
1986 ஜூன் மாதம் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கங்கா செயல் திட்டத்தை Ganga Action Plan (GAP) தஷாஸ்வமேதா படித்துறையில் தொடங்கி வைத்தபோது 1990ஆம் வருடத்திற்குள் நம் கலாச்சாரத்துக்கும் ஆன்மீகத்துக்கும் பெட்டகமான கங்கை நிச்சயமாக தூய்மைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் பெரிய எதிர்ப்பர்ப்புகளுடன் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம் படு தோல்வியை தான் தழுவியது. 1986ஆம் வருடத்தை விட மிகவும் கேவலமான நிலையில் இந்தியாவின் மிக நீளமனாதும், புனிதமானதுமான கங்கையில் அசுத்தமே மிகுந்திருந்தது.
பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக (குஜராத்தின் முதல்வராக இருந்த போது) வாரணாசியில் திரு மோடி அவர்கள் 2014ல் கங்கையை தூய்மைப் படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தததை அப்பொழுது மக்கள் யாரும் நம்பவில்லை. பழைய சரித்திரம் அப்படி! 2015ல் “நமாமி கங்கே” (Namami Gange) என்கிற திட்டம் ஆரம்பித்து ரூ20,000 கோடி அத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பிறகும் கூட பழைய தோல்விகளில் இருந்து பாடம் கற்று இந்தப் புதிய திட்டத்தை சரியாக இந்த அரசு அமல்படுத்துமா என்றே அனைவரும் சந்தேகப்பட்டனர். ஆனால் மோடி கங்கையின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமல்லாமல் இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் தூய்மை படுத்த பெரு முயற்சியை மேற்கொண்டார்.
நாலரை வருடங்கள் பிறகு மோடி அரசு கங்கை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் எவ்வாறு எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டது என்று பார்ப்போம். காங்கிரஸ் அரசு கண்ட சவால்களை இவர்கள் எப்படி சந்தித்தார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
கங்கையை புனரமைப்பதில் பல்துறை சார்ந்த சவால்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய மாநில அரசுகளின் அதிகரிக்கப்பட்ட கண்காணிப்புடன் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட பணிகள், இடைநிலை பணிகள், நீண்டகால பணிகள் என்று பிரிக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது உடனடியாக பார்த்ததும் மாற்றத்தை ஏற்படுத்துதல், பின்னர் 5 ஆண்டு காலத்தில் முடிக்கும் பணிகளை நிறைவு செய்தல், தொடர்ந்து 10 ஆண்டுக்கு நீண்டகால பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கான்பூர் நகர கழிவு நீர் கங்கையில் வந்து கொட்டப்பட்டு வந்தது. 5.5 லட்சம் கட்டிடங்களில் 1.76 கட்டிடங்களில் தான் மாநகராட்சி அமைத்துக் கொடுத்த கழிவுநீர் தொடர்பு இருந்தது. அதாவது 32% தான் சரியான கழிவு நீர் கால்வாய்க்கு வழி இருந்தது. பிரயாக்ராஜிலும் வாரணாசியிலும் 20-30% தான் சரியான கழிவு நீர் பாதை உள்ளது, மற்றவை எல்லாம் திறந்த வழி சாக்கடைகள் தான். இந்த சாக்கடைகள் கடைசியில் வந்து சேரும் இடம் புனிதமான கங்கை நதி தான். இதை மாற்ற அடிப்படை வசதி உள்கட்டமைப்பு பெரிய அளவில் தேவையாக இருந்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு மையம் 2013 ஆம் ஆண்டு அறிக்கையில் ஒவ்வொரு நாளும் 2,723
மில்லியன் லிட்டர் கழிவுகள் நதியோரம் உள்ள 50 நகரங்களில் இருந்து உற்பத்தியாகிறது என்று தெரிவித்தது. கழிவு நீர் தனி தொடர்பு இல்லாததால் நதியின் மாசு 85% இதனால் மட்டுமே ஏற்படுகிறது.
இதில் தொடக்க நிலை பணிகளில், முதல்கட்டமாக நதியின் மேற்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. அதாவது நீரின் மேற்பரப்பில் காணப்படும் மிதக்கும் கழிவுகள், ஊரகபகுதிகளில் இருந்து கலக்கும் கழிவுகள், மாசுகளை அகற்றும் பணிகள், மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஊரகப்பகுதிகளில் ஆற்றோர கிராம மக்களுக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கழிவுநீர் சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டு அவை சுத்திகரிக்கப்பட்டது. அடுத்ததாக கங்கையில் எரிக்கப்படாத, அல்லது பாதி எரிக்கப்பட்ட பிணங்கள் வீசுவதை தடுக்க அதன் கரையோரங்களில் நவீன முறையிலான சுடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நதியுடனான இணைப்பு கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு அதன் மூலம் கழிவுகள் கலப்பது தடுக்கப்பபட்டு கங்கை தூய்மையாகி வருகிறது. நமாமி கங்கே திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் 133கழிவுநீர் கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் கழிவுநீர் சுத்திகரிப்பு கொள்ளளவு 3,969 MLD ஆக இருக்கும், 4,870 கிமீ நீளத்துக்கு கால்வாய்கள் அமைக்கப்படும்.
