rafale figher jet - indian air force

ரபேல் போர் விமான ஒப்பந்தம் – சரியா தவறா? ஒரு சிறப்புப் பார்வை!

ரபேல் ஏன்?

ரபேலின் அதி நவீன போர் விமான தயாரிப்பில் 30 வருட ஆய்வுப் பணியும் 43 பில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளன. இந்த விமானம் ஒரே சமயத்தில் பலவிதப் பணிகளை செய்ய முடியும், மிகவும் சிக்கலான இடங்களிலும் தரை இறங்க முடியும், எதிரிகளை ராடார் கருவியின் துணையில்லாமலே கண்டுபிடிக்க முடியும்.. இவ்விமானத்தை மிகவும் அஞ்சப்படும் போர் விமானமாகவும் உலகிலேயே மிகச் சிறந்த போர் விமானமாகவும் கருத முக்கிய காரணம் அதன் sensory & weapons system. அதனாலேயே செயல் பாட்டில் உள்ள 228 ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆகப்பெருமையாக பார்க்கப் படுகின்றன.

ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையின் ஓர் அங்கமாக ஆன பிற்பாடு இந்திய இராணுவம் ஒரு பராக்கிரமம் மிகுந்த இராணுவமாகப் பார்க்கப்படும். வெகு சில நாடுகளே இவ்விமானங்களை வைத்திருக்கின்றன. ரபேல் விமானத்துக்கு இரண்டு இஞ்சின்கள். இதைத் தயாரிப்பது பிரெஞ்ச் நிறுவனமான டசால்ட். முதல் விமானம் 2001ல் பிரெஞ்ச் விமானப் படைக்காக இந்த நிறுவனம் தயாரித்தது. போரில் அது செய்யும் சாகசங்கள் கணக்கில் அடங்காதவை.


indian airforce logoRafale fighter jets are positioned as ‘omnirole’ aircrafts. Air supremacy, interdiction, aerial reconnaissance, ground support, in-depth strike, anti-ship strike, and nuclear deterrence are the major facets of Rafale jets.


சுருங்கச் சொன்னால் போர்க்களத்தில் வானத்தின் தோல்வி காணாத அரசனாக அவன் இருப்பான். மத்திம அளவில் உள்ளது விமானம், ஆனால் மிக மிக சக்தி வாய்ந்தது, வெகு விரைவில் கட்டளைகளை மாற்றும்போது அதை கட்டளையிட்ட வேகத்தில் செய்து முடிக்கும் திறனுடையது, மறைந்திருந்து தாக்கும் தன்மையுடையது, டசால்ட் நிறுவனத்தின் அதி வேக போர் விமானம் புது தொழில் நுட்பம் அடங்கியது.

அதனால் இந்த ஒப்பந்தம் இந்திய விமானப் படையை இன்றைய தொழில் நுட்ப அளவில் முன்னிறுத்தவும் செய்கிறது, அதே சமயம் இந்தியாவின் பல நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்குகிறது. இரு விதங்களில் மிகவும் சாதகாமான ஓர் ஒப்பந்தம் இது.

ரபேலும் இந்தியாவும்

மோடி அரசாங்கம் செப்டெம்பர் 2016ல் ரபேல் தயாரிப்பில் 36 விமானங்களை 7.87 பில்லியன் யுரோக்களுக்கு வாங்க ஒப்பந்தம் போட்டது. ரபேல் ஒப்பந்ததந்தைப் பொறுத்த வரை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்துக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கும் இடையே ஒப்பந்தம் உருவானது. 36 போர் விமானங்களை இந்த நிறுவனம் இந்தியாவிற்கு அளிக்கும். இந்த ஒப்பந்தத்தில் முக்கியமான விஷயம் ஒப்பந்தத்தின் 50% தொகையை ஆப்செட் விதிமுறைப் படி பிரான்ஸ் நிறுவனம் இந்திய பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் இருந்து உதிரி பாகங்களை வாங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தால் இதில் உள்ள ஆப்செட் விதிப்படி இந்திய தொழிற்சாலைகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. அதனால் இந்த ஒப்பந்தம் இந்திய விமானப் படையை இன்றைய தொழில் நுட்ப அளவில் முன்னிறுத்தவும் செய்கிறது, அதே சமயம் இந்தியாவின் பல நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்குகிறது. இரு விதங்களில் மிகவும் சாதகாமான ஓர் ஒப்பந்தம் இது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் 2012ல் போர் விமானங்கள் வாங்க ரபேல் நிறுவனத்தை அமெரிக்க, ஐரோப்பிய, ரஷிய போட்டியாளர்கள் நிறுவனங்களில் இருந்து தேர்வு செய்து வைத்திருந்தது. அந்த முடிவின் தொடர்ச்சியான செயலே இது. ஆனால் ரபேல் ஒப்பந்தத்தை ஊழல் மலிந்த ஒப்பந்தம் என்று குற்றம்சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மோடி அரசு பதில் சொல்ல முடியாததால் சொல்லாமல் இல்லை. பாதுகாப்புக் கருதி பல விஷயங்களை அரசால் தகவல்களை வெளியிட முடியாமல் உள்ளது.

