pongal festival

பொங்கல் நல்வாழ்த்துகள் —  திடீர்னு ஒரு சந்தேகம், பொங்கல் என்பது தமிழர் திருநாள்னு சொல்றாங்க.  ஆனா கேரளா தவிர கிட்டத்தட்ட அஸ்ஸாம் முதல் பக்கத்துல இருக்க ஆந்திரா வரைக்கும் கொண்டாடும் பண்டிகையை எப்படித் தமிழர் திருநாள்னு சொல்லலாம்? ஆந்திராவில் இதைத் தெலுங்கர் பண்டிகைன்னு சொல்றதில்லை. கர்நாடகாவில் இதை கன்னடப் பண்டிகைன்னு சொல்றதில்லை. அப்புறம் இங்கே மட்டும் ஏன்?

சரி, மொதல்லே பொங்க வைப்போம் —  மறுபடியும் ஒரு சந்தேகம். என்ன பொங்கல் வைக்கறது?  சக்கரைப் பொங்கல்தான்னு பதில் சொன்னா சந்தேகமேயில்லாம நீங்க ஆரிய பார்ப்பன வடக்கத்தி வந்தேறி.  இன்னைக்கு ட்ரெண்ட் என்னன்னா சமத்துவ பொங்கல் வைக்கணும். அதென்னங்க சமத்துவப் பொங்கல்? அதாவது எல்லா சாதியினரும் மதத்தினரும் சேர்ந்து வைக்கிறதுக்குப் பேர் சமத்துவப் பொங்கலாம்.    இப்போதான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கிறிஸ்துமஸ் வந்தது, ஒருத்தரும் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாடலியேன்னு இன்னொரு சந்தேகம். கேட்டா என்னிய பயித்தியம்கறாங்க.

 இந்த வெளிநாட்டுக் கம்பெனிகள் இருக்கே அவிங்களோட ரவுசு தாள முடியல.  போன வாரம் வெள்ளிக்கிழமையன்னிக்கே பொங்கல் கொண்டாடிட்டாங்க. போதாக்குறைக்கு அன்னிக்கு கம்பெனியிலே எல்லோரும் வேட்டி கட்டணும்னு சொல்லிட்டாங்க —  ஆம்பிளைங்க மட்டும்தான், வயசான பாட்டையாக்கள் கொஞ்சம் அடங்குங்க. ஏண்டா நாலு நாள் முன்னாடியே கொண்டாடறீங்கன்னு கேட்டா பொங்கலன்னைக்கு லீவு, அப்புறம் வெளியூர்லேந்து வந்தவங்களெல்லாம் ஊருக்கு நாளைக்கே கெளம்பறாங்க, அதனால இன்னைக்கே பொங்கல்னாங்க. திடீர்னு இன்னொரு சந்தேகம் – மன்னிச்சுக்குங்க ப்ரோ, உடம்போடு ஒட்டிப் பிறந்தது சந்தேகம்.  நம்ம மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பொங்கல் பண்டிகைக்கு முன்னாடியே சமத்துவப் பொங்கல் வைத்த படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஒருவேளை அவரும் வெளிநாட்டுக் கம்பெனி நடத்தறாரோ? அல்லது போன வருஷம் பொங்கின படமா? யாராவது வெளக்குவீங்களா?

நாலு நாளைக்கு முன்னாடி கடைக்குப் போனேன்.  எதுக்குன்னு கேக்கறீங்களா? இருங்க கொஞ்சம் சஸ்பென்ஸ்.  சுறா மீன் இருக்கு, வஞ்சிரம் மீன் இருக்கு, ஆனா இந்த ஜாமீன் மட்டும் கெடைக்கலைன்னு சொல்வாங்களே அது மாதிரி நான் தேடினது மட்டும் கெடைக்கலை. நான் என்னங்க ஊரை ஏமாத்தின கேஸில ஜாமீனா கேட்டேன்? ஒரு பொங்கல் வாழ்த்துதானே கேட்டேன்!  இல்லவே இல்லேன்னுட்டான். இப்போல்லாம் யாரு சார் பொங்கல் வால்த்து ( கடையில் இருந்த பெண் அப்படித்தான் உச்சரித்தாள் ) அனுப்பறாங்க? எல்லாம் வாட்ஸப்பும் ட்வீட்டும்தான். சரி, அப்புறம் என்ன கண்றாவிக்கு புது வருட வாழ்த்து தொடங்கி ஹேப்பி டாய்லெட் டே வாழ்த்து வரைக்கும் வெச்சிருக்கீங்கன்னு ஒரு சந்தேகம் கேட்டேன். மொறைச்சிட்டுப் போயிடுச்சி.  என்னாங்க இது? தமிலர் பண்டிகைக்கு ஒரு வாழ்த்து அட்டை கிடைக்காதாம், ஆனா கண்ட கண்ட டேவுக்கெல்லாம் கிடைக்குமாம். இந்த லெச்சனத்துல தமிலர் பண்டிகைன்னு கூவுறோம்.