கழிவுநீர் வரத்து எவ்வளவு என்கிற கணிப்பை ராஜீவ் காந்தி அமைத்த திட்டத்தில் (GAP) அவர்கள் சரியாக செய்யவில்லை. அதனால் அதற்கான சரியான ஏற்பாட்டையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை. அதில் ஏற்பட்ட தவறுகளை ரகு தயால் சமர்ப்பித்த அறிக்கை தெளிவுபடுத்தியது. மத்திய மாசு கட்டுப்பாட்டு மையம் கணித்ததை விட 120% அதிகமாக கங்கையில் கழிவுநீர் கலந்தது என்று அவ்வறிக்கை சொல்கிறது.
முதல் இரண்டு வருடம் இத்திட்டம் மிகவும் மெதுவாக தான் சென்றது. நமாமி கங்கே (தூய்மை கங்கை) திட்டத்திற்கு முன்பு சரியான ஒருங்கிணைந்த கொள்கை இல்லை, மக்களுக்கு உதவும் அரசு நிறுவனங்களுக்குள் ஒற்றுமை இல்லை. இதை சரி செய்ய கொஞ்சம் காலம் ஆகியது என்று நிதின் கட்கரியின் கீழுள்ள கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் ஓர் அதிகாரி ஸ்வராஜ்யா பத்திரிக்கையிடம் கூறியுள்ளார். மேலும் தற்போது விரைவாக செயல்கள் நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை பொறுத்தவரை அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டங்கள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கங்கை நதிக்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படவேண்டும் என்றும், மாசு ஏற்படுத்தும் கழிவுகள் துளி அளவு கூட ஆற்றில் கலக்காமல் நிறுவனங்கள் கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்த திட்டம் தொடங்கி இரண்டு வருட காலத்திற்குப் பிறகு தான் எடுக்க ஆரம்பித்தன. இதற்கான காலவரம்புகளும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி அனைத்து தொழிற்சாலைகளும் கழிவுகள் கண்காணிப்பு வசதியை ஆன்லைன் மூலம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பல்லுயிர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, நீர்தர கண்காணிப்பு போன்ற திட்டங்களும் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடையாளச் சின்ன உயிரினங்களான தங்க பெளிமீன், டால்பின், நன்னீர் முதலை, ஆமைகள், நீர் நாய்கள் உள்ளிட்டவற்றை காக்கவும் இதில் சிறப்புத்திட்டம் உண்டு. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. தற்போது டால்பின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது இந்த திட்டத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது.
தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ஏக்கரில் காடு வளர்க்கும் திட்டமும் அடங்கும். இதன் மூலம் நீர்தேங்கும் அளவு அதிகரிப்பதுடன் மண் அரிப்பும் தடுக்கப்படும், நதி நீர் சுற்றுச்சூழலும் மேம்படும். காடுவளர்ப்புத் திட்டம் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர நதிநீர் தரம் குறித்து ஆய்வு செய்ய 113 நீர் தர ஆய்வு மையங்களும் அமைக்கப்படும்.
தற்போது 26 கழிவுநீர் ப்ராஜெக்ட்கள் முடிவுற்றிருக்கின்றன. 328 MLD கழிவுநீர் சுத்திகரிப்பும் கழிவுநீர் கால்வாய்கள் சுமார் 2,000 கிமீ தூரத்திற்குப் போடப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் கால்பங்கு மாசு கங்கையில் கலந்து அசுத்தப்படுத்தும் பிரயாக்ராஜில் 175 கிமீ கழிவுநீர் கால்வாயை டிசம்பர் 16 பிரதமர் மோடி திறந்து வைத்தார். இன்னும் 44 கழிவுநீர் கட்டமைப்புகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் 855 MLD அளவு கழிவுநீர் சுத்திகரிக்கப்படும்.
ராஜீவ் காந்தி ஏற்படுத்திய முதல் திட்டத்தோடு ஒப்பிடும்போது இந்த திட்டம் பன்மடங்கு அதிக கழிவுநீரை சுத்தப்படுத்த மேற்கொண்டுள்ளது தெரியவருகிறது,
அதனால் பெரிய முன்னேற்றங்களும் தெரிய ஆரம்பித்து உள்ளன. கான்பூரில் உள்ள மிகப்பெரிய கழிவு நீர் சாக்கடை தற்போது முழுதுமாக சுத்திகரிப்பு ஆலையுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் கங்கை நதியின் தூய்மையை சோதிக்க அமைப்பு உள்ளது. அவை நீரில் பிராணவாயு அதிகரித்து உள்ளதை பதிவு செய்துள்ளது.