விலை அதிகமாக வாங்குவது ஏன் மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்று கேட்டால் அதற்குக் காரணங்கள் பல. இது மிக நவீன போர் விமானம். இது வரை எந்த நாடும் நாம் வாங்கும் குறிப்பிட்ட அம்சங்களுடன் இதை வாங்கவில்லை. அதனால் பிரான்ஸ் நாட்டின் அரசு இதை உருவாக்க எவ்வளவு செலவு ஆனது என்பதை அவர்கள் வெளியிட விரும்பவில்லை. இனி வருங்காலத்தில் வேறு நாடுகளுக்கு இதே போல விமானங்களை அவர்கள் விற்பனை செய்யும்போது அதிக இலாபத்துக்கு விற்க திட்டம். தற்போது விலையை வெளியிட்டால் பின்னாளில் அவர்களால் பேரம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர் என்பதால் ஒவ்வொரு அம்சத்துக்கான விலையை வெளியிட அவர்கள் தயாராக இல்லை.

ராணுவ ரகசியம்

மேலும் பல இரகசிய அம்சங்களினால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அம்சங்கள் India Specific Upgrades. இதனை மட்டும் தயாரிக்க 1.7 பில்லியன் யூரோஸ் ஆகியுள்ளது. இவை தேவையா, இந்த அம்சங்கள் அத்தனை பெரிய தொகைக்குப் பெருமானவையா என்றால் கண்டிப்பாக நம் நாட்டின் பாதுகாப்புக்கு இவை தேவை.. பிரெஞ்ச் அரசாங்கம் தற்போது வைத்திருக்கும் ரபேல் விமானங்களை விட இவை அதிக அம்சங்களை உடையவை, தங்கத் தரம் கொண்டவை.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒப்பந்தம் போட்டது மாருதி சுசுக்கி ஸ்விப்ட் LXi. ஆனால் பிஜேபி ஒப்பந்தம் போட்டுள்ளது மாருதி சுசுகி ஸ்விப்ட் ZXiக்கு. இன்னும் நிறைய செயல்பாட்டுத் திறனுடன் வருவதால் விலையும் அதிகம்.

காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு ரூ 54,000 கோடிக்கு 126 ரபேல் விமானங்கள் வாங்குவதாக, தொழில்நுட்ப இரகசியத்தையும் கொடுப்பதாகவும் உடன்படிக்கை போட இருந்தனர். ஆனால் மோடி அரசாங்கமோ இப்பொழுது 58,000 கோடி ரூபாய்க்கு 36 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது, தொழில் நுட்ப மாற்றில்லாமல்.


informationஆனால் ஒன்றை மறந்து விட்டுப் பேசுகிறார்கள். உடன்படிக்கையை அவர்கள் போடவில்லை. அந்த விலையில் பேச்சு வார்த்தை தான் நடத்தப்பட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ரபேல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தத்தையும் அவர்கள் ஆட்சியில் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. டசால்ட் நிறுவனத்துடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் இரண்டு முறை முறிந்து விட்டன.


மேலும் விமானத்தில் என்னன்ன அம்சங்கள் தேவை என்பதையும் அவர்கள் விவாதித்து முடிவுக்கும் வரவில்லை. அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் A.K. ஆன்டனியின் அதி ஜாக்கிரதைத் தன்மையினால் 2011ல் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் 2014ல் முறிவுக்கு வந்தன. இதற்கு நடுவில் விலை ஏற்றம் 10.4 பில்லியன் அமெரிக்கன் டாலரில் இருந்து $30 பில்லியன் ஆகிவிட்டது. மேலும் அந்த வருட இந்திய பட்ஜெட்டில் அதற்கான தொகை ஒதுக்கப்பட முடியாத நிலையானதால் 2015ல் முடிவெடுக்கத் தீர்மானித்தது அவ்வரசு.

ஆனால் மோடி அரசு செய்திருக்கும் ஒப்பந்தம் மிகவும் சிறப்பானது. ஒப்பந்த விலையானது:

36 பறக்கும் நிலையில் உள்ள ரபேல் விமானங்கள்

ஊழியர்கள் பயிற்சி

இந்திய விமானப் படையின் குறிப்பிட்டத் தேவைகளுக்கான அம்சங்கள்

யுத்தத் தளவாடங்கள்

தேவையான உள்கட்டமைப்பு

ஐந்து வருட பழுது பார்த்தல் ஒப்பந்தம்

இவையனைத்திற்கும் உள்ளடக்கம். அதனால் தான் ஒரு விமானத்தின் விலை என்று வகுத்துப் பார்க்கும் போது விலை அதிகமாகத் தெரிகிறது.

