
ஒரு காளைமாடு புங்க மரத்தின் நிழலில் நின்று கொண்டிருந்தது. ஒரு வாரமா அங்கேதான் நின்று கொண்டிருக்கிறது. காலமெல்லாம் பாரம் சுமந்து வண்டி இழுத்து ஓய்ந்து போன அதன் கால்கள் இப்போது அதன் உடலை சுமப்பதற்கே சக்தியில்லாமல் தொய்ந்து போயிருந்தன. இனிமேல் இதனால் பிரயோஜனம் இல்லையென்பதால் சொந்தக்காரன் அந்தக் காளையை விரட்டி விட்டான்.
அப்போது அந்த மரத்தின் அருகே வந்த ஒருத்தர் தன் கையில் இருந்த பையிலிருந்து ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்து அந்த காளைக்குக் கொடுத்தார். காளையும் அன்போடு பழங்களைத் தின்றது. அப்போது அந்தப் பெரியவர் அந்த காளையைச் சுற்றி இருந்த சாணத்தை அள்ளி ஒரு கூடையில் போட்டுக் கொண்டார்.
எப்பவுமே கிராமம்னா மரத்தைச் சுத்தி ஒரு மைனர் கூட்டம் இருக்குமே? அது இங்கேயும் உண்டு.
ஒரு மைனர் சொன்னான் “ பெருசு, இவ்ளோ பெரிய மாட்டுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் போதுமா?”.
ஒரு மைனர் சொன்னான் “ எங்களை விடவா மாடுகள் மேலே அக்கறை உனக்கு?”
இன்னொரு மைனர் சொன்னான் “ இந்த பழம் கூட உன்னோட சொந்தக் காசில்லையாமே? இந்த மாடு போடற சாணியை எடுத்து வறட்டி தட்டி அந்தக் காசுலதான் பழம் வாங்கித் தறியாமே?”
உடனே சுற்றியிருந்த மூடர் கூடம் கொல்லென்று சிரித்தது.
அந்தப் பெரியவர் கூடையுடன் மூடர் கூடத்தினருகில் வந்தார். “ தம்பிகளா, நீங்கள்லாம் மாடுகளைக் காப்பத்தணும்னு கூட்டம் கூடிப் பேசறீங்க, ஆனா இத்தனை காலமா என்ன செஞ்சீங்க? இதோ இந்த காளை மாதிரி எத்தனையோ காளைகள் அனாதரவா இருக்கே! எதாச்சும் செய்யணும்னு தோணியிருக்கா? ஒரு கை புல்லாவது கொண்டு வந்து போட்டிருக்கீங்களா? இத்தனை வருஷமா இதெல்லாம் உங்களுக்காகத்தானே உழைச்சி ஓடாத் தேஞ்சுது? ஆமாய்யா, இதோட சாணியிலே வர்ற காசை வெச்சித்தான் பழம் வாங்கித்தாறேன். இல்லேங்கலே. ஆனா எந்த மாடும் ஒரு நாள் கூட ஓசியிலே நம்ம கிட்டே சாப்பிட்டதில்லே தெரிஞ்சுக்கோங்க. அதுங்களோட உழைப்புக்கு ஏத்த தீவனத்தையும் நாம கொடுத்ததில்லே. கடைசி வரைக்கும் உழைச்சு ஓடாத் தேஞ்சு உயிரை விடுமே தவிர ஒரு நாளும் இலவசத்தை எதிர்ப்பார்த்ததில்லை உங்களைப் போல”. சொல்லிவிட்டு நடையைக் கட்டினார் பெரியவர்.

அது வேற ஒண்ணுமில்லீங்க. கடந்த பட்ஜெட்டிலே விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அறிவிச்சாங்க. அதை இப்போ நடைமுறைப்படுத்தி இருக்காங்க. இதற்கு விவசாயிகள் மத்தியிலே பெருத்த வரவேற்பு இருந்தாலும் விவசாயிகளுக்காகவே நாங்க கட்சி நடத்தறோம்னு சொல்றவங்களும் நானும் விவசாயிதான்னு சொல்லிக்கற அரசியல் கட்சித் தலைவர்களும் இதை எப்படியாவது குறை சொல்லி விவசாயிகள் பலனடையாம செய்யணுங்கறதிலேயே குறியா இருக்காங்க. இந்த நல்ல விஷயம் விவசாயிகள்கிட்டே போய்ச் சேரக் கூடாதுங்கறதுல விலைபோன ஊடகங்களும் குறியாயிருக்கு.
என்ன காரணம்? வேற ஒண்ணுமில்லீங்க. காலங்காலமா விவசாயிகளை ஏமாத்தி பதவி சுகம் அனுபவிச்சாச்சு. இனிமே விவசாயிகள் சொந்தக் கால்லே நிக்க ஆரம்பிச்சிட்டா பொழப்பு போயிடுமில்ல?
விவசாயி பென்ஷன் அப்டீன்னா என்னா? 18 முதல் 40 வயசு வரையுள்ள 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் மாசம் ரூ.55 – 200 வரை கட்டினாங்கன்னா, அவங்க கட்டற தொகைக்கு ஈடா அரசாங்கமும் கட்டும், அவங்களோட 60 வயசுல குறைந்தபட்சம் மாசம் 3000 ரூபா பென்ஷனா கிடைக்கும். இந்த திட்டத்திலே விவசாயிகளோட மனைவிகளும் சேரலாம், அவங்களுக்கும் இதே ஸ்கீம்தான். இதை அருகிலுள்ள அரசு சேவை மையங்களில் சென்று சேர்ந்து கொள்ளலாம். ஆதார் கார்டும் பேங்க் பாஸ் புக்கும் இருந்தால் போதும். விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை வங்கிக் கணக்கில் இருந்து நேராக டெபிட் செய்யப்படும், மாசாமாசம் நேரே போய்க்கட்ட வேண்டிய அவசியமில்லை.