ஆனால் இன்னும் மாறாமல் இருப்பது கழிவு நீர் அளவின் கணிப்பு தான். GAP திட்டத்தில் மக்களுக்கு கொடுக்கப்படும் நீரின் அளவில் 80% கழிவு நீராக திரும்பி வரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவை சரியாக அவர்களால் கணிக்க முடியவில்லை. தற்போது அது கொஞ்சம் சரியான அளவில் கணிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். இது உண்மையாகத் தான் இருக்கவேண்டும். 2018ல் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு அட்டவணைப்படி மக்களுக்கு வழங்கப்படும் நீர் அளவை கணக்கெடுக்க ஆழ்துளை கிணறு, அடி பம்பு, கிணறுகள், நகராட்சி விநியோகிக்கும் தண்ணீர் ஆகியவை சிரத்தையுடன் கணக்கில் கொண்டுவரப்படுகிறது என்று தெரிகிறது. அதனால் கழிவுநீர் கணக்கெடுப்பும் இப்பொழுது அதிக துல்லியத்துடன் தெரியவருகிறது.
சரியான மேற்பார்வையும் சொல்லப்பட்ட வேலை செயப்பட்டதா என்கிற கண்காணிப்பும் அற்ற நிலையே இந்தத் திட்டத்தின் கேடாக இருந்தது 2013ல் மாசு கட்டுப்பாட்டு மையம் எட்டு இடங்களில் தண்ணீரில் இருக்கும் பிராணவாயுவின் அளவு சரியான நிலையில் இல்லை என்று கண்டுபிடித்து குறிப்பிட்டுள்ளது. இது தண்ணீரின் மாசுத் தன்மையை தான் காட்டுகிறது. அதே போல மேற்கு வங்காளம் பீகார் பகுதிகளிலும் இதே நிலைமை தான். கான்பூர் அருகில் வீடுகள் அமைந்திருக்கும் பகுதியில் தோல் பதனிடும் நிறுவனங்கள் எல்லா அசுத்த நீரையும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளையும் கங்கையில் கலப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதற்குக் காரணம் அதிகமான மின் தடை ஏற்பட்டு வந்ததால் என்றும் தெரிந்தது. அதனால் அந்த நிறுவனங்களை குறை சொல்லியும் பயனில்லை. நம்முடைய infrastructure பலப்படுத்தப்பட வேண்டும் என்று தான் இது சுட்டிக்காட்டுகிறது.
அடிமட்ட நிர்வாகத்தினரை அரசு பயன்படுத்தி மூன்று லெவல் கண்காணிப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது, மத்திய, மாநில, மாவட்ட அளவில் நமாமி கங்கே திட்டத்துக்கு எல்லாரையும் பொறுப்பேற்க வைத்துள்ளது.
GAP திட்டத்தின் தோல்விக்கு இன்னொரு காரணம் குறைந்த அளவு நீர் கங்கையில் சென்று அடைந்ததே. தண்ணீர் கங்கையில் கொட்டிய வண்ணம் இருக்க வேண்டியது மீன் வளம் மிக்க சுற்று சூழல் பாதுகாப்புக்குத் தேவையானது. மீன்களே தண்ணீரை தூய்மையாக வைக்கவும் உதவுகிறது. நிறைய நீரை பாசனத்துக்கு அலிகர், ஹரித்வார் பகுதியில் திருப்பி விட்டதால் கங்கையில் போதுமான நீரில்லாமல் மீன்கள் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் 40% பாசன நிலங்கள் கங்கை கரையோரம் அமைந்திருப்பதே நீரை கங்கையில் இருந்து பாசனத்துக்குத் திருப்பி விடப்படுவதற்கான சான்றாகும்.