 

இப்படியெல்லாம் செஞ்சா டமில் எப்புடி வளரும்?  இதுல இவரு வேற தமிழுக்கும் தமிழருக்கும் இன்னல் என்றால் தமிழன் பொங்கியெழுவான், தாமதிக்க மாட்டான்னு காமெடி பண்ணிட்டிருக்காரு.  அப்பிடிக்கா கொஞ்சம் வெளியே வந்து கடைத்தெருவிலே நோட்டம் விடுங்க. ஏதாவது ஒரு கடை தவிர மத்த எல்லாமே இங்கீலீஸுலதான் கடை பேர் பலகை தொங்கும்.  கலைஞர் முதல்வராக இருந்தப்போ கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில்தான் இருக்க வேண்டும்னு ஒரு சட்டம் கொண்டு வந்தார். என்னுடைய நண்பர் அன்பு, ஒரு சலூன் வைத்திருக்கிறார்.  சின்ன வயசு முதலே கலைஞர் பக்தர் கரைவேட்டிதான் கட்டுவார். இந்த சட்டத்தைக் கேட்டதும் நொடிஞ்சு போயிட்டார். என்னவே ஆச்சு?ன்னு தெரியாம கேட்டுப்புட்டேன். வெளியே கூட்டிட்டுப் போய் அவருடைய பெயர்ப்பலகையைக் காண்பித்தார். நண்பருக்கு சமந்தா ஃபாக்ஸுன்னா உசுரு. அதனால கடையோட பெயரை  Sam Fox Hairdressing என்று வைத்திருந்தார். இதை “ சாம் நரி” முடி திருத்தகம்னு பேர் வெச்சா எவனாவது என் கடைக்கு வருவானான்னு சோகமா கேட்டார். 

 

நீங்க என்னதான் சொன்னாலும் கலைஞர் ஒரு தீர்க்கதரிசிதான். அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதனாலதான்  கடைகளுக்குத் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டும்னு சட்டம் கொண்டு வந்தவரு நிறுவனங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும்னு கொண்டு வரலை. இல்லேன்னா சன் டி வி, கே டி வி, ரெட் ஜயண்ட்னு பேர் வைக்க முடியாதே!

rajini meets karunanidhi and stalin watching

கலைஞர் அடிக்கடி சொல்லுவார் – நாங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்க்கிறோம்.  அது போல கலைஞர் எப்போதுமே சமஸ்கிருதத் திணிப்பைத்தான் எதிர்த்தாரே தவிர சமஸ்கிருதத்தை ஒரு கணமும் எதிர்த்ததில்லை.  அதனால்தான் நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனபோதும் கூட தான் எப்போதுமே கருணாநிதியாகவே இருந்தார். தயாநிதி, அருள்நிதி, உதயநிதி என்று சமஸ்கிருதத்தை அவர் எப்போதுமே ஆதரித்து வந்துள்ளார்.  

 

பொங்கல் ஒரு வழியாப் பொங்கியாச்சு, அதிலும் சமத்துவப் பொங்கல் கொண்டாடியாச்சு.  அடுத்தது சமத்துவ ஜல்லிக்கட்டு கொண்டாடலாமா? அட என்னங்க ஓடறீங்க? என்னாச்சு உங்களுக்கு? வாங்க எல்லா சாதியினரையும் சேர்த்து மாடு பிடிக்கலாம். அட என்னப்பா இது? பேசிக்கிட்டே இருக்கும்போதே பின்னங்கால் பிடறியில் பட ஓடுகிறார்?  எல்லா சாதிக்காரங்களும் சேர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தினா தப்பா? சமத்துவ ஜல்லிக்கட்டுன்னா மட்டும் ஏன் எல்லாரும் இப்படி விழுந்தடிச்சுக்கிட்டு ஓடறீங்க? அடப்பாவிகளா, இவ்வளவுதானா உங்க சமத்துவம்?

 

 

ஸ்ரீஅருண்குமார்

One Reply to “எப்போது பொங்குவோம்?”

  1. அது பழைய புகைப்படம் தான் ஆனால் என்னைக்கு பொங்கல் விட்டாங்கன்னு எனக்கு தெரியாது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.