
மோடியின் தலைமையிலான தற்போதுள்ள பிஜேபி அரசு, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வசதியை அனைத்து துறைகளிலும் செயல்படுத்துவதை பிரதானமாக முனைந்துள்ளது. DBT என்று கூறப்படும் Direct Benefit Transfer முறை- ஆதாரின் எண்ணின் மூலம், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல கோடிகள் மிச்சப்படுத்த பட்டுள்ளன. பல கோடிகள் என்றால், ஒன்று, இரண்டு கோடிகளோ, நூறு, இருநூறு கோடிகளோ இல்லை. 34000 கோடிகள். இதுமட்டுமன்றி, மூன்று கோடியே முப்பத்தி நான்கு லட்ச போலி நுகர்வோரின் பெயர்கள் LPG benefit திட்டத்தின் மூலமும், இரண்டு கோடியே 33 லட்சம் போலி ரேஷன் கார்டுகளும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட தொகை 50000 கோடிகள்.
எந்த ஒரு திட்டம் கொண்டுவரும் போதும், எதிர் கட்சிகள் மற்றும் “நிபுணர்” “ஆலோசகர்” என்ற பெயரில் எதிர் கட்சியை சேர்ந்த நடுநிலையர்கள் அனைத்தையும் குறை கூறுவதையும், அதன் மூலம் மோடி அரசின் மீது காழ்ப்புணர்ச்சியை உமிழ்வதிலும் முன்னின்று செயல் படுவர். மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ செய்கின்றனர். சமீபத்தில் ஸ்டெர்லைட் பற்றி இப்படி நிறைய காணொளிக்கள் வந்தன, நமது வானரம் வலை தளத்தில் அதை பற்றிய உண்மையை பதிவிட்டு இருந்தோம்.
எந்த ஒரு அரசும் மக்களிடம் இருந்து வரியாக பெறப்படும் வருமானத்தை மக்களின் மேம்பாட்டிற்கு செலவிடுவதே நோக்கமாக இருக்க வேண்டும். வருமானத்தை மக்களின் நலத்திட்டங்களுக்காக செயல்படுத்தாமல், அனைத்தையும் சலுகைகளாக வழங்கினால் இது எப்படி சாத்தியப்படும்? சலுகைகள் பெறுவதில் நடக்கும் மோசடிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல், புரியாமல் (அல்லது தெரிந்தே, புரிந்தே) இந்த அரசு “பெரியண்ணன்” போல செயல்படுகிறது என்று மயில்சாமி போன்ற பொருளாதார நிபுணர்கள் இதை குற்றம் போல் விமர்சிக்கிறார்கள்.
மோடி அரசின் அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சனம். பிறப்பு, படிப்பு, வேலை, திருமணம் என்று நிகழ்வுகள் பல உண்டு. அனைத்தும் உள்ளடங்கியதே வாழ்கை. அதுபோல் பணமதிப்பீடு இழப்பு, ஜன் தன் வங்கி கணக்கு ஆரம்பித்தல், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல் என ஒவ்வொரு திட்டமும் ஏமாற்றுகாரர்களை பிடிபட மட்டும் இல்லை, சலுகைகள் சரியான நபர்களுக்கு சென்று அடையவே. அதிமுக்கியமாக, நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தவே.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வரி கட்டுவோரின் எண்ணிக்கைக்குமான விகிதம் நம் நாட்டில் மற்ற வளரும் நாடுகளின் விகிதத்திற்கும் குறைவே. இதற்கான நீண்ட கால தீர்வு வரி கட்டுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதே. இதன் அர்த்தம் கூடுதல் வரி விதிப்பது எனப்தல்ல. வரி ஏய்ப்பவர்களை வரி கட்டச்செய்வதே. அப்பொழுதுதான் அரசுக்கு வருமானம் பெருகும், பொருளாதாரம் மேம்படும். சரி, இதை இந்த அரசு எப்படி செய்யபோகின்றது என்பதை தெரிந்துகொள்ளுதல் நன்று.
GST மற்றும் பணமதிப்பீட்டு இழப்பு
பணமதிப்பீட்டு இழப்பின் மூலம் அரசுக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளது. வங்கியில் செலுத்தப்பட்ட ஒவ்வொரு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களுக்கு தற்போது ஒரு முகவரி உண்டு. அதேபோல், Reverse Charge Mechanism மூலம் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பதிவு செய்யாமல் வியாபாரம் செய்து வந்த பலர் தற்போது புதிதாக தொடங்கப்பட்ட தொழில் போல் பதிவு செய்து வரி கட்டுகின்றனர்.
இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் வரி ஏய்ப்பவர்களை எளிதில் அடையாளம் காண உதவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய வரித்துறை கிடைக்கப்பெறும் அனைத்து தகவல்களை டிஜிட்டல் முறையில் மாற்றி அதை பான் கார்டு எண்ணை கொண்டு ஒப்பிட்டு சம்மந்தப்பட்ட நபர் முறையாக வரி கட்டுகிறாரா என்று அறிய முற்பட்டது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் வரி கட்டுவோரின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த பயன்பட்டது. இதற்காகவே “Project Insight” தொடங்கப்பட்டது.
மக்களுக்கு நன்மைபயக்க கூடிய வரித்திட்டம் என்பது எளிமையானதாக, போதுமானதாக, நியாயமான மற்றும் நிர்வாகம் செய்ய ஏதுவாக இருத்தல் அவசியம். Project Insightன் முக்கியமான அம்சம் – சமூக வலை தளங்களை கண்காணிப்பதின் மூலம் தனிநபரின் வருமானம் மற்றும் அவர் செலுத்திய வரியை ஒப்பிட்டு பார்க்க ஏதுவாக இருக்கிறது.
உதாரணமாக ஒருவர் ரோலெக்ஸ் வாட்ச் கட்டிக்கொண்டு தாய்லாந்து சுற்றலா சென்ற போட்டோ, ஹோண்டா சிட்டி காரின் முன்பு நின்று எடுத்த போட்டோ இவற்றை கொண்டு அவரின் வருமான வரி தாக்கல் ஆகியவை ஒத்து போகிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு சுவிட்சர்லாந்து அரசுடன் தகவல்களை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம் செய்தது இங்கே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இதுவும் project insight -இன் அங்கமே. மையப்படுத்தப்பட்ட வருமான வரி துறை போல, இதற்கும் மையப்படுத்தப்பட்ட துறை நியமிக்கப்பட்டு, முதற்கட்ட சோதனைக்கு பிறகு, சம்மந்தப்பட்ட நபர் அல்லது தொழில் நிறுவனத்திற்கு இ-மெயில் மற்றும் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்க கேட்கப்படும். முதற்கட்டமாக கிரெடிட் கார்டு பில், வங்கிக்கணக்கு அறிக்கை, பங்குகளில் உள்ள முதலீடுகள் ஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு மையப்படுத்தப்படும். பிறகு வருமானத்தை ஒப்பிட்டு அதில் தகவல்கள் பொருந்தாத பட்சத்தில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்.
பினாமி சட்டம்
GST மற்றும் பணமதிப்பீடு இழப்பு போல அடுத்து பினாமி சட்டத்தையும் அரசு கண்டிப்புடன் செயல்படுத்தி அதில் செய்யப்படும் வரி ஏய்ப்பையும் கண்டுபிடிக்க ஆவண செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்ற துறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட வரி ஏய்ப்பை இதில் பயன்படுத்தி மேலும் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை பெருக்க வழி வகுக்கவேண்டும். திரு.பார்த்தசாரதி ஷோமே அவர்களின் தலைமையில் இயங்கும் Tax Administrative Reforms Commission (TARC) தொழில்நுட்பத்தை விரிவாக பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது. GST, Demonetisation, ஆதார்-பான் கார்டு இணைப்பு, ஆதார்-வங்கிக்கணக்கு இணைப்பு இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் நாட்டையும், நாட்டுமக்களையும் மகத்தான பாதைக்கு கொண்டு செல்பவை. மக்கள் முறையான, சரியான வரி கட்டுவதை கடமையாக உணர வேண்டும். வரும் காலங்களில் வரிஏய்ப்பு என்பது அவ்வளவு சுலபமாக இராது. ஏய்த்தற்கான தண்டனையும் சாதாரணமாக இராது.
வழக்கம் போல நடுநிலையாளர்கள், சமூக காவலர்கள் என்ற பெயரில் இருக்கும் கனவான்கள் இதற்கு எதிர்ப்பை தெரிவித்து கொண்டே திட்டத்தை முடக்க பெரும் பாடுபடுகிறார்கள். தனிநபர் உரிமை பற்றி பேசுவதில் சில முரண்பாடுகள் இருந்தாலும், அதை சீர் செய்ய வேண்டுமேயன்றி, திட்டத்தை கைவிடுதல் சரியாகாது. அது மூக்கடைப்புக்கு மூக்கை வெட்டி எறிவது போல.
திரைப்படத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கு உடை கசங்காமல் வசனம் பேசுகிறவர்கள் வரி ஏய்ப்பில் முதலிடம் வகிப்பது அனைவரும் அறிந்ததே.