மிகவும் சுலபமான திட்டம். உடனே ஒரு கும்பல் – இது விவசாயிகள் கட்டும் பணத்தில்தானே பென்ஷன் தரப்படுகிறது, நீங்களென்ன இலவசமாகவா கொடுக்கிறீர்கள்? என்று கோஷம் எழுப்புகிறது.
ஒரு விஷயம் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகள் என்றைக்குமே காளையைப் போன்றவர்கள். எருது இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பார்கள். விவசாயிகள் என்றைக்கும் தங்களது தன்மானத்தை விட்டுக் கொடுத்ததில்லை. எந்த விவசாயியும் அடுத்தவரிடம் கையேந்தி நிற்பதில்லை. ஆனால் இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகள் என்றாலே எல்லாவற்றையும் இலவசமாக எதிர்பார்ப்பவர்கள் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
தமிழ் தமிழண்டா என்று கோஷமிடும் தமிழ்த் திரையுலகம்தான் தமிழ் ஆசிரியர் என்றாலே கோமாளி என்று ஆக்கி வைத்திருக்கிறது. அது போல விவசாயி என்றாலே எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழி, சட்டை கூட போடாமல் கோமணத்துடன் சுற்றுபவர், இலவசங்களுக்காகவே காத்துக் கொண்டிருப்பவர், கடனைத் திருப்பிக் கட்ட மாட்டார் என்பது போன்ற ஒரு உருவம் இங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமையிலும் விவசாயிகளில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் மிகக் குறைவு. சொல்லப் போனால் இன்றைக்கு இருக்கும் சில அரசியல் தலைவர்களை விடவும் அவர்கள் நன்றாகவே தவறில்லாமல் தமிழ் படிப்பார்கள் – துண்டுச் சீட்டு இல்லாமே தமிழ் பேசுவார்கள். அவர்களும் நாகரீகத்திலும் அறிவிலும் யாருக்கும் சளைத்தவர்களில்லை. தன்மானத்தில் சிங்கம் போன்றவர்கள்.
பென்ஷன் என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்த விஷயம். அதிலும் இதற்கு முன்பு பென்ஷன் என்பது ஓய்வுபெற்ற ஊழியருக்கு அரசாங்கம் கடைசிக் காலம் வரைக்கும் கொடுக்கும். ஆனால் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் இதுவும் மாறி விட்டது. வேலை செய்யும் காலத்தில் ஊதியத்தில் ஒரு சிறு பங்கு பிடித்தம் செய்யப்படும். அது வளர்ந்து ஓய்வு பெறும் காலத்தில் பெரிய நிதியாக சேர்ந்திருக்கும். அந்த நிதியிலிருந்து மாதாந்திர பென்ஷன் வழங்கப்படும். ஆக அரசாங்கம் பென்ஷன் என்பதை இலவசமாக மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுப்பதில்லை.
இதைப் போலத்தான் விவசாயிகளுக்கும் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இதிலென்ன தவறு?
விவசாயி கட்டிய காசில் பென்ஷன் கொடுக்காமல் இலவசமாகவே கொடுக்க வேண்டும் என்று வாயிலே வடை சுடுபவர்களைக் கேட்கிறேன் — காலம் முழுவதும் மக்களுக்காகவே கடுமையாக உழைத்து ஓய்ந்து போனவர்களைக் கடைசிக் காலத்தில் இலவசத்துக்காகக் கையேந்த வைப்பதுதான் உங்களுக்கு சோறு போட்டவருக்கு நீங்கள் செய்யும் கைம்மாறா? திலகர் இந்திய விவசாயிகளைப் பற்றிப் பெருமையாகக் கூறுவார் காசுக்காக கஞ்சா பயிரிடாமல் நஷ்டம் வந்தாலும் தொடர்ந்து மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களையே பயிரிடுகிறானே, அவர்தான் உண்மையிலேயே கர்மவீரர். இத்தகைய கர்மவீரனை தனது தன்மானத்தை இழந்து கடைசிக் காலத்தில் கையேந்தி நிற்கச் சொல்கிறீர்களா?
Pradhan Mantri Kisan Maan Dhan Yojana #PMKMY
விவசாயிகள் பென்ஷன் என்பது மக்களுக்கு உணவளித்து மகிழ்ந்த ஒரு கர்மவீரர் தனது வயதான காலத்தில் தலை நிமிர்ந்து தான் என்றைக்கும் அடுத்தவர் கையை நம்பி இல்லை என்ற கம்பீரத்துடன் வாழ வழி செய்யும் ஒரு திட்டம். முடிந்த அளவுக்கு இதனை விவசாயிகளிடம் எடுத்துச் செல்வோம். மனமில்லாவிட்டால் காழ்ப்புணர்ச்சியால் இதனைக் குறை சொல்வதையாவது நிறுத்திக் கொள்வோம். விவசாயியின் தன்மானத்தோடு விளையாடாதீர்கள். விளையாட்டு வினையாகும்.
ஸ்ரீஅருண்குமார்