
பூ நாகம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நிறைய கதைகளிலும் சில திரைப்படங்களிலும் கூட இது தலைகாட்டியிருக்கிறது. பூமாலைகளில் மிகச்சிறியதான இந்தப் பாம்பு ஒளிந்திருக்குமாம், இது கடித்ததென்றால் உடனே மரணமாம். ஆனால் இன்று வரைக்கும் இதை யாரும் பார்த்ததில்லை. ஒருவேளை கடல்கன்னி போல இதுவும் கற்பனையாக இருக்கலாமோ?
சரி, இதை அப்படியே வெச்சிக்குங்க. இப்போ ஓரிரு வருடங்களுக்கு முன்பாக பெரிசாப் பேசப்பட்ட நெட் ந்யூட்ராலிட்டி பத்தி பாப்போம். நெட் ந்யூட்ராலிட்டின்னா என்னா? அதாவது நாம மொபைல் மூலமா பல இணையதளங்களைப் பாக்கறோம், பல சேவைகளை உபயோகிக்கிறோம். இதுல ஒவ்வொரு சேவைக்கும் வித்தியாசமான டேட்டா கட்டணம் வசூலிக்க மொபைல் சேவை நிறுவனங்கள் முடிவு செய்தன. விளக்கமா சொல்லணும்னா நீங்க வாட்ஸப், டெலிகிராம் இதெல்லாம் உபயோகிச்சா அதுக்காக கொஞ்சம் அதிகமான டேட்டா கட்டணம். இதை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் நடந்தது. இதுக்கு போராளிகள் சொன்ன காரணம்? ஒவ்வொரு இணையதளத்துக்கும் தனித்தனியா கட்டணம் நிர்ணயிப்பார்கள், இது எப்படி ஆகும்னா அரசுக்கு எதிராகவோ அல்லது ஆளுங்கட்சிக்கு எதிராகவோ செய்தி வெளியிடும் தளங்களுக்கு அதிக கட்டணம் நிர்ணயித்து அவற்றை முடக்குவார்கள், அல்லது தங்களுக்கு வேண்டிய தளங்களுக்கு சலுகை கட்டணம் அல்லது இலவசம் என்று அறிவித்து அவற்றை மட்டுமே ஆதரிப்பார்கள், பண வசதியில்லாத தளங்கள் இதனால் பாதிக்கப்படும். டேட்டா என்றால் எல்லாமே ஒன்றுதான், இதில் வித்தியாசம் காட்டக்கூடாது.
கேக்கறதுக்கே மகிழ்ச்சியா இருக்கில்லே? இணைய உலகில் எல்லாரும் சமம் எனும்போது எதற்காக இந்த வித்தியாசமான கட்டணம்? அதிசயமா போராளிகள் ஒரு நேர்மையான காரணத்துக்காகப் போராடறாங்கன்னு தோணுதில்லே? ஆனா இதிலேதாங்க நாம மேலே பாத்த பூநாகம் மறைஞ்சிருக்கு.
இந்த வித்தியாசமான கட்டண நிர்ணயம் என்பதை மொபைல் நிறுவனங்கள் கொண்டு வந்ததற்குக் காரணமே வாட்ஸப் போன்றவை மொபைல் நிறுவனங்களின் வருமானத்தை ஒரேயடியாக அழித்ததுதான். புரியவில்லையா? இதோ விளக்கம்.
வாட்ஸப் கால் எப்படி சாத்தியமாகிறது? உங்களது அழைப்புக்கள் டிஜிட்டல் டேட்டாவாக மாற்றப்பட்டு மொபைல் சேவை நிறுவனத்தின் மூலமாக நீங்கள் அழைக்கும் நபரின் வாட்ஸப் மொபைல் எண்ணுக்குப் போகிறது. மொபைல் எண் இல்லாமல் வாட்ஸப் அழைப்பு சாத்தியமில்லை. ஆக வாட்ஸப் அழைப்புக்கு முக்கியமே மொபைல் சேவை. ஆனால் இந்த வாட்ஸப் அழைப்பினால் மொபைல் நிறுவனத்துக்கு ஒரு பைசா கூட வருமானமில்லை.
