Print Friendly, PDF & Email

இந்தியாவை பார்த்து உலகம் வியந்து நின்ற(நன்றாக கவணிக்கவும்) ஒற்றை காரணம் தன்னிறைவான கிராமங்கள். தனது கிராமங்கள் பெரும்பாலும் தனக்கு தேவையானதை தானே உற்பத்தி செய்து யாரிடமும் கையேந்தாமல் சுயசார்பு வாழ்க்கையை கொண்டிருந்தது. பல பல படையெடுப்புகளால் இந்த சுயசார்பு நிலை குன்றி யாரிடமோ எதனிடமோ கையேந்தும் நிலை உறுவாக்கப்பட்டது(அரசாங்க அமைப்பிடம்).

குறிப்பாக சுயசார்பு வாழ்க்கையை திட்டமிட்டு அழித்தது வெள்ளை அரசாங்கம். ஒரு கிராமத்தில் வாழும் ஒரு மனிதனுக்கு தலை முதல் கால் வரை தேவையான அனைத்தும் அந்த கிராமத்திலேயே கிடைக்கும். உலோகங்கள், உப்பு, வாசனை திரவியம், நறுமணப்பொருட்கள், கண்ணாடி இன்னும் சில பொருட்கள் மட்டுமே வெளியிலிருந்து வாங்க வேண்டிய தேவைகள்.

இன்னும் கொங்கு நாட்டில் அஞ்சரை பெட்டியை ‘செலவு பொட்டி’ எனக்கூறும் வழக்குண்டு; ஏனென்றால் அஞ்சரை பெட்டியில் வைக்கும் நறுமண பொருட்களுக்கு மட்டுமே செலவு செய்ய தேவை.

 

சுயசார்பு வாழ்க்கை நீர்த்துப்போக முக்கியமான காரணம் உணவு தன்னிறைவு இல்லாமை; வெள்ளை அரசாங்கம் முதலில் கை வைத்த இடம் உணவு தன்னிறைவு. எப்படி? நீர்வளமுள்ள பகுதிகளில் பணப்பயிர்களை விதைக்க வைத்து உணவுக்காக இன்னொரு இடத்தில் கையேந்த வைத்தது. முதலில் உத்திர பிரதேசம், பிஹார் போன்ற இடங்களில் செயல்படுத்தி, இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தென்னகத்திலும் வெற்றிகரமாக செயல்படுத்தியிருந்தது.

உலகை எவரால் ஆள முடியும்?? மூன்று துறைகளை நேரடியாகவோ/மறைமுகமாகவோ கைக்குள் வைத்திருப்பவர் எவரோ அவரே உலகை ஆள்பவர்.

1) மக்களுக்கு எரிப்பொருள்(உணவு)

2) எந்திரங்களுக்கான எரிபொருள் (கச்சா எண்ணேய், மின்சாரம்,…)

3) வங்கி அமைப்பு

மீண்டும் தன்னிறைவான கிராமங்களை உறுவாக்க இம்மூன்றும் பரவலாக்கப்பட வேண்டும். கிராமங்களில் கச்சா எண்ணையை எடுக்க முடியாவிட்டாலும் மின்சாரத்தை தானே உற்பத்தி செய்து கொள்ளலாம். அப்படி மின்சாரம், வங்கி அமைப்பில்  தன்னிறைவடைந்த ஓரு கிராமம் தமிழ்நாட்டில் உள்ளதென்றால் அது ஓடந்துறை தான்!!

 

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை!

ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது தமிழகத்தின் ஓடந்துறை கிராமம். அது எப்படி ?

ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து கோவை மாவட்டம், கோத்தகிரி மலையடிவாரத்தில் பவானி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது. வாழைத் தோட்டங்களும் பாக்குத் தோப்புகளும் நிறைந்த பசுமையான பூமி. பெரும்பாலானோர் நகரத்தின் வாடையே அறியாத மலைவாழ் மக்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களது கிராம பஞ்சாயத்து செலுத்தியிருக்கும் மின் கட்டணம் சுமார் 1.20 கோடி ரூபாய் என்கிறார்கள்! இதில் அதிசயமான விஷயம் இந்த பஞ்சாயத்தின் சார்பாக ஆண்டுக்கு 6.75 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 67.50 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 2.15 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் 21.5 லட்சம் யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். அதன் மூலம் சுமார் ரூ. 65 லட்சம் வருவாய் கிடைத்திருக்கிறது. இப்போதும் இது தொடர்கிறது.

