சரியாக இரண்டு வருடம், ரஜினி அரசியலில் வெற்றிடம் இருப்பதை சுட்டிக்காட்டி. போர் என்று ஒன்று வந்த பின் தானும் அரசியலில் போட்டியிடுவதாக முழக்கமிட்டு இத்தனை காலங்கள் ஓடி விட்டது.

அதை பற்றி விரிவாக நான் எழுதிய ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும் உங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி.

கதவை திறந்தாலே செய்தி என்று சிலர் சலித்து கொண்டிருந்த இந்நாளில், வாங்க நானே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறேன் என்று அறிவிப்பு விடுத்தால் சும்மாவா இருப்பாங்க?

அனைத்து பத்திரிகை நிருபர்களும், ரஜினி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த அந்த சந்திப்பு இனிதே முடிந்தது. ஆனாலும், அது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தெளிவுபடுத்தும் என்று நம்பிய அனைவரையும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும்.

நான் எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா, வரவேண்டிய நேரத்துல சரியாய் வருவேன் என்பதெல்லாம் திரைக்கு தான். நிஜ வாழ்க்கையில் நேரம் சரியாக அமைந்தால் தான் வருவேன் என்று பகிரங்கமாகவே தெரிவித்து விட்டார்.

இன்று அவர் சந்திப்பு ஏற்பாடு செய்தது அவர் எப்படி, எப்பொழுது வருவேன் என்று மக்களுக்கு விளக்கும் ஒரு சந்திப்பாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எண்ணி கொண்டிருந்த பலருக்கும் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.

 

சுருக்கமாக கூறினால், வெள்ளி திரையில் மக்களனைவரும் “எஜமான் நீங்க தான் தமிழ்நாட்டை காப்பாத்தணும்” என்று கதாநாயகன் பின் இடுப்பில் துண்டை கட்டி, நெஞ்சின் குறுக்காக கையை கட்டி வருவது போன்று, இவர் பின் வந்தால் தான் அவர் வருவார் போன்றுள்ளது.

அப்படி என்ன தான் கூறினார்?

அன்று பாபா அவருக்கு 7 மந்திரங்கள் அளித்த மாதிரி மக்களுக்கு இப்பொழுது அவர் ஒரு 3 விஷயங்களை கூறியுள்ளார்.

முதலாவது, தேவையான அளவுகள் மட்டுமே கட்சி பொறுப்பு. அதுவும், தேர்தல் நேரங்களில், தேர்தல் வேலைகள் செய்வதற்காக மட்டுமே. கேட்க நன்றாகவே இருக்கிறது. கட்சி பேரை கூறிக்கொண்டு இந்த வட்டம் மாவட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் வாய்ப்புள்ளது. முதல் பந்திலேயே சிக்சர்.

இரண்டு, ஆட்சியில் இளம் ரத்தம். 60-65% 50 வயசு கீழே இருப்பவர்களுக்கே முன்னுரிமை. மீதமுள்ளவர்கள் ஓய்வு பெற்ற IAS, ஜட்ஜ், போன்ற நபர்கள் கொண்டு நிரப்பப்படும். நல்ல சிந்தனை. ஆனாலும் இன்றுள்ள இந்திய அரசியல் அமைப்பு இதை தானே கொண்டுள்ளது?

மக்களால் தேர்ந்தெடுத்த அரசிலியல்வாதிகளை வழிநடத்தி செல்ல ஆட்சியாளர், வட்டாட்சியாளர் என்று பல அரசாங்க அதிகாரிகளை கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று இந்த நிலைமைக்கு நாம் சென்றிருப்போமா என்பதே கேள்வி. ஆகவே, அது போன்று தன்னலமற்ற உள்ளங்களை தேடி பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆட்சி கூட பிடித்து விடலாம், அது போன்ற மக்களை தேடி பிடிப்பது சிரமமே.

நம்மவர் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் மொழியில் கூறினால் “நல்லவர்கள் இல்லை என்று கூறவில்லை, இருந்தால் நன்று என்றே கூறுகிறேன்!!!”

எப்படியோ, இது அவர் கட்சி. அவர் யாருக்கு இடமளித்தாலும் நன்கு ஆராய்ந்து அளிப்பர் என்ற நம்புவோமாக.

