
“பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசியம்
வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…“
என்று ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாந்தும் ஐஸ்வர்யாவும் ஆடிய அந்த காட்சியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் தாண்டி அங்கே ஒரு பிரம்மாண்டம் நின்றிருந்ததை, மன்னிக்கவும், சாய்ந்திருந்ததை, நீங்கள் கண்டு களித்திருக்கலாம்.
அந்த பிரம்மாண்டத்தை நேரில் காண அவா உள்ளதா? அப்படிஎன்றால் நீங்கள் கட்டாயம் இந்த பதிவை படிக்க வேண்டும்.
ஆம், இன்று நாம் காணப்போவது இத்தாலியின் பைசா நகர சாய்ந்த கோபுரம்.
அது என்ன சாய்ந்த கோபுரம்?
அது எதற்காக கட்டப்பட்டது?
சாய்த்தே கட்டப்பட்டதா?
கட்டும் போதே இதை ஒரு உலகதிசயம் ஆக்க வேண்டும் என்று சிந்தித்து கட்டப்பட்டதோ?
இப்படி எண்ணிலடங்கா பல கேள்விகளும் உங்கள் உள்ளங்களில் தோன்றலாம்.
அவையாவிற்கும் வினா அளிப்பதே எனது நோக்கம்.
ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான பைசா கோபுரம் பற்றி அறியாதவர் எவரும் இல்லை. ஆனால், ஓர் உண்மையை அறிவீரா?
ஒருவேளை இந்த கோபுரம் திட்டமிட்டப்படி கட்டிமுடிந்து, சீர்கோட்டில் சரியாக அமைந்திருக்குமேயானால், இது உலகதிசியங்களில் இடம் பெறாமலேயே போயிருக்கும்.
ஆம், தவறான திட்டமிடலும் இந்த கோபுரம் அதிசயமாக ஓர் காரணம் என்றால் நம்புவீர்களா?
ஆனால் அதுவே உண்மை. இந்த உண்மை நம்மில் எத்துனை பெயருக்கு தெரியும்?
இருந்தாலும், சாய்ந்த அந்த கோபுரத்தை விழாமல் இருக்க இவர்கள் செய்த அந்த செயல்களே இன்று இந்த கோபுரம் உலக அதிசயத்தில் நிலைத்து நிற்க காரணம்.
இதை கேட்கும்போதே அந்த கோபுரத்தை காண உள்ளம் துடிக்கிறதா?
கவலை வேண்டாம், இந்த பதிவை படித்தபின், நீங்கள் அங்கே சென்று வந்த மனநிறைவு பெற்று விடுவீர். அதுமட்டுமல்ல, அங்கே சென்று காண்பதற்கு வேண்டிய ஆயுதங்களையும் செய்வீர்கள் என்றால், பொய்யில்லை.
உண்மையில் இந்த கோபுரம் எதற்காக கட்டப்பட்டது?
ஒவ்வொரு கிருத்துவ ஆலையின் உடனும் ஒரு மணிக்கூண்டு கட்டப்படுவது உண்டு. அப்படி பைசா நகரத்து கிருத்துவ ஆலை கட்டும் பொழுது அதன் கூடவே கட்டப்பட்டது தான் இந்த மணிக்கூண்டு.
இந்த கிருத்துவ ஆலை மற்றும் மணிக்கூண்டை கட்டி முடிக்க கிட்டத்தட்ட 200 வருடங்கள் ஆகின. ஆம், ஐரோப்பியாவில் தொடர்ந்த நடந்து வந்த பல போர்களே இந்த தாமதத்திற்கு காரணம்.
அப்படி அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென இந்த கோபுரம் சாய துவங்கியது. அதை சரி செய்யும் பொருட்டு பல சமாளிப்புகளுடன் செய்து இதை கட்டி முடித்தனர்.
“எட்டடுக்கு மாளிகையில், ஏற்றி வைய்த்த என் தலைவன்” என்பது போன்று, இந்த எட்டடுக்கு மாளிகையின் கூரையில் மணி கட்டப்பட்டது. ஆமாம், இருக்கும் எடை போதாதென்று இந்த மணியும் ஒன்று 🙂
கிட்டத்தட்ட 300 படிகள், அதை கடந்து சென்றால் கோபுரத்தின் உச்சியில் நீங்கள். பல வருடங்களாய் அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் மீண்டும் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது இந்த கோபுரம்.
சரி, இனி அங்கு எப்படி செல்லலாம் என்ற விபரங்களை பற்றி அறிவோம்.
ஆண்டு முழுவதும் இங்கு செல்லலாம் என்றாலும், ஜூன்-ஜூலை-ஆகஸ்ட் – இவை மூன்றும் பள்ளி விடுமுறை மாதங்களாக இருப்பதன் பொருட்டு இந்த மாதங்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருவாரியாக இருக்கும்.