அதாவது நாடெங்கும் மொபைல் டவர்களை அமைத்து கட்டமைப்பை ஏற்படுத்தி உங்களுக்கு சிம் கார்டு கொடுத்து எல்லா செலவுகளையும் செய்து மொபைல் சேவை வழங்கும் ஒரு நிறுவனம். இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி இரு மொபைல் எண்களை இணைத்து அழைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இன்னொரு நிறுவனம். நான் பல்லாயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து நிலங்களை காசு கொடுத்து வாங்கி சாலை போடுவேன், அதில் என் பேருந்துகளை இயக்குவேன், ஆனால் இன்னொரு நிறுவனம் ஒரு பைசா கூட செலவில்லாமல் என்னுடைய சாலையில் இலவச பேருந்து இயக்கும். இப்போது சொல்லுங்கள் இது நியாயமா?
வேறுபட்ட கட்டணங்களைக் கொண்டு வந்ததன் பிரதான நோக்கமே வாட்ஸப் அழைப்புக்கள் மூலம் ஏற்படும் இழப்புக்களைத் தடுப்பதுதான். ஆனால் இதனை சரியான முறையில் விளக்க மொபைல் நிறுவனங்கள் தவறிவிட்டன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு என் ஜி ஓக்களும் அமைப்புக்களும் இதனைக் கடுமையாக எதிர்த்து இது ஏதோ மக்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை போலவும் சர்வாதிகாரத்துக்கு அடிகோலுவது போலவும் ஒரு பொய்யான தோற்றத்தை சித்தரித்து அதில் வெற்றி பெற்று இந்த வேறுபட்ட கட்டணத்தை ஒழித்துக் கட்டிவிட்டன.
இதிலென்னங்க தப்பு இருக்கு? மக்களுக்கு இலவசமா ஒண்ணு கிடைச்சா நல்லதுதானே? இதை ஏன் தடுக்கறீங்கன்னு கேக்கலாம். இதுவும் முழுக்க இலவசம் இல்லையே, இதுக்கு டேட்டா கட்டணம் வாங்கறாங்களேன்னும் கேக்கலாம். உலகிலேயே டேட்டா கட்டணம் குறைவாக இருக்கும் நாடு இந்தியா. கிட்டத்தட்ட இலவசம்னே சொல்லலாம். ஆனா இலவசமா கொடுக்கறது மொபைல் நிறுவனம், அதைப் பயன்படுத்தி லாபம் அடைவது இன்னொரு நிறுவனமா? வாட்ஸப்புக்கு என்ன லாபம் என்று கேட்கலாம். ஆரம்பத்தில் சிறிய கட்டணம் வைத்திருந்தது வாட்ஸப். பிறகு அதுவும் நீக்கப்பட்டது. ஆனால் இந்த உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. ஃபேஸ்புக் கூட இலவசம்தான், ஆனால் அதன் வருமானமும் லாபமும் என்ன தெரியுமா? எப்படி வருகிறது இந்த வருமானம்? விளம்பரங்கள் மூலமாகவும் முக்கியமாக நமது தகவல்களை பிற வணிக நிறுவனங்களுக்குப் பகிர்வதன் மூலமும்தனன்.
