
தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்று கூப்பாடு போட்டு கொண்டிருக்கும் கூட்டம் இங்கிருக்கையில், சத்தமே இல்லாமல் கொஞ்சும் தமிழ் கொண்டு நம் நெஞ்சம் கொள்ளை கொண்ட செயல் இன்று அரங்கேறியுள்ளது.
எங்கே என்ற வினாவா? இந்தியாவில் தான்.
நம் நாட்டின் ஜனநாயக கோவில் சந்நிதியில் தான், ஆம் பாராளுமன்றத்தில் தான் இந்த அரங்கேற்றம்.
நடந்தது என்ன?
நம் வீட்டு பெண், இந்த நாட்டின் முதல் முழு நேர நிதியமைச்சர் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இந்நாட்டின் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்து கொண்டிருந்தார்.
அந்த உரையில் தான் இந்த பெருமை பெற்ற வாசகங்கள் எடுத்துரைக்க பெற்றன. இடம் பெற்றது சாதாரண வார்த்தைகள் அல்லவே. பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க இலக்கியங்களில் இருந்து புறநானூறு எனும் நூலில் இருந்து ஒரு சிறு தொகுப்பு. புலவர் பிசிராந்தையா
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை சோறு பதமல்லவா?
ஆம், இங்கும் யானை மற்றும் சோற்று பருக்கை பற்றியது தான் இந்த உரையும்.
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
இதன் பொருள்?
ஒரு சிறிய நிலங்களில் இருந்து பெறப்பட்ட நெல்லை கொண்டு செய்த உணவு கவளங்கள் பல யானைகளின் பசியைபோக்கிவிட முடியும். ஆனால், அதில் ஒரு யானை அந்த நிலங்களுக்குள் சென்று தானே உணவை உண்டு கொள்ள அவா கொண்டு சென்றால் என்னாகும்?
அந்த யானை உண்டு அழித்த நெற்கதிர்களை விட, அதன் கால்களில் சிக்கி மிதிபட்டு வீணான நெற்கதிர்களே அதிகம் இருக்கும். அது போன்றே, ஒரு அரசன் மக்களிடம் இருந்து எவ்வாறு அவர்களுக்கு எந்த ஒரு தீங்கும்மின்றி வரி பெற முடியுமோ அப்படி பெற்றால் மக்களிடம் அடித்து பறிக்கும் வரியை விட பல மடங்கு வரிகள் பெற்று நற்காரியங்கள் செய்ய முடியும் என்பதே இதன் பொருள்.
ஒரு நாட்டின் நிதியமைச்சர் இதை சொல்வது மட்டுமின்றி அதன் பொருள் புரிந்து நம் நாட்டு மக்களிடம் கவனமாக வரி வசூலித்தால் அனைவருக்குமே மகிழ்ச்சி தானே?
இந்த பாடல் ஒன்றும் புதிதில்லை.
ஆயிரம் ஆண்டுகளாக இந்த பரந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் உலவி கொண்டு தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பள்ளி குழந்தைகளின் ஏதோ ஒரு புத்தகத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு வரிகளில் ஒழிந்து கொண்டு தான் இருக்கிறது.
இருந்தும் என்ன பயன்?
குழந்தைகளும் படிக்கவில்லை, இது இருப்பதும் வெளியுலகத்திற்கு கொண்டு சேர்க்க படவில்லை. ஆனால், இன்று நடந்த இந்த ஒரு சம்பவங்களின் மூலமாக இது இந்திய நாடு முழுவதும் ஒலிக்கிறது என்றால் நமக்கும் பெருமையல்லவா?
நமக்கு இந்த பெருமையை பெற்று தந்த திருமகள் நிர்மலா சீதாராமனுக்கு நன்றிகள் பல.
ஏதோ மக்களின் மனங்களை கவர மட்டும் இதை உபயோகித்து கூறாமல், தங்கள் எண்ணங்களிலும் செயலிலும் நினைவுகூர்ந்து செயல்பட்டால் இந்நாடே வெற்றி களிப்பில் மகிழ்ந்து திகழும் என்றால் மிகையாகாது.
சாத்தியமாகுமா?
ஆகும் என்ற நம்பிக்கையில்,
உங்கள் மகேஷ்