தவிர்க்க முடிந்தால், நல்லது.
இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவை இல்லாதபோதும், இத்தாலியின் தலைநகரமான ரோம் (Rome) நகருக்கு இங்கிருந்து பல விமான சேவைகள் உண்டு. குறிப்பாக டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்தும் விமான சேவை உண்டு.
இங்கிருந்து அதிவேக ரயில் மூலமாக நீங்கள் பைசா நகரை சென்றடைய முடியும். வெறும் பைசா கோபுரம் மட்டுமே காண இத்தாலி செல்வதென்பது சால சிறந்ததாக அமையாது.
நீங்கள் ஐரோப்பா கண்டங்களில் உள்ள பல நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ளும்போது இதை சேர்த்து கொண்டால் நல்லது. பைசா நகரம் சுற்றி பார்க்க ஒரே ஒரு தினம் ஒதுக்கினால் கூட போதும்.
உதாரணமாக, நீங்கள் பிளாரென்ஸ் (Florence) நகரில் தங்கி, ஒரே நாளில் பைசா நகரம் சென்று மகிழ்ந்து வரலாம். பிளாரென்ஸ் நகரமும் மிகவும் அருமையான நகரம். நீங்க டான் பிரவுன் (Dan Brown) என்ற எழுத்தாளர் விசிறி என்றால், இந்த இடத்தை பார்க்காமல் இருக்க முடியாது. அதை பற்றி வேறு கட்டுரையில் காண்போம்.
சரி, பைசா நகரங்களில் காண வேண்டியவை யாது?
அங்கே வசிப்பவர்களை கேட்டு பாருங்கள். அவர்களது பதில்கள் உங்களை ஆச்சர்யம் மற்றும் பிரமிப்பை மட்டுமல்ல, சந்தேகமே கூட பட வைக்கும்.
ஏனெனில் இங்கு கண்ணை கவரும் பல வரலாற்று படைப்புகள்இருக்கும் போதிலும், ஏனோ சுற்றுலா பயணிகள் யாவரும் சாய்ந்த கோபுரம் தவிர்த்து வேறு எதையும் காண வருவதில்லை.
இதில் அம்மக்களுக்கு வருத்தம் இருப்பினும், உலகதிசியம் தங்களது நகரத்தில் உள்ளதால் பெருமையே.
பைசா நகரமோ ஒரு சிறிய நகரமாகும், கால்நடையாகவே நீங்கள் இந்த ஊரை சுற்றி பார்க்க முடியும்.
நீங்கள் பைசா மத்திய ரயில் நிலையத்தில் வந்திறங்கினால், அங்கிருந்து பைசா கோபுரம் செல்ல பொது பேருந்துகள் உண்டு. ஆனாலும், சிறிய நகரம் என்பதால், நடந்தே நீங்கள் செல்லலாம்.
எனது அறிவுரையும் அதுதான். ஏனெனில், ஐரோப்பாவில் உள்ள எந்த நகரம் நீங்கள் சென்றாலும், முக்கிய இடங்களுக்கு நடந்து செல்வது நல்லது. அப்படி நடக்கும் போது வழியிலேயே நீங்கள் பல அறிய கட்டிடங்களையும், பாலங்களையும் கடந்து செல்ல வாய்ப்புண்டு.
கண்ணுக்கு கவர்ச்சியான இந்த போவுண்டைன் (Water Fountain) தான், நீங்கள் ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும் வரவேற்கும்.
ஒருவேளை உங்களுடன் முதியவர்கள் இருந்தாலோ, அல்லது நீங்கள் பேருந்தில் செல்ல நினைத்தாலோ, உங்களின் வலது பக்கமாக இருக்கும் பேருந்து நிலையத்திக்கு செல்லவும்.
அழகிய அந்த போவுண்டைன்-யை கடந்ததும், நீங்கள் காணும் சிலை தான், விட்டோரியா எமானுல்லே 2 (Victoria Emanule II). இவர் நமது தேச தந்தை காந்தி போன்றவர்.
நமது காந்தி போன்று அஹிம்சைவாதியோ என்று எண்ணிவிடாதீர். இவர் தான் இந்த ஒன்றுபட்ட இத்தாலியின் முதல் அரசர். இத்தாலி மண்ணில் எங்கு சென்றாலும் இவரது சிலை இல்லா நகரத்தை நீங்கள் பார்க்கவே முடியாது.
இவரை கடந்து சென்றால், இவரது பெயரிலேயே ஓர் முக்கிய சாலை சந்திப்பு வரும். இது நமது தீவு திடலை போன்று. சிறிதாய் இருந்தாலும், இங்கு தான் பல கணக்காட்சிகள் நடைபெறும்.
