
வருத்தப்படுவதற்கு வக்கற்ற அரசு
விலைவாசி உயர்வா, ரூபாயின் வீழ்ச்சியா, அரசு ஊழியர்கள் பணிகளை சரிவரச் செய்யவில்லையா அட சொந்த தொகுதியில் வேலை நடக்கவில்லையா எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் வருத்தம் தெரிவித்து ஒரே ஒரு அறிக்கை விட்டால் போதும். நேரு காலத்தில் இருந்து இதுதான் நிர்வாக நடைமுறை. அரசு தலைமை நம்மைப் பார்த்து பச்சாதாபப் படுகிறதா என்று எப்படி அறிந்து கொள்வது.
கெத்தை விட்ட சொத்தை அரசு
பல கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முதலமைச்சர்களை ஆண்டுக்கு ஒரு முறை தில்லிக்கு அலைக்கழித்து பிச்சைப் பாத்திரம் ஏந்தச் செய்து திட்டக் கமிஷன் துணைத் தலைவரிடம் கெஞ்சிக் கூத்தாடி மாநிலத்திற்கு நிதி பெற வேண்டிய கெத்தான நிலையில் இருந்தது மத்திய அரசு.
இப்போது எந்த அலைக்கழிப்பும் இல்லாமல் நேரடியாக மாநிலத்திற்கு நிதியை அனுப்பும் அவல நிலைக்கு கொண்டுவந்து விட்டது மோடி அரசு.
அழியும் அரசு பாரம்பரியம்
தேவை இருக்கிறதோ இல்லையோ எல்லாச் சான்றிதழ்களுக்கும் அரசு அதிகாரி கையொப்பம் கேட்பது, ஹைதர் அலி காலத்து சட்டங்களை இன்னும் நடைமுறையில் வைத்திருப்பது, ஒரே ஒரு துறையான ரயில்வேக்கு மட்டும் தனி பட்ஜெட் போடுவது என்பது போன்ற பல பாரம்பரியம் மிக்க நிர்வாகநடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புல்லுக்கு பொசியாத வாய்க்கால்
அரசு மானியம் என்றால் மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை அவரவர் ஆட்டையை போட்டு மிச்ச சொச்சத்தை மக்களுக்குச் சென்று சேர்க்கும் நடைமுறை இருந்தது, இதனால் எவ்வளவு மானியம் அளித்தாலும் போதாமல் மானிய பட்ஜெட்டில் மிகப்பெரும் துண்டு விழுந்து, ஆனால் ஆதாரின் மூலம் சேதாரமில்லாமல் மானியம் சென்று சேர்வதால் அரசு மானியத்தை மட்டுமே நம்பி இருக்கும் புரோக்கர்கள் முதல் ஊழியர்கள் வரை பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்
ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது. எந்தக் கொள்கை முடிவு எடுத்தாலும் யாராவது பாதிக்கப்படுவார்கள் என்பதால் எந்த முடிவும் எடுக்காமல்நடுநிலை காத்தது காங்கிரஸ், இதனை அபாண்டமாக முடக்குவாதம் என்றனர். அரசே விரைவாக முடிவெடுத்து விடுகிறதே இதற்கு ஹைபர் ஆக்டிவ் வியாதி என்று பெயர் வைப்பார்களா மோடிக்கு ஜால்ரா போடும் கார்பரேட்கள்? |