என்னடா தலைப்பே தப்பா இருக்கேனு கேக்குறீங்களா?

தலைப்பு சரியா தான் இருக்கு, ஆனா, நீங்க கேட்க வேண்டிய கேள்வி தான் வேற.

யாரு குடியை? அப்பிடின்னு கேக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இப்ப நாம்ப இருக்கோம்.

கொரோனா எனும் கொடிய நோய் பரவிட்டு இருக்குற இந்த சமயத்துல கூட்டம் கூட கூடாது, கடைகள் திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் இதே அரசு தான், டாஸ்மாக் கடைய திறக்க முடிவு செய்துள்ளது.

அது எந்த கட்சி என்பது முக்கியம் இல்லை. ஏன்யென்றால், எந்த கட்சி பதவியில் உள்ளதோ அந்த கட்சி கண்டிப்பாக அதை தான் செய்யும். மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருக்க வேண்டியது தான்.

முன்பு ஆட்சியில இருந்த அரசு எதை செய்ததோ அதே வேலையை தான் இன்றைக்கு ஆட்சியில உள்ள அரசும் செய்கிறது.

முன்பு எதிர் கட்சியில் இருந்தவர்கள் என்ன கேள்வியை எழுப்பினார்களோ அதே கேள்வியை தான் இன்றைக்கு எதிர் கட்சியில் உள்ளவர்களும் கேட்கிறார்கள்.

எனவே நான் சொல்வது என்னவென்றால், எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் நிலைமை இது தான். இன்றுள்ள ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதி நிலைமையை சரி செய்ய எதை செய்ய வேண்டுமோ, அதை கண்டிப்பாக செய்து கொண்டு தான் இருப்பார்கள். மக்கள் நலன் என்பது இரண்டாம் பட்சம் தான்.

ஆகவே நாம் கேள்வி எழுப்ப வேண்டியது, பத்திரிக்கை துறையிடம் தான். இந்த ஜனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்க வேண்டிய ஒரு துறை, ஆளும் அரசுக்கு துணையாக நிற்பது தான் மிகவும் வருத்தத்திற்கு உரியது.

அதுவும், நமக்கு பிடித்த அரசு ஆட்சியில இருந்தால் அது என்ன செய்தாலும் உருட்ட வேண்டியது (அதான், ஆதரவு). ஆனால், அதே வேலையை நமக்கு பிடிக்காத அரசு செய்தால் எதிர்க்க வேண்டியது.

சரி, இதை பற்றி நாம் நிறைய பேச வேண்டியது இல்ல. ஏனென்றால், இது இப்பொழுது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகிவிட்டது. நாம் கலந்தாலோசிக்க வேண்டியதே வேறு.

ஒரு அரசு மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்கிறதா, இல்லை, தன்னுடைய கஜானாவை (அதாவது ஆட்சியில இருக்கும் நபரின் கஜானாவை) நிரப்புவதே குறியாக இருக்கிறதா? இதை தான் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

“மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு.” என்று பரப்புரை செய்யும் இதே அரசு தான் அதை வியாபாரமாக நடத்தி கஜானா கட்டுகிறது. அது எப்படி முடிகிறது?

இதைபற்றி புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் புகையிலை, பீடி, கள்ளு இந்த மாதிரி விஷயங்கள் கிட்டத்தட்ட தடுத்தே வச்சிருக்கும் அரசு, மதுவை ஏன் தடை செய்ய இயலவில்லை என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

கள்ளு குடிச்சா உடலுக்கு கேடு. சாராயம் குடிச்சா வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதாலயா? பீடி குடிச்சா மட்டம், அதுவே ட்ரிபிள் பை குடிச்சா பெருமையா?

அது எப்பிடி ஒண்ண தடுத்து நிறுத்திவிட்டு இன்னொன்றை சட்டப்படி விற்பனை செய்ய முடிகிறது? நன்றாக சிந்திப்பீர்.

காரணம் ஒன்று தான்.

எந்த ஒரு பொருளும் பாக்கெட் செய்து, லேபிள் ஒட்டி சந்தைக்கு கொண்டு வந்து விட்டால் அரசுக்கு வரி கிடைக்கும். அதை விட அந்த சந்தையை ஆட்கொள்ள ஒரு போட்டி, அதுக்கு ஒரு லாபி என்று ஒரு கூட்டமே இருக்கும். இந்த கூட்டம் அரசு, மற்றும் அரசு அதிகாரிக்கு ஏற்ற மாதிரி விட்டு கொடுத்து, அல்லது தட்டி கொடுத்து அந்த பொருட்களின் வணிகத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்வார்கள்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மத்திய அமைச்சராக இருந்த போது பொதுவெளியில் புகை பிடிப்பதை தடை செய்வதில் வெற்றி கண்டார். அவரால் சிகரெட் பாக்கெட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட மட்டுமே முடிந்ததே தவிர, அதை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. ஏன்?

அதே காரணத்தால் தான், கள்ளு கடையை மூடி வெற்றி கண்ட அரசால் சாராய கடைய மூட முடியவில்லை. இன்னும் ஒரு படி மேல போய், அரசே எடுத்து நடத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.


“அரசு எடுத்து நடத்தவேண்டிய பள்ளிகள் தனியர்களிடம், தனியார் எடுத்து நடத்த வேண்டிய சாராய கடைகள் அரசுகளிடம்” என்று பல அரசியல் தலைவர்களும் தங்கள் பேச்சுகளில் சுவாரசியம் சேர்க்க இப்படி முழங்க வேண்டியது. ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அதை தான் செய்ய வேண்டியது.

மக்கள் கேட்டால், மது கடைகளை மூடினால் கள்ள சாராயம் பெருகி விடும் என்று பிதற்ற வேண்டியது. ஒரு அரசே இப்படி கூறுவதால் அது அந்த அரசின் கையாளாக தனம் என்று மக்கள் நினைக்க மாட்டார்களா? கள்ள சாராயம் விற்கும் கயவர்களுக்கு தக்க தண்டனை உரிய நேரத்தில் வாங்கி தந்தால் யாருக்கு அந்த தவறை செய்ய தைரியம் வர போகிறது?

நாம் தமிழர் போன்ற கட்சிகள் பனை தொழிலாளிகளுக்கு உதவும் பொருட்டு பல அரசியல் மேடைகளில் பேசியுள்ளார்கள். ஆனாலும் இன்றும் அவர்களுக்கு ஒரு சரியான விடிவு இல்லை.

ஒருவேளை, இந்த பனை தொழிலாளர்களும் தங்கள் பொருட்களை சாலையில் மரங்களின் நிழல்களில் விற்பதை தவிர்த்து சந்தையில் விற்க ஏற்பாடுகள் செய்தால், லாபம் உள்ள வழிகளை காட்டினால் அதையும் இந்த அரசு ஏற்று நடத்துமோ என்னவோ!!!

ஏனென்றால், லாபங்கள் என்று வரும் பொழுது குடி (ஆட்சியார்களில்) குடியை பெருக்கும் அல்லவா?

நன்றி
உங்கள் மகேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.