அப்படி நடந்த ஒரு கண்காட்சியின் புகைப்படமே இது.
வழிநெடுக உங்களை அழகிய கண்கவர் பூக்கள் வரவேற்றபடியே இருக்கும். உங்கள் மனம் கவர்ந்தவருக்கு வாங்கி மகிழ்விக்க இதுவே தருணம்.
நினைத்து பாருங்கள், “அர்னோ” நதியை கடக்கும் பாலத்தின் மத்தியில் நின்று உங்கள் காதலிக்கு நீங்கள் அந்த பூவை வழங்கினால் எப்படி இருக்கும்?
நினைப்பதோடு நிறுத்திவிட வேண்டாம், செயல்படுத்துங்கள். மகிழ்ச்சி உண்டாகட்டும்!!!
நீங்கள் செல்லும் வழியில் பல கிருத்துவ ஆலயங்களை காணலாம். நான் சென்றிருந்த போது, அங்கே ஒரு இளம் தம்பதியினருக்கு திருமணம் நடந்து கொண்டிருந்தது. இதுவரை நாதஸ்வரம் மேளதாளத்துடனே பார்த்த கண்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே தென்ப்பட்டது.
அதிஷ்டம் இருப்பின், நீங்களும் இதுபோன்று காட்சியை காணமுடியும்.
என்ன, நம்ப ஊரு மாப்பிளை, பெண் அழைப்புக்கு பயன்படுத்தும் கார் போன்று உள்ளதா?
இதோ இன்னும் சில நிமிடம்தான். அந்த தேவாலயத்திலிருந்து சில நிமிடம் கடந்து சென்றால், நீங்கள் இதுவரை காத்துவந்த பொறுமை எல்லாம் ஒரு நொடியினில் மறைந்து விடும்.
ஆம், சாய்ந்த கோபுரம் கண்ணில் பட்டவுடன், உங்களையும் அறியாமல் துள்ளி குதிப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
அங்குள்ள பலர், எதை காண வந்தோமோ அதை காணாமல், காமெரா நோக்கியே பார்த்தவண்ணம் இருப்பர். வாருங்கள் நீங்களும் ஜோதியில் ஐக்கியமாக.
ஆம், தங்கள் இஷ்டம் போலே படம் பிடிக்க இதுவே தருணம்.
சாய்ந்த கோபுரத்தை தள்ளும் மாதிரி வேண்டுமா, காலால் உதைப்பது போன்று படம் பிடிக்க வேண்டுமா, அல்லது அந்த சாய்ந்த கோபுரத்தை முட்டு குடுக்க வேண்டுமா? இது உங்கள் ராஜ்ஜியம், உங்கள் கற்பனை குதிரையை கட்டுப்படுத்த உங்களால் முடியவே முடியாது.
சரி, எவ்வளவு நேரம் தான் விழியிலிருந்தே அந்த கோபுரத்தை கண்டு களிப்பது? அதன் மீது ஏற ஆசையில்லயா?
நீங்கள் மேலிருக்கும் போது கோபுரம் சாய்ந்துவிட்டால் என்ன செய்ய என்று பயமா? பயப்பட வேண்டாம், அது போன்று ஒன்றும் ஆக வாய்ப்பில்லை.
கூற மறந்து விட்டேன். நீங்கள் ஒருவேளை அதன் மீது ஏற வேண்டுமாயின் அதற்கு தனி கட்டணம் உண்டு. விமானம் மூலம் கடல்கடந்து இதுவரை வந்த நீங்கள், இந்த சிறு கட்டணத்திற்கா மறுப்பீர்?
என்ன, மேலேறி பைசா நகரத்து அழகை ரசித்து விட்டீர்களா?
மறக்காமல், உங்கள் ஆசை தீர புகைப்படம் எடுத்த பின், அருகில் உள்ள ஐஸ்கிரீம் கடையில உங்கள் அபிமான ஜெலாட்டோ (gelato) வாங்கி உண்டு மகிழ்ந்து செல்லுங்கள்.
வீடு திரும்பியபின், நமது அரசாங்கத்திடம் கூறி இது போன்று நமது வரலாற்று சிறப்பு மிக்க பொக்கிஷங்களாகிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில், பாண்டிய மன்னனின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இன்னும் பலவற்றை மேம்படுத்தி மக்கள் பார்வை முன் வைக்க வழிவகை செய்யுங்கள்.
மீண்டும் அடுத்த பயண கட்டுரையில் உங்களை சந்திக்கும் முன்,
வணக்கம் சொல்லி விடை பெறுவது,
உங்கள் மகேஷ்