 

இதில் சிறப்பு என்னவென்றால், அந்த ஊரில் மின் உற்பத்தி நிலையம் என்று எதுவும் இல்லை. பின் எப்படி?

1996 தொடங்கி 2006 வரைக்கும் ஓடந்துறை பஞ்சாயத்து பொதுப் பஞ்சாயத்தாக இருந்திருக்கிறது. ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் 1996 முதல் 2006 வரை முதல் பத்து வருடங்கள் சண்முகம். 2006-இல் அந்த பஞ்சாயத்தை பெண்களுக்காக ஒதுக்கியதும், சண்முகம் ஒதுங்கிக் கொள்ள, அவரது மனைவியான லிங்கம்மாளை தலைவியாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் கிராம மக்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக தொடர்பவர் லிங்கம்மாள் சண்முகம்.

கணவன், மனைவி இருவருமாக இந்த கிராமத்தில் செய்திருக்கும் புதுமைகள், சாதனைகள் பலரையும் இந்த கிராமத்திற்கு வரவழைத்திருக்கின்றன. ஒரு கிராமப் பஞ்சாயத்து தனது வரிகளை நூறு சதவீதம் வசூலித்தால் தமிழக அரசு அதற்கு இணையாக மூன்று மடங்கு ஊக்கத் தொகை வழங்குகிறது. இந்த சலுகைகள் குறித்து, ஊர் மக்களிடம் பேசி இருக்கிறார் லிங்கம்மாள்.

அரசுக்கு முழுமையாக வரி செலுத்த வேண்டிய அவசியத்தை விளக்கி இருக்கிறார்கள். சிறப்பு முகாம்கள் நடத்தி வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரைபட அங்கீகாரக் கட்டணம் என்று நூறு சதவீதம் வரியை வசூலித்தார். ரூ.20 ஆயிரமாக இருந்த வரி வருவாய் ரூ.1.75 லட்சமாக உயர்ந்தது. அதற்கு ஈடாக மும்மடங்கு ஊக்கத் தொகையாக தமிழக அரசு ரூ.5.25 லட்சம் கொடுத்திருக்கிறது. மறு ஆண்டு 3.5 லட்சம் வரி வசூலித்தார். அதே போன்று, தமிழக அரசிடமிருந்து ஈடாக 10.5 லட்சம் ஊக்கத் தொகை பெற்றார். சரி, இந்தத் தொகையை எல்லாம் என்ன செய்கிறார்கள்?

லிங்கம்மாள் சொல்கிறார்:

“எங்க கிராமத்துல யாரும் வெளியே வட்டிக்கு கடன் வாங்குறதில்லைங்க. கிராமத்துல இருக்குற ஒவ்வொரு வாக்காளருக்கும் கிராமப் பஞ்சாயத்தே கடன் வழங்குது. ஒரு ரூபா வட்டிங்க. கடன் பெறுவதற்கு ரெண்டு தகுதி வேணுமுங்க. தகுந்த காரணம் இருக்கோணும். பழைய பாக்கி இருக்கக் கூடாது. மருத்துவச் செலவு, பிரசவ செலவு, கல்விக் கட்டணம், சிறு கடை வைக்க கடன் தர்றோமுங்க. கல்யாணம், காது குத்து, நல்லது, கெட்டதுகளுக்கும் கடன் உண்டுங்க. ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கோம்” என்கிறார். கொடுக்கும் தொகைக்கு எழுதி வாங்குவது கிடையாது. சரியான காரணமாக இருந்தால் உடனே பணம் தருகிறார்கள். பதிவேட்டில் தவணைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் திட்டத்தில் திரும்ப வராதகடன் என்கிற பேச்சுக்கே இதுவரை இடம் இல்லை.

