கடவுளுக்கு உருவம் கிடையாது. கடவுளுக்கு நிறமில்லை,மணமில்லை, எடையில்லை, பெயரில்லை.

இப்படியெல்லாம் நான் சொன்னால் உடனே பெரும்பாலான ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மத்தவங்க ஏற்றுக் கொள்வதற்காக நான் எழுதுவதில்லை,
நான் ஆய்ந்தறிந்த உண்மைகளை மட்டுமே எழுதுவேன் என்பதால் கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள்.

சமீபத்தில் நெல்லை கண்ணன் என்பவர் சர்ச்சைக்குரிய விதமாக, அதென்ன சர்ச்சைக்குரிய, சர்ச்சையெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே, வன்முறையைத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்திலே, கலவரங்கள் மூள வேண்டும் என்ற மீளாத ஆசையிலே வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார். என்ன செய்வது? பசி வந்தால் பத்தும்
பறந்து போகும். காசு ஆசை வந்து விட்டால் பத்தென்ன நூறு ஆயிரம் கூடப் பறந்து போகும்.

இதுநாள்வரை ஒரு தமிழறிஞராக அறியப்பட்டார். ஆனால் இப்போதுதான் தெரிகிறது இவரைப் பற்றி நாம் அறிந்தவற்றை விடவும் அறியாததுதான் அதிகமென்று.
இவர் பேசுகிறார்: “ நான் ஹிந்து அல்ல. நான் சைவ சமயத்தைச் சார்ந்தவன். சைவ சமயம் என்பது தமிழர்களின் சமயம். சைவ சமயக்குறவரான மாணிக்கவாசகரே
கடவுளுக்கு உருவம் கிடையாது என்று கூறியிருக்கிறார்”

இவர் மட்டுமா? சமீப காலமாக தமிழர்கள் ஹிந்துக்கள் கிடையாது. தமிழர்களுக்கு என்று ஒரு மதம் இருக்கிறது. அதற்கும் ஹிந்து மதத்துக்கு தொடர்பும் கிடையாது என்று
பலர் பேச ஆரம்பித்திருக்கின்றனர். பழ.கருப்பையாவாவது அவ்வப்போது ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அடுத்த கட்சியைத் திட்டுவது என்பதை வாடிக்கையாக வைத்துக்
கொண்டிருப்பவர். ஆனால் ஹிந்துமதத்தின் மதிப்பிற்குரிய ஆன்மீகப் பேச்சாளராக அறியப்பட்ட சுகி.சிவம் அவர்களும் இவ்வாறு ஆரம்பித்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவே இந்தக்
கட்டுரை.

தமிழர்களின் மதம் சைவம். அவர்கள் ஹிந்து மதத்தை ஏற்க மாட்டார்கள் என்று கூறும் விலைபோன மாந்தர்களுக்கு ஒரு கேள்வி. ஹிந்து மதத்தை உங்கள் தமிழர் மதம்
ஏற்கவில்லையென்றால் பிற மதங்களை ஏற்குமா? அல்லது உங்கள் வாதத்தின்படி பிற மதங்களை ஏற்றவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மதத்தினரை இழிவுபடுத்துவது ஆகாதா?

சரி, சைவம் என்பது என்ன? ஹிந்து மதத்தின் பெரும்பிரிவுகளாக ஆறினைக் குறிப்பிடுவார்கள். சைவம் – சிவனைக் கும்பிடுவது, வைணவம் – விஷ்ணுவைக் கும்பிடுவது, சாக்தம் – சக்தி வழிபாடு, கௌமாரம் – முருக வழிபாடு, காணபத்யம் – கணபதியைத் தொழுவது, சூரியனைத் தொழுவது என்பது இந்த ஆறாகும்.

சைவர்கள் தொழும் சிவன் யார்? முருகன் என் முப்பாட்டன் என்று கூறும் வாய்தான் பிள்ளையாரை வந்தேறியின் கடவுள் என்கிறது. முருகன் வேறு குமரன்/கார்த்தியேன்
வேறு என்று விளக்கம் கொடுக்கிறார் சுகி.சிவம். பாவம், வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை போலும். முருகனை மால்மருகன் அதாவது திருமாலின் மருமகன் என்கிறோமே
அப்போ கார்த்திகேயன் யார்? ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் – துர்கை, அம்பிகை, அம்பாள், அம்மன், சக்தி, பராசக்தி என்று பல பெயர்களில் வழிபட்டாலும் அதெல்லாம் ஒரே தெய்வம்தானே? அப்படித்தான் ஆறு கார்த்திகைப் பெண்களால் எடுக்கப்பட்ட முருகன் கார்த்திகேயன் ஆனான். கந்த கடம்பா கார்த்திகேயா என்ற கோஷம் இவர் காதில் மட்டும் விழவில்லை போலும்.

சங்கப்பாடல்களில் பாரத யுத்தம் பற்றியும் மஹாபாரதத்தில் யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பாண்டிய மன்னர்கள் உணவு அளித்தது பற்றியும் வருவது இவர்களுக்குத் தெரியாவிட்டாலும் எமக்குத் தெரியுமே!

