புரிய வேண்டும். அரசு பள்ளிகள் தரம் உயரத்த வேண்டும் என்று அரசை குற்றம் சாட்ட வேண்டும், ஆனால் தன் குழந்தைகளை சர்வதேசதரப்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிப்பது கூட தெரியாமல், இலவச மருத்துவம் பற்றி தவறாமல் வலியுறுத்த வேண்டும். மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்று பரிதாபப்பட வேண்டும், ஆனால் அதே மக்களிடம் முதல் நாள் கலெக்க்ஷன் கோடிக்கணக்கில் வசூலித்து சாதனை புரிய வேண்டும்.

அரசு தரும் இலவசங்களை எதிர்த்து கருத்துக்களை பரப்ப வேண்டும், மறக்காமல் தன் பாட்டியின் பிறந்த நாளுக்கு கூட அயர்ன்பாக்ஸ், தையல் மெஷின் போன்ற தரம்குறைந்த பொருட்களை ரசிகனின் தலையில் கட்ட வெயிலில் நிறுத்த வேண்டும்.

பதவி ஆசை இல்லை: படத்தில் 15 ரீலில் நமது நாயகன் கேடு கெட்ட அரசியல்வாதிகளை வார்தைகளாலேயே புரட்டி எடுப்பார், திடீர் மக்கள் புரட்சி செய்வார், தமிழகத்தையே ஒன்றிணைப்பார், கோர்ட்டை தலைகீழாகப் புரட்டிப் போட்டு நீதிபதிக்கே சட்ட ஆலோசனை சொல்வார்,காவல்துறைக்குத் தண்ணி காட்டுவார், ஆனால் எல்லாம் கூடி வந்தபின்கடைசி ரீலில் தனக்கு அரசியல் ஆசையே இல்லை எனக் கூறி நடையைக் காட்டுவார். இது எதற்கு?தியேட்டரில் இருந்து மக்கள் அவர் காலில் விழுந்து கெஞ்சி அரசியலுக்கு இழுப்பார்கள் என எதிர்ப்பார்த்தா?

அரசியல்னா என்ன?

குறிப்பாக நாயகன் இந்தியாவுக்கு/அரசியலுக்குப் புதிதாக வருகிறார் என்றால் அவர் ஒரு மீன்குஞ்சு போலவும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் முதலைகள் போலவும்தான் காட்டப்படுவர்.நமது நாயகன்தான் உலகின் கடைசி நல்லவனாக இருப்பார். ஆனால், ஒரே frameஇல் அரசியல் சாணக்கியத்தனங்களைக் கரைத்துக் குடித்து அவர்கள் எல்லாருக்கும் ஆப்பு வைப்பார்.

நாயகன், வயது 30

நாயகனுக்கு வயது கட்டாயம் 30-40தான் இருக்கவேண்டும். ஏன் என்றால் ‘இளைஞர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று அப்போதுதான் பல்லவி பாட முடியும். இதற்கு
முக்கியக் காரணம் இந்த வயது வரம்புக்குள் இருப்பவர்கள்தான் தியேட்டர்களுக்கு அதிகம் வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய Press meet

இவர்களது படம் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் மண்டையைப் பிய்த்துக்கொள்கிற அளவுக்கு அரசியல் நக்கல் வசனங்களும், வெற்று வசனங்களும் இருக்கும்.

இப்படி இன்னும் பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்,நமக்குத்தான் நேரம் பத்தாது. அந்தக் கால அரசியல் பிரச்சாரப் படங்களுக்கும் இந்தக் காலத்திய படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. MGR படங்களில் எல்லாம் ஒரு ஊழல்வாதி அரசனோ, மந்திரியோ இருப்பார். அவர்களை எடுத்தெறிந்து கண்டித்து MGR மக்கள் மனதை வென்று அங்கு அமர்வார். ஆனால் இன்று நிலைமை அப்படியா இருக்கிறது?

விஸ்வரூபம் படம் பார்க்கப் போனால் அங்கு உலகநாயகன் வீதியில் செய்ய வேண்டிய தன் பிரச்சாரத்தைத் திரையில் செய்கிறார்.விஜய் படம் பார்க்கப் போனால் அவர் எல்லா அரசியல்வாதியும் கெட்டவன் மக்கள் புரட்சி செய்ய வேண்டும் என்கிறார். மக்கள் புரட்சியிலேயே எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்றால் அப்புறம் நாட்டுக்கு ஒரு தலைவன் எதற்கு? ஒரு நல்ல தலைவனுடைய வேலை மக்களை ஒன்றிணைத்து சீர்படுத்துவதே தவிரக் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது அல்ல.

அப்போ சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது, அதானே?அப்படிச் சொல்லவில்லை, தாராளமாக வரட்டும் அது அவரவர் விருப்பம்.எந்த தொழிலிலும் இருப்பதை போன்று சினிமாவும் ஒரு தொழிலே. ஆனால் சினிமாவை முதலீடாக வைத்து ரசிகனின் ரத்தம் உறிஞ்சி அரசியல் என்ற பெயரில் அறுவடை செய்வது தான் தவறு என்கிறோம்.ஆனால் ஓட்டு வாங்குகிறேன் என்ற பெயரில் தவறான தகவல்களை மக்களுக்குக் குடுத்து அவர்கள் மனதை குழப்பும் வேலைதான் செய்ய வேண்டாம் என்கிறோம்.

தயவு செய்து இந்த whatsapp தகவல்களைச் சினிமா எடுக்கிறேன் என்ற பெயரில் மக்கள் மனதில் விதைக்காதீர். மக்கள் தியேட்டர்களுக்கு வருவதே இறுகிப் போய் உள்ள மனதை சிறிது நேரம் ஆறப்போடுவதற்குதான். அங்கேயும் இப்படிக் கருத்துச் சொல்கிறேன், வழி நடத்துகிறேன் என எங்களைப் படுத்தி எடுக்கவேண்டாம். ஆனாலும் நம் மக்களுக்கு ஒரு ராசி உண்டு. டிக்கெட் விலை 10 ரூபாய் விற்றாலும், 1000 ரூபாய் விற்றாலும் கடைசியில் என்னவோ மக்கள்தான் இளிச்சவாயர்கள்!

Article by : சிம்பியன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.