 

நில உரிமை

இங்கிருக்கும் பழங்குடியினர் காலம் காலமாக தனியார் தோட்டங்களில் கொத்தடிமைகள் போல இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கென நிரந்தர வசிப்பிடம் கிடையாது. அவர்களுக்கு தனியார் தோட்ட முதலாளிகளிடம் போராடி நிலத்தைப் பெற்று வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள். தனியார் தோட்ட நிறுவனங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தரிசு நிலம் இருந்தால் அதனை அந்த கிராமப் பஞ்சாயத்து கையகப் படுத்திக் கொள்ளலாம் என்பது சட்டம். இதனை அறிந்த லிங்கம்மாள் ஆறு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். முதலாளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவற்றையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் லிங்கம்மாள்.

 

வீடுகள்

அங்கு பழங்குடி இனத்தவருக்கு 250 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவை தவிர வினோபாஜி நகரில், தமிழக அரசின் சார்பில் 101 பசுமை வீடுகள் சோலார் மின் தொழில்நுட்பத்துடன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 101 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கும் தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை மட்டுமே.

இதிலும் ஒரு சிறப்பு உண்டு. தமிழகம் முழுவதுமே பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதில் பயன்பெற அடிப்படை தகுதியாக சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். இங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்துடன் வீட்டை சொந்தமாக்கிக் கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள். இங்கே தமிழக அரசுக்கு சொந்தமான பூமிதான நிலம் 3.22 ஏக்கர் இருந்திருக்கிறது. வருவாய் துறையிடம் பேசியவர், கிராம சபை தீர்மானம் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு அந்த நிலத்தை மாற்றியவர், அங்கு வீடுகளை கட்டியிருக்கிறார். “கிராமத்துல இருக்குற மொத்தப் பேருக்குமே சொந்த வீடு இருக்கு. அதுல பாதி வீடுகள் சர்க்கார் வீடுங்க. வாடகை வீடுங்கிற கலாச்சாரமே இங்கே கெடையாதுங்க.”

 

ஓடந்துறை ஓர் உதாரணம்

இத்தோடு நிற்கவில்லை சாதனைகள். இந்த கிராமத்தில் நூறு சதவீதம் மாணவர்களும் கல்வி பெறுகிறார்கள். இடை நின்ற மாணவர் ஒருவர் கூட கிடையாது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் சோலார் தெருவிளக்குகள், எல்.இ.டி. விளக்குகள் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக்கிறது. தெருக்கள் தூய்மையாகப் பளிச்சிடுகின்றன. இதற்காக மத்திய, மாநில மற்றும் உலக நாடுகள் அளித்திருக்கும் விருதுகள் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை அலங்கரிக்கின்றன.

 

பஞ்சாயத்து நிர்வாகம்

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அனைத்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களையும் திரட்டி இவர்கள் கிராமத்துக்கு அனுப்பியது.

அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்து லிங்கம்மாளும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும் அவரது கணவருமான சண்முகமும் பாடம் எடுத்திருக்கிறார்கள். வாஷிங்டனிலிருந்து உலக வங்கி இயக்குநர் தலைமையிலான குழு ஒன்று ஓடந்துறையை ஆய்வு செய்திருக்கிறது. ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய வளர்ந்த நாடுகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட இங்கே நேரில் வந்து பல விஷயங்களை பார்த்துச் சென்றிருக்கிறார்கள். மின்சார உற்பத்தி மற்றும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் நாட்டில் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். சிக்கிம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் அரசு செயலர்கள் கூட ஓடந்துறையை வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள். சென்னை அண்ணா மேலாண்மையகத்தில் பேரூராட்சி தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றியிருக்கிறார் கிராமப் பஞ்சாயத்து தலைவர் லிங்கம்மாள். தமிழ்நாட்டின் ஒரு பெருமையான சின்னமாக விளங்குகிறது ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து…!!!

இந்த ஊர் எங்கேயென அறிய இன்னும் ஒரு எளிய அடையாளம். ஊட்டி செல்லும் வழியில் உள்ள Black Thunder இருக்கும். ப்ளாக் தண்டர் வாயிலுக்கு எதிராக இருப்பது தான் ஓடந்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.