சரி, தொடங்கிய விஷயத்துக்கு வருவோம். மாணிக்கவாசகரே கடவுளுக்கு உருவம் இல்லை என்று கூறிவிட்டார் என்று ஏதோ புதுசா கண்டுபிடித்தது போல உளறிக்கொண்டிருக்கிறர் நெல்லை கண்ணன். மாணிக்கவாசகர் தொழும் தெய்வம் எது எனத் தெரியுமா? அவர் பாடிய திருவாசகம் யாரைக்குறித்து என்று தெரியுமா? ஹிந்து மதத்தைப் பற்றித் தெரியாதவர்களிடம் எந்தப் புளுகை வேண்டுமானாலும் அடித்து விடலாம் நெல்லை கண்ணன் அவர்களே. இங்கே உங்கள் வேடம் கலைந்து நிற்கிறது.

ஹிந்து மதம் என்பது ஒரு மஹா சமுத்திரம். நுனிப்புல் மேய்ந்து விட்டு தாங்கள்தான் மேதைகள் என்று சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தின் முகத்திரை கிழியும் நேரமிது.
ஹிந்து மதம் வேதங்கள், இதிஹாசங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள் என்று பல அமைப்புக்களைக் கொண்டது. இவற்றையெல்லாம் கற்றுணர ஒரு ஜென்மம் போதாது.
வேதவியாசர் எழுதியது பிரம்மசூத்திரம். உபநிஷதங்களையும் வேதத்தின் தத்துவங்களையும் பிழிந்து கொடுத்த சாரம் என்று கூறுவார்கள். இந்த பிரம்ம சூத்திரம்
என்ன சொல்கிறது தெரியுமா? அதுதான் கடவுளுக்கு நிறம் கிடையாது, உருவம் கிடையாது, பெயர் கிடையாது, எடை கிடையாது என்று கூறிக்கொண்டு போகிறது. அப்புறம் ஏன் இத்தனை கடவுள்கள்? இத்தனை உருவங்கள்? என்ற கேள்வி எழலாம்.

இங்கேதான் ஹிந்து மதத்தின் நுட்பம் மறைந்திருக்கிறது. ஒரு மாணவன் ஓவியம் கற்க வேண்டுமென்றால் முதலில் ஏற்கெனவே வரையப்பட்ட ஓவியத்துக்கு வண்ணம் தீட்டிப்பழக வேண்டும். பிறகு புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைய வேண்டும். இப்படிப் படிப்படியாக தன் கற்பனையிலிருந்து வரையும் அளவுக்கு அவனைத் தயார் செய்ய வேண்டும். ஒரு மாணவன் கணிதம் கற்க வேண்டுமென்றால் முதலில் 1,2,3 கற்க வேண்டும், பிறகு 1+1 என்று படிக்க வேண்டும். படிப்படியாகத்தான்
இண்டக்ரேஷன், டிஃபரன்ஷியேஷன் என்று மேல்நிலைகளுக்குச் செல்ல முடியும். இதைத்தான் ஹிந்து மதம் செய்கிறது.

இதுகூடப் புரியாமல் பித்துப் பிடித்தவனைப் போல நெல்லை கண்ணன் உளறிக் கொட்டுவது – இதனை நான் உளறல் என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் அவர்
திட்டமிட்டேதான் இதனைப் பேசியிருக்கிறார். இது மட்டுமா பேசினார்? மத்திய உள்துறை அமைச்சரையும் பிரதமரையும் சோலியை முடிக்க வேண்டும் என்றும்
பேசியிருக்கிறார். இதன் மூலம் பெரும் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற அவரது ஆசை புலனாகவில்லையா? நெல்லை கண்ணன் போன்றோரின் பின்னணியில் நிச்சயமாக தேச விரோத வெளிநாட்டு சக்திகள் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவது
நியாயம்தானே!. நாட்டைப் பிளவுபடுத்தி, ரத்தக்காடாக்கி கலவரத்தைத் தூண்டி தேசத்தைப் பாழ்படுத்துவதற்குப் பின்னால் பணத்தைத் தவிர வேறு எதாவது இருக்க
முடியுமா? அப்படிக் கணக்கிலடங்காப் பணத்தைக் கொடுக்கும் சக்திகள் எது?

ஹிந்து மதம் என்பது காலங்கள் கடந்து ஜீவித்திருப்பது. தொடங்கிய காலமோ தொடங்கிய நபர்களோ தெரியாமல் இருக்காமல் இருக்கும் வாழ்க்கைக்கான தர்மம்தான் ஹிந்துமதம். தமிழ்நாட்டை சுடுகாடாக்கவும், மக்களிடையே பிளவுண்டாக்கி அதன் மூலம் பணம் பார்க்கவும் ஒரு கும்பல் தயாராகி விட்டது. இத்தகையவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நம்
கடமை.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.