நமாமி கங்கே திட்டம் மிக முக்கியமாக மீன்கள் வாழ தேவையான நீரை கங்கையில் இருக்குமாறு செய்ய போதிய வழிவகைகளை வகுத்திருக்கிறது. மத்திய அரசு போன வருடம் அக்டோபர் மாதத்தில் கங்கையில் வருடம் முழுவதும் போதிய அளவு நீர் இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
புனல் மின் நீர் வழங்கல் திட்டங்கள் மத்திய அரசு விதித்திருக்கும் சட்ட திட்டங்கள் படி செயல்படவேண்டும் என்பதும் கண்காணிக்கப்படுகிறது. நீரில்லாத நேரத்தில் மின் உற்பத்தி குறைவாகவே இருந்ததாக தயால் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் மாநில மத்திய அரசுகள் மின் உற்பத்திக்கு அதிக அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளாமல் நதியில் போதிய அளவு நீர் வைத்தே மிச்சத்தை மின்சாரம் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
கங்கை நதிக்கு பத்து முக்கிய கிளை நதிகள் உள்ளன. இந்தியாவின் 26% நிலப்பகுதி இந்த கிளை நதிகளால் தான் நீர்வரத்தைப் பெறுகின்றன. சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் இந்த கிளை நதிகளில் கலந்து யமுனை நதி (உலகிலேயே மிக அசுத்தமான நதி யமுனை தான்) முதற்கொண்டு அனைத்து மாசடைந்த நீரும் ஒரு கட்டத்தில் கங்கையில் வந்து கலக்கின்றன. அதனால் எந்த திட்டமும் இந்த நிலைமையை சீர்திருத்தாமல் கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சி வீணாகும்.
GAP திட்டத்தில் இருந்தது போல் இல்லாமல் நமாமி கங்கே திட்டத்தில் இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டு திட்டமிடல் நடந்து வருகிறது.
உத்தரகான்ட், உத்தரபிரதேசம், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஹரியானா, தில்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் 30 கிளை நதிகளை சுத்தப்படுத்தும் திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 1353 MLD அசுத்த நீர் சுத்தீகரிக்கப்பட்டு 436கிமீ கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியினால் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகின்றது. நேரடியான கண்காணிப்பினால் கங்கையின் கிளை நதியான இராம கங்கா நதி கங்கையை கலக்கும் முன் பரிசோதிக்கப்பட்ட124 இடங்களில் நீர் தரம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
வெளியிடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பது GAPயின் குறிக்கோளாக இருந்தாலும் மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் தான் அது செயல்பாட்டில் வந்துள்ளது. 99.93% கங்கைக் கரையோர கிராமங்கள் டாய்லெட் வசதி பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2.7மில்லியன் டாய்லெட்கள் கங்கை கரையோரமுள்ள 4,000 கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ளன. இதனால் மலஜலம் கங்கை தண்ணீரில் கலக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
இதன் முடிவுகள் தண்ணீரின் சுத்த அளவில் பிரதிபலிக்கின்றது. 2014ல் பித்தூர் (கான்பூர்) பகுதியில் கங்கையில் கலக்கும் மலத்தின் அளவு 3,500 per 100 ml. 2,500 per 100 ml தான் அதிகப்படியாக தண்ணீரில் கலக்க அனுமதிக்கப்பட்ட அளவு. 2017ல் சேகரிக்கப்பட்ட தகவல்படி பிதூரில் 1600 per 100 ml தான் உள்ளது. இதே போல முன்னேற்றம் ராஜ்காட்டிலும் ரேய் பரேலியிலும் கண்கூடாக தெரிகிறது.
பல சவால்கள் இன்னும் உள்ளன. செப்டிக் டேங்குகள் இன்னும் பல கிராமங்களில் சரியாக அமைக்கப்படவில்லை. அதனால் கழிவுநீர் அப்புறப்படுத்துதல் இன்னும் சரியான முறையில் செயல்படவில்லை.
இந்த நீண்டகால திட்டத்தின் கீழ் ஆற்றில் தொடர்ச்சியாக சீரான நீர் வரத்துக்கும் வழிவகை செய்யப்படும். பாசனத்திற்கும் பயன்படும். கங்கை நதி சமூக, பொருளாதார, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதனை தூய்மை படுத்தும் பணி சற்று சிக்கலான விவகாரமாகும். மேலும் பல்வேறு பயன்பாடுகளில் நதி சுரண்டலுக்கு ஆளாகிறது. எனவே இப்படி ஒரு சிக்கலான பணி உலகின் எந்த பகுதியிலும் மேற்கொள்ள முடியாததாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமுதாயத்தினரும் இதற்கு ஆதரவு தந்தால்தான் திட்டம் செயல்வடிவம் பெறும்.
மோடி அரசு பல சோதனைகளை தூய்மை கங்கை திட்டத்தில் சந்தித்தாலும் மிகப்பெரிய தடங்கல்களை தாண்டி வந்திருக்கிறது என்று சொல்லலாம். பிரதமர் வேட்பாளராக 2019ல் தேர்தலை சந்திக்கும்போது மோடி அவர்கள் மற்ற எந்த பிரதமரும் கங்கையை தூய்மைப்படுத்த செய்யாத அளவு தான் செய்ததை பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்
அருமை…நல்ல ஆராய்ச்சி.. பல விஷயங்களை அறிந்து கொண்டேன்