
“கோடையில் ஒருநாள் மழை வரலாம், என் கோலத்தில் இனிமேல் எழில் வருமா?” என்று பாடினார் ஜெமினி கணேசன். ஆனா எழில் வந்ததோ இல்லையோ கடைசீ காலம்வரைக்கும் எழில்மிகு சுந்தரிகள் அவரைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அது மாதிரி தமிழ்த் திரையுலகத்தில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல என்பார்களே அது மாதிரி, இல்லேன்னா அத்திவரதர் தரிசனம் தந்தா மாதிரி, தப்பித் தவறி நல்ல படம் வெளியாகிவிடுகிறது. அப்படி ஒரு படம்தான் ரா.பார்த்திபனின் ஒத்த செருப்பு.
ஏற்கெனவே ஆங்கிலப் படங்களில் கையாண்ட பாணிதான், ஆனால் தமிழுக்கு இது புதுசு. படம் முழுக்க பார்த்திபன் மட்டுமே. நல்ல காலத்துக்கு இன்னும் சில குரல்கள் இவருடன் உரையாடுகிறது. வசனம் பேசும்போது முகபாவனைகள் காட்டுவதென்பது அவசியமான காரியம் – ஆனா இன்னைக்கு பல பஞ்ச் ஹீரோக்களுக்கு முகபாவம் என்பதே பாவமாக இருக்கிறது. அதை விடுங்க. ஆனா படம் முழுக்க உன்னோட மூஞ்சிதான் தெரியப்போவுது. அடுத்தவங்க – அதாவது இவருக்கு எதிரேயோ அல்லது அருகிலேயோ இருந்து கொண்டு கேமரா ஃப்ரேமில் இருந்து வெளியே இருந்து – பேசறதுக்கும் சேத்து நீதான் முகபாவம் காட்டணும்னா பார்த்திபன் அய்யோ பாவமில்லையா? இதனை சுலபமா தீர்த்திருக்கலாம் – அடுத்தவங்க வசனம் பேசும்போது ஓடற மின்விசிறி, காத்தில பறக்கற கேலண்டர், சுவரில் ஓடும் பல்லின்னு காமிச்சு சமாளிச்சிருக்கலாம், செய்யலை. எல்லாப் பொறுப்பையும் தன் தலையிலேயே போட்டுக் கொண்டு திறம்படச் செய்திருக்கிறார் பார்த்திபன்.
தாவணிக்கனவுகளில் சைக்கிளில் சைட் அடித்த துண்டு கதாபாத்திரமாக வந்த பார்த்திபன் தமிழ்த்திரையுலகத்தில் முதல் படத்திலேயே புதிய பாதை கண்டார். அந்தப் படத்தைப் பற்றி ஒரு விமர்சகனாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் ரசிகர்கள் போற்றிய மாபெரும் வெற்றிப்படம் என்பதில் ஐயமில்லை. கருப்பாக இருந்தாலும் நாயகனாகலாம் என்று நிறுவியவர் ரஜினி என்றால் பொறுக்கி மாதிரி இருந்தாலும் நாயகனாகலாம் என்ற புதுப் பாதை போட்டவர் பார்த்திபன். இன்றைக்கு பொறுக்கி, மொள்ளமாறி, சோமாரி யை எல்லாம் நாயகனாகக் காட்டுகின்றது தமிழ் படங்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் பார்த்திபனே. ஆனால் அதற்கு ஒரு சிறு பிராயச்சித்தமாக ஒத்த செருப்பு அமைந்திருக்கிறது.
காவல் நிலையத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு நபர் விசாரணையின்போது சொல்லும் விஷயங்கள். கொஞ்சம் கொஞ்சமாக பில்டப்பை ஏற்றிக் கொண்டு போவது நயம். ஒரே ஒரு ஆள் மட்டுமே திரையில் இருக்கிறார் என்பதை மிகச்சில இடங்களில் மட்டுமே நாம் உணருகிறோம். இதற்குக் காரணம் வலுவான திரைக்கதையும் அடுத்து என்னவென்று நம்மைத் தவிக்க வைக்கும் தந்திரமும்தான். இசை ஒரு சில இடங்களில் உச்சத்திலும் சில இடங்களில் அடிவாரத்திலும் இருக்கிறது.
ஒரு நடிகராக இன்னும் உயர்ந்திருக்க வேண்டியவர் பார்த்திபன், ஆனால் ஒரு சில இடங்களில் அவரது குரல் வாகு (அதாங்க மாடுலேஷன்) சலிப்பை உண்டாக்குகிறது. ஆரம்பத்தில் பயந்தவர் போலத் தோன்றும் அவரது பேச்சு பிறகு அவருக்கே உரித்தான நக்கல் பாணியில் பயணிக்கிறது. அவ்வப்போது கோவத்தில் கொலைகளைப் பற்றி விவரிக்கும்போது மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. அதனால் ஒருவிதமான ஒரே நேர்கோடு போன்ற உச்சரிப்பு ஆயாசத்தைத் தருகிறது. விமர்சகனாக கருத்து சொல்வது சுலபம் என்று பொங்க வேண்டாம். ஆக்கப் பூர்வமான விமர்சனமே நமது பாதை. குழந்தைக்கு கண் மருந்து போடச் சொல்லும் இடத்திலும் குழந்தைக்கு அழுதால் என்ன ஆகும் என்பது பற்றி விவரிக்கும் மாதிரியான இடத்திலும் கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் சோகம், கொஞ்சம் நிதானம், கொஞ்சம் பயம் கலந்து இருந்தால் உச்சரிப்பு தூக்கி இருக்கும், வித்தியாசமும் – அதாங்க கான்றாஸ்ட் – நன்றாக அமைந்திருக்கும். ஒருவேளை வேறு ஒருவர் இயக்குனராக இருந்திருந்தால் இது சரிசெய்யப்பட்டிருக்கலாமோ என்னவோ. இணை இயக்குனர் என்று ஒருவர், இதை கவனித்தாரா இல்லை பெரிய இயக்குனராயிற்றே பார்த்திபன், எப்படி சொல்வது என்று சும்மா இருந்து விட்டாரா தெரியவில்லை. அதே போல நெருடலான பல விஷயங்களைக் கூட ரொம்ப நாசூக்காக, இலைமறை காயாகக் கையாண்ட விதம் ரொம்பவே நல்லா இருக்கு பார்த்திபன் சார்.
கொலைகாரனாகவே இருந்தாலும் ரசிகர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் ஒட்டுமொத்தமாகத் திரட்டிக் கொள்ளும் கதாபாத்திரம். க்ளைமேக்ஸில் வைத்த ட்விஸ்ட் ரொம்பவே எதிர்பாராதது. அருமை. அருமை. திருச்சியில் இது மாதிரி ஒரு அரசியல்வாதி கொல்லப்பட்டார் என்பதை நினைவுபடுத்துகிறது படம். ரொம்பவே தைரியம்தான் பார்த்திபன் சார்.
மொத்தத்தில் ஹீரோயிஸத்தையே பார்த்துப் புளித்துப் போன நமக்கு இது முற்றிலும் மாறுபட்ட விருந்தாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி பார்த்திபன். ஒத்த செருப்பாக இருந்தாலும் பரவாயில்லை, நிறைவாக அணிந்து கொள்ளலாம்.
ஸ்ரீஅருண்குமார்