ரொம்ப நாள் கழிச்சு பாட்டையாவை ஆலமரத்தடியிலே பாத்ததுல எளந்தாரிப் பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷியாப் போச்சு. பாட்டையாகிட்டே கேக்கறதுக்கு ஒருபாடு கேள்வி வெச்சிருந்தானுவ.  பாட்டையா வழக்கம்போல எதுவும் பேசாம எல்லாரையும் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. இன்னிக்கு என்னடா கேக்கப் போறீங்க? அதையும் ஒரு கை பாத்துடறேன்னு சொல்லாம சொன்னாப் போல இருந்தது அவரோட பார்வையும் சிரிப்பும்.

 

மொள்ள நம்ம கணேசு எழுந்தான்.  பாட்டையா,  நேத்தைக்கு என்ன ஆச்சு தெரியுமா?

 

இந்த பெரியவங்க கதை சொல்லும்போது பயலுவ ம் கொட்டணும், இல்லேன்னா கதையை நிறுத்திப்புடுவாங்க. அது மாதிரித்தேன் இதுவும்.  சொன்னாத்தானே தெரியும்?னுட்டு பக்கத்துல திரும்பினார் பாட்டையா.  வழக்கம் போல கோவாலு வெத்திலையை காம்பு கிள்ளி,  நடுநரம்பை நீக்கி, சுண்ணாம்பு தடவி பாக்கையும் வைத்து மடித்துக் கொடுக்க அதை வாங்கி வாயில் அதக்கிக் கொண்டார் பாட்டையா.

 

கணேசு தொடர்ந்தான் நேத்தைக்கு டவுனுக்குப் போனேன் பாட்டையா.  அட பக்கத்துல இருக்க ஊருதானேன்னு வண்டியிலே ஹெல்மெட் போடாமப் போயிட்டேன். திரும்பி வரும்போது பிடிச்சிக்கிட்டான் ட்ராஃபிக் கான்ஸ்டபிளு.  எவ்வளவோ சொல்லியும் விட மாட்டேன்னுட்டான் பாட்டையா. அவங்கையிலே கட்டெறும்பு கடிக்க. எட்டாயிரம் ரூவா ஃபைன் போட்டுப்புட்டான் பாட்டையா. இந்த கவருமெண்டு உருப்படுமா?  இப்படி வயித்துல அடிக்கறானுவளே. இதுக்கு எதாச்சும் செய்யணும் பாட்டையா. நாமள்லாம் சேந்து போராட்டம் பண்ணுவோம். அதுக்கோசரம்தான் நீங்க வருவீங்கன்னு காத்து கெடக்கோம்

 

பின்னால் திரும்பி முதல் வெற்றிலைச் சாற்றை துப்பிய பாட்டையா சுற்று முற்றும் பார்த்தார்.  எதுக்குடே எட்டாயிரம்?

கணேசு ஆத்திரத்துடன் தொடர்ந்தான் ஹெல்மெட் போடாத்ததுக்கு ஆயிரமாம், லைஸென்ஸ் எடுக்காதத்துக்கு 5 ஆயிரமாம், இன்சூரன்ஸ் இல்லாததுக்கு 2 ஆயிரமாம். இதென்னா அநியாயக் கொள்ளை தாத்தா?

 

பாட்டையா அடுத்த வெற்றிலையை வாங்கி வாயிலே அதக்கிக் கொண்டார்.

 

கணேசு? எதுக்குடே லைஸென்ஸு?

 

அதான் பாட்டையா நானும் கேக்கறேன்.  இத்தினி வருசமா வண்டி ஓட்டறேன், லைஸென்ஸு இருந்தாத்தான் ஓட்ட வருமா?  அப்புறம் இன்ஸூரன்ஸு. ஏன் பாட்டையா, வண்டி தொலஞ்சு போனா போகுது சனியன்னு விட்டுட்டுப் போறேன், நானொண்ணும் காசுகேட்டுப் போட்டு அவிங்க வீட்டு வாசல்லயா நிக்கப்போறேன்? அப்புறம் எதுக்கு இன்சூரன்ஸு?  ஹெல்மெட்டு – எனக்கெதுனாச்சும் ஆனாக்கா அது என்னோடப் போவுது. இவிங்களுக்கு என்ன பாட்டையா?

