
நம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை உட்கார வைத்து காபி சாப்பிடறீங்களான்னு கேட்டேன். உடனே பொங்கிட்டாருன்னா பாத்துக்கிடுங்களேன்.
“அதென்ன டோலர் இங்கே இருக்கற திராவிட தமிளனெல்லாம் டீ குடிக்கும்போது ஆரிய பார்ப்பன வந்தேறிகள் மட்டும் காபி மட்டும் குடிக்கறீங்க? குடிக்கற பானத்துல கூடவா வித்தியாசம்?”
எனக்கு புரியவில்லை.
“ஏங்க காப்பி குடிச்சா தப்பா?”
“ஆமாம், டீ தான் மக்களோட பானம். காப்பி மேட்டிமைத்தனத்தின் அடையாளம்”
“டீ எங்கே விளையுது?”
“ஊட்டியிலே”
“காப்பி எங்கே விளையுது?”
நண்பர் கொஞ்சம் ஜகா வாங்கினார். “எங்கே விளைஞ்சாலும் அது தமிழ்நாட்டு பானம் கிடையாது. அதுவும் உங்களை மாதிரியே வந்தேறி”.
“நீங்க சொன்னீங்களே டீ, அதுவும் வந்தேறி பானம்தான். இந்தியாவில் தோன்றியது கிடையாது. நமது பானம் கூழும் நீராகாரமும்தான். அதுக்கென்ன சொல்றீங்க?”
எப்போதெல்லாம் செம்மையாக அடி வாங்குகிறாரோ அப்போதெல்லாம் பேச்சை திசை திருப்புவது நண்பரின் வழக்கம்.
“நான் உங்களை மாதிரி கிடையாது. மக்களோடு மக்களாகப் பழகுவேன். எங்க தெரு முனையிலே இஸ்திரி கடை வெச்சிருக்கானே முனுசாமி, அவனோட பையன், பி ஏ படிச்சிட்டு வேலை இல்லாம சுத்திக்கிட்டிருந்தான், நாந்தான் அவனை பாங்க் வேலைக்கு அப்ளை பண்ணச் சொன்னேன், நம்ம பையனுக்காக வாங்கி வெச்சிருந்த புக்ஸையெல்லாம் அவனுக்குக் குடுத்து படிக்கச் சொன்னேன். இப்போ பாருங்க, அந்தப் பையன் இப்போ பாங்கிலே ஒரு ப்ரோபேஷனரி ஆஃபீஸரா இருக்கான்”.
நண்பர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே முனுசாமி இஸ்திரி பண்ண என்னோட துணிகளைக் கொண்டு வந்தார். துணியை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுக்கும்போது நண்பர் கேட்டார் “என்ன முனுசாமி, பையன் ஒழுங்கா வேலைக்குப் போறானா?”
“அய்யா, உங்க புண்ணியத்துல ஒழுங்க போறான்யா” என்றார் முனுசாமி.
“இனிமே என்னாத்துக்கு இந்த வேலைன்னு விட்டுடுவியா இல்லே தொடர்ந்து இஸ்திரி போடுவியா?” என்று கேட்டார் நண்பர்.
“அதெப்படீங்கய்யா விட முடியும்? ஒடம்புல தெம்பு இருக்க வரைக்கும் உழைச்சு சம்பாதிக்கணுங்கய்யா. அப்படியே முடியாட்டாலும் ஒங்க துணிய மட்டுமாவது இஸ்திரி போட்டு குடுப்பேங்கய்யா”
நண்பர் பெருமிதத்தோடு என்னைப் பார்த்தார். “பார்த்தீங்களா டோலர், இன்னைக்கு முனுசாமியோட பையன் ஒரு ஆஃபீஸரா இருக்கான்னா அது நான் போட்ட பிச்சை” என்றபடி முனுசாமியைப் பார்த்து “இந்த விசுவாசம் கடைசி வரைக்கும் இருக்கணும் முனுசாமி” என்றார்.
அதற்குள் என் மனைவி காபியுடன் குழிப்பணியாரத்தை எடுத்து வர இருவரும் ஒரு பிடி பிடித்தோம்.
கொஞ்ச நேரத்தில் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால் முனுசாமியின் மகன் ரஞ்சித்.
“என்னப்பா ரஞ்சித்? இஸ்திரி துணிக்கு அப்பவே அப்பாகிட்டே காசு கொடுத்திட்டேனே” என்றேன்.
“இல்லீங்கய்யா. அந்த நாதாரியக் கொஞ்சம் வெளியே அனுப்புறீங்களான்?” என்றான்.
“யாரப்பா சொல்றே?”
“பிச்சை போடற பெருமாள் ஒருத்தர் இருக்காரே, அவரைத்தான்”
“அப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசாதே ரஞ்சித்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே நண்பர் வெளியே வந்தார்.
“என்னா ரஞ்சித், வேலையெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு?”