ஆதார் என்பது நமது ரகசியங்களுக்கு எதிரானது, தனிமனித உரிமை மீறல் என்று கோஷம் போடும் இதே போராளிகள் நமது தகவல்களை எல்லாம் அமெரிக்க கார்ப்பொரேட் நிறுவனத்திடம் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
வாட்ஸப் அழைப்புக்களால் பாதிக்கப்பட்டது ஐ எஸ் டி சேவைகள். இன்றைக்கு வெளிநாட்டு அழைப்புக்கள் பெரும்பாலானவை வாட்ஸப்பிலேயே முடிந்து விடுகின்றன. எங்கு வேண்டுமானாலும் பேசலாம் என்பது முக்கியமான காரணி என்றாலும் இலவசம் என்பதுதான் பிரதான காரணம். ஒரு பைசா செலவின்றி மணிக்கணக்கில் வெளிநாடுகளுக்குப் பேசலாம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?
வாட்ஸப்புக்கு முன்னாடியே யாஹூ மெஸஞ்சர் எல்லாம் இருந்ததேன்னு சொல்லலாம். ஆனா அதுக்கு நீங்க கம்ப்யூட்டர் பக்கத்துலேயே இருக்கணும், நீங்கள் அழைக்கும் நபரும் கம்ப்யூட்டர் முன்னாடி இருக்கணும், இப்போ புரியுதா இதிலுள்ள கஷ்டம்?
இப்போ வாங்க, பி எஸ் என் எல் நஷ்டமடைவதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? இதாங்க. ஐ எஸ் டி என்பது வருமானத்தில் பெரிய பங்கு வகித்தது. மொபைலில் ஐ எஸ் டி பேசுவதற்குக் கட்டணம் அதிகம் என்பதால் கிட்டத்தட்ட ஐ எஸ் டி அழைப்புக்கள் எல்லாமே அரசு நிறுவனமான பி எஸ் என் எல் மூலமாகத்தான். சட்டவிரோத இண்டர்நெட் அழைப்புக்கள் ஒரு புறம், மற்றும் வாட்ஸப் அழைப்புக்கள் இன்னொரு புறம் என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இங்குதான் பூநாகத்தின் விஷம் வேலை செய்கிறது. பி எஸ் என் எல்லை முற்றுமாக ஒழித்துக் கட்டிவிட்டால் பிறகு தனியார் மொபைல் நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம், கட்டணம் எல்லாம். மொபைல் நிறுவனங்கள் தானே மாறுபட்ட கட்டணம் கொண்டு வந்தது, அதனை எதிர்தது பொதுமக்களும் அரசு சாரா நிறுவனங்கள் எனப்படும் என் ஜி ஓக்களும்தானே! அப்புறம் எப்படி இதில் தனியார் மொபைல் நிறுவனங்களின் பங்கு இருக்கும் என்று கேட்கலாம். பி எஸ் என் எல் ஒழிந்தால் தனியார் மொபைல் நிறுவனங்களுக்கு லாபம் என்றுதான் நான் சொன்னேன், ஒழித்துக் கட்ட முயற்சி செய்வது தனியார் நிறுவனங்கள் என்று நான் சொல்லவேயில்லை.
வாட்ஸப் இன்றைக்கு இலவச சேவை. ஆனால் எதையும் இலவசமாகக் கொடுப்பதற்கு மார்க் ஸக்கர்பர்க் தொண்டு நிறுவனம் நடத்தவில்லை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனத்தையே நடத்துகிறார், லாபம் குறைந்தால் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும், நமக்கும் தெரியும்.
இந்தப் பூநாகத்தின் விஷத்தின் விளைவு என்ன தெரியுமா? இந்திய மொபைல் நிறுவனங்களின் வருமானம் அடிபட்டது, அரசு நிறுவனமான பி எஸ் என் எல் அடியோடு நாசமானது, அமெரிக்க கார்ப்பொரேட் நிறுவனமான ஃபேஸ்புக்கும் அதன் துணைநிறுவனமான வாட்ஸப்பும் லாபத்தைக் குவிக்கிறது. இந்தப் போராளிகள் கார்ப்பொரேட்டுக்கு எதிரானவர்கள் என்று நம்புகிற நாம் அடிமுட்டாளானோம்.
ஸ்ரீஅருண்குமார்