சரியாச் சொன்னடே கணேசு, ஆனா பாருடே அதுல பாதிதான் சரி

 

என்ன பாட்டையா சொல்றீங்க?

 

பாட்டையா அங்குமிங்கும் பார்த்தார்.  எலேய் தங்கராசு, இங்க வாடே 

 

தங்கராசு பாட்டையா அருகில் வந்தான்.

 

தம்பீ நீ இப்போ என்ன செய்யற கண்ணு?

 

ஆட்டோ ஓட்டிக்கிட்டிருக்கேனுங்க பாட்டையா

கணேசு, தங்கராசுவைத் தெரியுமில்லே.  நல்லா அறிவாளிப் புள்ள. பத்தாப்புல நம்ம ஜில்லாவுலயே மூணாவதா வந்தாப்பல. ஆனா இன்னிக்கு ஆட்டோ ஓட்டுது. ஏன்?

 

தங்கராசுவைப் பார்த்தார் பாட்டையா.  ‘எங்கப்பாரு வண்டியிலே போகையிலே ஆக்ஸிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே போயிட்டாரு பாட்டையா.  ஹெல்மெட் போடாமப் போனாராங்காட்டி மண்டை செதறிடுச்சு. வீட்டுல நாந்தேன் மூத்த பிள்ளையில்லையா, அதேன் படிப்ப விட்டுப்போட்டு குடும்பத்தக் காப்பாத்த ஆட்டோ ஓட்டறேன் பாட்டையா?

 

தங்கராசுவை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார் பாட்டையா.  கவலைப்படாதப்பு. இன்னிக்கு எஞ்சீனியரிங்க் படிச்ச பயலுவ பல பேரு பட்டணத்திலே பைக்குல பலகாரம் கொண்டு போய்ட்டிருக்கானுவ.  இதுல ஒண்ணும் தப்பில்லேயப்பு. யாரயும் ஏமாத்தல, திருடல, பொய் சொல்லல, உழைச்சு சம்பாதிகறவனை எல்லாரும் கையெடுத்துக் கும்பிடணும். நீ போ சாமி 

 

ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த மாடசாமியை அழைத்தார்.  அடே மாடசாமி, அதென்னா மூலையிலே உக்காந்திருக்க?

 

என் பொழப்பே அப்படி ஆயிப்போச்சு பாட்டையா. மச்சு வீட்டுல இருந்த நாங்க இப்போ குச்சு வீட்டுக்கு வந்துட்டோம்

 

என்னடே ஆச்சு உனக்கு?

 

‘ என்னத்தச் சொல்ல பாட்டையா… ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு ராத்திரி ரெண்டாவது ஆட்டம் பாத்துட்டு திரும்பி வாரையிலே கொஞ்சம் கண்ணு அசத்திருச்சு.  டர்னிங்குலே ஒரு சைக்கிள்காரனை இடிச்சுப்புட்டேன். அவன் ஆஸ்பத்திரியிலே கெடந்து ஒரே வாரத்துல போயிட்டான்.

 

சரிடே அது விபத்து. அதுக்கு எதுக்கு நீ குச்சு வீட்டுக்குப் போகோணும்?

 

‘ அட போங்க பாட்டையா. என் வண்டிக்கு இன்ஸூரன்ஸ் இல்லே. அதான் செத்தவனுக்குக் குடுக்க வேண்டிய பணத்தை மச்சு வீட்டை வித்துக் குடுத்தேன்

 

அப்போது கொஞ்ச தூரத்தில் நடேசன் வரும் சத்தம் கேட்டது. ஆமாம், நடேசன் கட்டைக்காலுடன் நடந்து வரும்போது ஓசை நன்றாகக் கேட்கும். ஆனால் இங்கே ஓசைதான் முன்னாடி வரும், நடேசன் பின்னாடிதான் வருவான்.  தயவு செஞ்சு மாத்திப் படிச்சிடாதீங்க.

 

மெதுவாக நடந்து வந்து நடேசன் பாட்டையாவின் அருகில் அமர்ந்தான்.

