இது ஒரு மர்டர் மிஸ்டரி.  சாதாரணமா கொலைகாரன் யாருன்னு தெரியாம கண்டுபிடிப்பது ஒருவகை. இல்லைன்னா கொலைகாரன் யாருன்னு தெரியும், அவனை எப்படிப் பிடிக்கறான்னு காண்பிக்கறது இன்னொரு வகை, இது இரண்டாவது வகை.  கொலைகாரன் யாருன்னு மொதல்லயே தெரிஞ்சுடுது. நம்ம ஹீரோ எப்படி அவரைப் பிடிக்கறார்னுதான் கதையே.

 

ஆனா பாருங்க ஹீரோ எப்படியும் என்னைக் கண்டுபிடித்து வந்துவிடுவான்னு வில்லன் நம்புற அளவுக்குக் கூட ஹீரோவுக்கு அவர் மேலே நம்பிக்கை இல்லை.  ஹீரோ கண்ணு தெரியாதவர். அதனால ஓசையும் வாசனையும்தான் என் உலகம்னு பாட்டாவே பாடிடறார், அதனால அவருக்கு எப்படி பன்றியின் வாசனை தெரியும்னு கேக்கக்கூடாது, எம் ஆர் கே இண்டஸ்ட்ரீஸோட முதலாளி, பிஎம்டபிள்யூ, ஆடி, இஸுஸுன்னு விதம்விதமா கார்கள் வைத்திருக்கற முதலாளி ஏன் எப்போ பார்த்தாலும் பன்னிங்க கூடவே சுத்திக்கிட்டிருக்காருன்னும் கேக்கக்கூடாது.  அன்னிக்கு கொலைகாரன் காலேஜுக்கு வரணும், நான் மட்டும் அன்னிக்கு படிக்கட்டுல விழாம இருந்திருந்தா அவனைப் பிடிச்சிருப்பேன்னு நித்யா மேனன் சொல்றாங்க. கொலைகாரன் எதுக்காக காலேஜுக்கு வரணும்? எப்படி அவனை இவங்க அடையாளம் கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு கேக்கக்கூடாது. பார்க்கிங்க் லாட், நடுத்தெருன்னு பப்ளிக் ப்ளேஸுல கூடத் தன்னுடைய முகத்தையும் கையையும் மறைக்காமல் வருகிற கொலைகாரன் எதற்காகக் கல்லூரிக்கு முகத்தை மறைக்கும் அளவுக்குத்தொப்பியோட வந்தான்னு யாரும் கேக்கக்கூடாது.  எல்லா கொலைகளிலும் தலையை வெட்டற கொலைகாரன் சிங்கம்புலிக்கு மட்டும் சுண்டு விரலை மட்டும் வெட்டியது ஏன்னு கேக்கக்கூடாது. டார்ச்சுக்குள்ள சுண்டு விரல் இருக்கும்னு ஹீரோ எப்படிக் கண்டுபிடிக்கறார்னு கேக்கக்கூடாது. தமிழ் சினிமான்னா லாஜிக் பாக்கக்கூடாதுங்கறதை ஒழிக்க இன்னொரு மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடுதான் போடணும்.  

 

இதெல்லாம் பெரிய விஷயங்களே அல்ல, எல்லா தமிழ்ப்படங்களிலும் வருவதுதான், ஆனால் இதையெல்லாம் கவனித்து படம் பண்ணியிருந்தால்  உலக அளவில் பேச வைக்கலாம். ஆனா யாருக்குமே அக்கறை இல்லை.

 

ஆரம்பத்திலே அடுத்த சாதியிலே தன்னோட பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா கொலை செய்யறவன், அடுத்த மதத்துக்காரன்ற காரணத்துக்காகக் கொலை செய்யறவன் இவனெல்லாம் சைக்கோதான்னு அறிவியலுக்குத் துளியும் சம்மந்தமில்லாமல் ஒரு உளவியல் நிபுணர் பேசுகிறாராம்.  வேணாங்க, இதைச் சொன்னா உடனே நீங்க துக்ளக் வாசகரா? முரசொலி வாசகரான்னு கேள்வி வரும். விட்டுடுவோம்.

 

படம் முழுக்க கருத்து சொல்லியே சாகடிப்பாங்களோன்னு பயமாயிடுச்சு. சைக்கோ பண்ற கொலையை விட இதுதான் ரொம்ப பயமா இருந்துச்சு. நல்ல காலம், இல்லை, ஆனா எல்லாத்துக்கும் சேத்து வெச்சு கடைசீ காட்சியிலே கொலைகாரனைப் பாக்கலை, அவனை ஒரு குழந்தையாத்தான் பாத்தேன்னு ஹீரோயின் சொல்லும்போது ஆஹா அப்படியே புல்லரிக்குது.  14 கொலை செஞ்சிருக்கான் ஒருத்தன், அதுக்கான காரணத்தைப் பாத்தால் அவன் உள்ளுக்குள்ளே ஒரு பாதிக்கப்பட்ட குழந்தையாம். தாங்கலடா சாமி.

 

உதயநிதிக்கு லட்டு மாதிரியான ரோல்.  கண் தெரியாதவர்னு கறுப்புக் கண்ணாடியைப் போட்டதுல ஒரு எக்ஸ்ப்ரஷனும் காட்ட வேண்டிய அவசியமில்லை. போதாதா?

 

காதலியை இன்னும் ஒரு வாரத்துல கொல்லப் போறான்னா ஒரு பரபரப்பு வேணாமா? ஏதோ ஒரு வாரத்துக்குள்ள ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்கணுமாங்கற மாதிரி நிதானமா இருக்காரு ஹீரோ. ஏங்க கண்ணு தெரியாதவர்னா ஒரு பதட்டம் கூடவா இருக்காது?  அது சரி, எங்களுக்கு எக்ஸ்ப்ரஷன் அவ்வளவுதான் வரும்னு சொன்னீங்கன்னா நான் கேள்வியே கேக்கல. போதுமா?

சிட் ஸ்ரீராமின் குரலில் இரண்டு பாடல்கள் – இளையராஜாவின் இசையில் உச்சத்தைத் தொடுகின்றன. தன்வீரின் ஒளிப்பதிவு இன்னொரு உச்சம்.  இருளில் கார் செல்லும் காட்சிகள். நடிகர்களை முழுத்திரையில் காண்பிப்பது, என்று பல கோணங்களில் அசத்தியுள்ளார். பின்னணி இசை இளையராஜா. புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் கொலை அறைக்குள் கேட்கும் பின்னணி இசை – அட்டகாசம் இதயத்தை அதிரச் செய்கிறது.

 

கொலைகாரனின் பண்ணையின் வரைபடத்தை இசை நொடேஷன்களாக ஹீரோ மனப்பாடம் செய்வது புத்திசாலித்தனமான கற்பனை.  எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை, ஆனாலும் ரசிகனை உயர்த்துவதுதான் படைப்பாளியின் கடமை. அதை அழகாகச் செய்திருக்கிறார் மிஷ்கின்.

 

மொத்தத்தில் சூப்பர் ஹிட்டாக வந்திருக்க வேண்டிய படம். சில சின்னச் சின்ன ஓட்டைகள், நடிப்பில் கோட்ட விட்டது போன்ற காரணங்களால் சுமாரான படமாக வந்துள்ளது. ஆனாலும் சுமார் என்பதை மறைத்து கொஞ்சம் தூக்கி வைத்திருப்பது இசை, ஒளிப்பதிவு, பாடல்.

 

சைக்கோ – பயப்படாமப் போய்ப் பாருங்க.

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.