“அடி ———- ——, யாரப் பாத்துடா பிச்சை போட்டேன்னு சொன்னே? நீ குடுத்ததெல்லாம் பத்து வருசத்துக்கு முன்னாடி இருந்த புக்கு. பழய பேப்பர் கடைக்குப் போட்டா பத்து ரூபா கூட வந்திருக்காது. ஆனா எங்கப்பனை ஏமாத்தி இதோட வெலை 500 ரூபாயாக்கும்னு சொல்லி இஸ்திரிக்குக் குடுக்க வேண்டிய 250 ரூபாயை ஆட்டயப் போட்டவந்தானே நீ. என்ன திமிர் இருந்தா என்னோட வேலை நீ போட்ட பிச்சைன்னு சொல்லுவ? நான் கஷ்டப்பட்டு படிச்சு பரிட்சை எழுதி வேலைக்குப் போனா அது நீ போட்ட பிச்சையா? தி—— நா—– இனியொரு தடவை இது மாதிரி சொன்னியானா ————– —————- ———-“ பொங்கிவிட்டான் ரஞ்சித்.
நண்பரின் முகம் வெளிறி விட்டது.
நிலைமையை சமாளிக்க நான் ரஞ்சித்தைப் பேசி அனுப்பி விட்டு நண்பரை உள்ளே அழைத்து வந்தேன்.
“விடுங்க நண்பரே. இந்த ரஞ்சித்துக்குக் கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி. எதோ எடுத்தெறிஞ்சிட்டுப் போயிட்டான்.”
“இல்லே டோலர், அவங்கப்பனைப் பாத்தீங்களா? எப்படி இன்னைக்கும் விசுவாசமா இருக்கான்? இவிங்களுக்கெல்லாம் சோத்துக்கில்லாம கஷ்டப்பட்டாத்தான் புத்தி வரும். ஏழையாச்சேன்னு ஹெல்ப் பண்ணப் போனேன் பாருங்க, என் புத்தியை செருப்பால்தான் அடிச்சிக்கணும்” நண்பர் மிகவும் வருந்தினார்.
கொஞ்ச நேரத்தில் ரஞ்சித் திரும்பி வந்தான். அவன் கையில் ஒரு பழைய புத்தகம்.
“யோவ் இந்தாயா நீ குடுத்த புஸ்தகம். இதை வெச்சு ஒண்ணும் கிழிக்க முடியாது. இதை வெச்சு பரிட்சை எழுதின உன் புள்ளை இன்னைக்கும் வேலை வெட்டிக்குப் போகாம பொறுக்கிட்டிருக்கு. இந்தா இதை நீயே வெச்சுக்க” என்று தூக்கி விசிறியடித்தான்.
நண்பர் கொஞ்சம் யோசித்து “இங்கே வாப்பா, நான் உன்னை இழிவுபடுத்தணும்னு பேசலை. எதோ என் குடும்பம் உங்களுக்குச் செஞ்ச நல்லதையெல்லாம் ஞாபகப்படுத்தணுமுன்னுதான் சொன்னேன். உனக்குக் கஷ்டமா இருந்தா நான் வருந்துகிறேன்” அப்டீன்னு ரொம்பப் பெருந்தன்மையா சொன்னார்.
நண்பர் சொன்னது நடந்தே விட்டது. சப் என்று ஒரு சத்தம்.
“ஏண்டா —– உன்னோட வருத்தத்தைத் தூக்கி குப்பைல போடு. எவனுக்கு வேணும் உன் வருத்தம்? மன்னிப்பு கேளுடா, நான் சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு. அதுவரைக்கும் உன்னியப் பாக்கும்போதெல்லாம் நாக்கப் புடுங்கிக்கறா மாதிரி கேட்டுக்கிட்டே இருப்பேன். ஏழைகள்னா அவ்ளோ எளக்காரமாப் போச்சா ஒனக்கு? இனிமே ஏழைகளைப் பத்தி எதாச்சும் பேசினா நான் மட்டும் இல்லே, போற வரவனெல்லாம் இதைத்தான் செய்வான்” ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்து “அய்யா தப்பா நினைச்சுக்காதீங்க, இவனை மாதிரி ஆளையெல்லாம் இப்படி டீல் பண்ணாத்தான் திருந்துவானுங்க” என்றான்.
அவன் போறவரைக்கும் அமைதியாக இருந்தார் நண்பர்.
அவன் தெருமுனையைத் திரும்பி விட்டான் என்று தெரிந்தவுடன் கடுப்புடன் என்னைப் பார்த்தார்.
“இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்னு தெரியும் டோலர். எங்களையும் ஏழை மக்களையும் பிரிக்க நீங்கள் செய்த சதின்னு எனக்கு புரிஞ்சு போச்சு. ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்குங்க. உங்க சதித்திட்டம் பலிக்காது” என்றபடியே வீட்டை விட்டு வெளியேறினார் நண்பர்.
ஸ்ரீஅருண்குமார்