மூன்றாவது, கட்சி வேறு ஆட்சி வேறு. மிகவும் வரவேற்க வேண்டியவை. ஆனாலும் நமது ஜனநாயகத்தில் கட்சி தலைவரை விட மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட, ஆட்சி தலைமையில் இருக்கும் முதல்வருக்கு தான் பொறுப்புகளும்,  வலிமைகளை அதிகம். அந்த பதவிக்கு ஒரு நேர்மையான, தன்னலமற்ற முகம் தேவை. இன்று அந்த முகமாக மக்கள் காண்பது ரஜினி என்ற ஒற்றை மனிதனை தானே தவிர அவர் விரல் காட்டும் திசையில் உள்ள எவரையும் அல்ல.

இன்றைக்கு நமது தேவை, தன்னலமற்ற சர்வாதிகாரியே. அதற்கு ஆக சிறந்த மனிதராக இருப்பது ஆன்மிக அரசியல் என்று வெளிப்படையாக கூறிய ரஜினி ஒருவரே. தேர்தலில் நிற்கவே ஒரு மக்களிடம் இன்று தேர்தல் வைத்து தனக்கு சாதகமான அலை இருக்கிறதா என்று சோதித்து பார்க்கும் குணம் கொண்ட ஒருவர் எவ்வாறு சிறந்த தலைவனாக திகழ முடியும்?

இன்று தேர்தலில் போட்டியிட கூட மக்களிடம் அபிப்பிராயம் கேட்கும் ஒருவர் நாளை எவ்வாறு எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்க முடியும்? இவர் என்ன சொல்லுவார், அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று மற்றவரை மூளைக்குள் வைத்து கொண்டு எந்த ஒரு நல்ல முடிவையும் கொண்டு வர முடியாது.

அரசியல் என்பது நம் பொது மக்களுக்கு எது நல்லது என்று ஒரு அரசாங்கம் எடுக்கும் முடிவு. அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லவேண்டும் என்பது உண்மை. ஆனால், அதற்காக அனைவரும் சரி என்று சொல்லும் வரை காத்து கொண்டிருக்க முடியாது. அனைத்து மக்களும் ஒன்றாக பதில் கூறிய பின்பு தான் ஆட்சி அமைக்க வேண்டுமாயின், இந்தியாவில் என்றுமே குடியரசர் ஆட்சிதான் நிலைக்கும்.

ஏன்? இவர்கள் தான் 50-60% மேல் வோட்டு செலுத்துவது கூட இல்லையே. அப்படி இருக்க, 100% மக்களும் ஆட்சியில் யார் அமரவேண்டும் என்று கூற காத்துக்கொண்டிருந்தால் அது எவ்வாறு முடியும்?

எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதை எதிர்க்க என்று ஒரு கூட்டம் இருக்கவே செய்யும். இன்று மகாத்மாவாக அனைவராலும் போற்றப்படும் அண்ணல் காந்தியின் வார்த்தைக்கு கூட எதிர்ப்பு இல்லாமலா இருந்தது? அப்படி எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்திய இரண்டாக உடைந்திருக்க வாய்ப்புள்ளதா?

ரஜினி தான் கூறியதை மக்கள் ஏற்று கொண்டு ஒரு புரட்சி செய்தால், பின் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். ஒரு தலைவன் என்பவர் முடிவு தனக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும் களமிறங்க கூடாது. எந்த ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக்க முடிந்தால் மட்டுமே அவர் ஒரு தலைவர்.

மக்கள் எழுச்சிக்காக காத்திருப்பவர் ஒரு நல்ல தலைவராக வாய்ப்பில்லை. போற்றப்படுவதும் இல்லை. மக்களை எழுச்சி பெற செய்பவரே உண்மை தலைவர்.

என் வழி தனி வழி என்று கூறுபவன் தான் உண்மை தலைவன் என்று நான் கூறவில்லை. இவர் குருநாதர், அரசியல் ஆலோசகர் திரு சோ கூறியது.

என் வழி தனி வழி, அந்த வழியை ஆதரித்து என் பின்னல் வந்தால் தான் நான் அந்த வழியில் செல்வேன் என்று கூறுவது திரு சோ கூறியதை பொய்ப்பிக்கும் செயல்.

சுருக்கமாக சொல்லனும்னா, எப்ப மழை வரும் எப்ப விவசாயம் பண்ணலாம்னு காத்திட்டு இருந்தா இன்றைய சூழலில் விளங்கின மாதிரி தான்!!!

நன்றி

மகேஷ் 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.