 

நடேசு,  உனக்கு எப்படி கட்டைக்கால் வந்துச்சுன்னு கொஞ்சம் கணேசனுக்கு எடுத்துச் சொல்லப்பு

 

என்னத்தச் சொல்ல பாட்டையா.  எளந்தாரிப் பயலுவ பைக்குல ரேஸ் போடறேன்னு கண்ணுமண்ணுதெரியாம வண்டிய ஓட்டி ஓரமாப் போயிருந்த என்னை இடிச்சுத் தள்ளி – ஹெல்மெட் போட்டதால தலை தப்பிச்சு, ஆனா பின்னாடி வந்த காரு காலுல ஏறி… இப்போ ஜென்மமே கட்டைக் காலோட ஆயிப்போச்சு.  அந்த நாதாரிங்க மட்டும் என்னோட கையில கெடச்சா…

இப்போ சொல்லுடே கணேசு.  நீ எட்டாயிரம் கட்டினது எதுக்காவன்னு புரிஞ்சுதா?

 

அதெப்படி பாட்டையா.. இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்குன்னு சொன்னாத்தானே புரியும்!

 

நீ கேட்டாத்தானடே சொல்ல முடியும்

 

இருந்தாலும் ஆயிரம் ஆயிரமா கட்டணும்னு சொல்றது தப்பில்லையா பாட்டையா?

 

ஏண்டா கணேசு,  லட்ச ரூவா குடுத்து பைக் வாங்க முடியும், ஆனா நூறு ரூவா குடுத்து லைஸென்ஸ் எடுக்க முடியாது, ஆயிரம் ரூவா குடுத்து இன்ஸூரன்ஸை புதுப்பிக்க முடியாதோ?

 

ஆனாலும் திடீர்னு ஃபைனை ஏத்தினா என்ன அர்த்தம் பாட்டையா? இது இந்த மோடி கவருமெண்டு தமிழர்களைப் பழி வாங்கறதுக்கே செஞ்சிருக்கு

 

அப்போது மாரிமுத்து வந்தார்.  கூட்டத்தில் உட்கார்ந்திருந்த வேலயுதனைப் பார்த்து கத்தினார்  அடே கூறுகெட்ட குப்பா,  நான் ஒன்ன எங்கெங்கியோ தேடிட்டிருக்கேன். நீ இங்கே வந்து சம்மணம் போட்டி ஒக்காந்திருக்கியா? எழுந்திருச்சி வாடா

 

என்னா மாரிமுத்து, என்னாத்துக்கு வேலாயுதனைத் தேடிட்டிருக்கே?

என்னங்க பாட்டையா, மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடோணும், காலையிலே வெருசா வாடான்னு சொல்லியனுப்பிச்சேனுங்க.  நேரமே போட்டிருந்தா மேச்சலுக்குப் போயிருப்பேனுல்லா. இப்போ பாருங்க

 

என்னத்துக்கு மாரிமுத்து முக்கணாங்கயிறு?  அது ரொம்ப சாதுவான மாடாச்சே?

 

‘ என்ன பாட்டையா இப்படிக் கேட்டுப்புட்டீங்க.  எவ்வளவு நல்ல மாடானாலும் ஒரு பயம் இருந்தாத்தானே ஒழுங்கு மரியாதையா கெடக்கும்.  எதாச்சும் லொள்ளு செஞ்சா மூக்கணாங்கயிறைப் புடிப்பான்னு அதுக்குத் தெரியோணமில்லே. மூக்கணாங்கயிறு போடாட்டா மாடு எங்க அடங்கும்? அடங்காத மாடு அடிமாடுதேன்.

 

அதற்குள் வேலையுதனும் எழுந்து விட்டான்.  வாரோம் பாட்டையா என்றபடியே இருவரும் சென்றனர்.

கணேசு,  இப்போ புரியுதாடே…  இதெல்லாம் உனக்கு மூக்கணாங்கயிறுலே. உன்னையென்னா வண்டியிலே இன்ஸுபெட்டரையா ஏத்திட்டுப் போகச் சொன்னாவ?  லைஸென்ஸு இன்சூரன்ஸ் ஆர் சி புக் ஹெல்மெட்டு இதைத்தானடே கொண்டுபோவ சொன்னாவ? இதுக்கே அலுத்துக்கிட்டா எப்புடி?  ஒரு தடவை மூக்கணாங்கயிறு போட்டுட்டாவல்ல. அடியாத மாடு படியாதுடே. இனிமே ஒழுங்கு மரியாதையா போவியா?

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.