மேலும் முழு விலையை சொல்ல எந்தத் தடையும் இல்லை. செப்டெம்பர் 2016லியே ஒப்பந்த விலை 7.8 பில்லியன் யுரோஸ் என்ற தகவல் வெளியடப்பட்டுள்ளது. இங்கே ஒவ்வொரு பாகத்தின் விலை தான் வெளியிடப்படவில்லை. அதற்கான காரணத்தையும் நாம் முன்பே பார்த்துள்ளோம். இரகசியத்தன்மை காக்கப்பட வேண்டும் என்கிற ஷரத்து எல்லா இராணுவ ஒப்பந்தகளிலும் எல்லா நாட்டிலும் அவை வழங்கும் நிறுவனங்களும் போடும் சாதாரண நிபந்தனை. இது இந்தியா போட்ட பல பழைய இராணுவ ஒப்பந்தங்களிலும் கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன.


ஊடகங்கள் சொல்வது போல நியுக்ளியர் தளவாடங்கள் இவ்விமானத்துடன் வரப்போகின்றன என்பது உண்மை எனில் இரகசியத்தைக் காப்பாற்ற வேண்டியது இன்னும் அதிக அவசியமாகிறது. நியுக்ளியர் தளவாடங்களான அரிஹந்த் நீர் மூழ்கிக் கப்பல், அக்னி ஏவுகணை பற்றிய தகவல்கள் எத்தனை வாங்கப்பட்டன போன்ற புள்ளிவிவரம் கூட இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.


ஏன் டசால்ட் நிறுவனம்?

HAL நிறுவனம் தயாரிப்பு நிறுவனமாக 126 Medium Multi-Role Combat Aircraft (MMRCA)க்குத் தேர்வு செய்யப்பட்டாலும் ஒப்பந்த நிலையைக் கூட அது எட்டவில்லை. டசால்ட் நிறுவனத்துக்குப் பதில் HAL நிறுவனத்துடன் போயிருக்கலாமே, விலை குறைவாக இருக்குமே என்று சொல்பவர்களுக்கு, இந்திய நிறுவனம் என்றால் விலை குறைவு என்று எடுத்துக் கொள்ள முடியாது. தொழில் நுட்பத்தை நாம் வாங்கிக் கொள்வது ஒரு இலாபம் தான் எனினும் டசால்ட் அளவு HAL ஆல் உற்பத்தித் திறனில் முந்த முடியாது. நிறைய தொழிலாளர்களும் நிறைய நேரமும் விமானத்தை உருவாக்கத் தேவைப்பட்டிருக்கும். அதனால் பிரான்சில் தயாரிக்கப்படும் விமானத்தை விட பல மடங்கு விலை அதிகமாயிருக்கும். இதற்கு உதாரணம் இந்தியாவில் தயார் செய்யப்படும் Su-30MKI ரஷியாவில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுவதைக் காட்டிலும் விலை அதிகம். இதே மாதிரி தான் இந்த விமான தயாரிப்பும் ஊழியர்கள் பயிற்சி, இயந்திரங்களில் முதலீடு ஆகியவையால் விலை அதிகமாக ஆகியிருக்கும். மேலும் HAL விமானங்களை இன்னொரு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிப்பதில் தான் அந்த நிறுவனத்துக்கு அனுபவம்.

இங்கு போடப்பட்டிருக்கும் ஒப்பந்தமோ இந்திய நிறுவனங்களுக்கு உபரி பாகங்கள் தயாரிப்பில் ஆப்செட் செய்யப்பட வேண்டும் என்பதே, அதுவும் பாதுகாப்புத் துறையில். அவ்வாறு இருக்கும்போது எப்படி HAL நிறுவனத்தை எப்படி தேர்வு செய்திருக்க முடியும்?

மேலும் HAL நிறுவனத்தை ஒதுக்கியது டசால்ட் நிறுவனம், மோடி அரசு அல்ல. HALஐ சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று UPA அரசு பிடிவாதம் பிடித்ததால் தான் அவர்களால் ஒப்பந்தத்தை முடிக்க முடியவில்லை. டசால்ட் நிறுவனம் மிராஜ் 2000 ஒப்ந்தத்தில் அவர்களுடன் வேலை செய்த பயங்கர அனுபவமே அவர்களை HALஐ விலக்கி வைக்கக் கோரியது. HALன் டிராக் ரெகார்ட் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது தான் உண்மை.

ரிலையன்ஸ் டசால்ட் கூட்டு

ரிலையன்ஸ் நிறுவனம் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதை பெரிய விஷயமாக ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன. ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் உள்ள ஆப்செட் விதிப்படி பல இந்திய நிறுவனங்களை டசால்ட் நிறுவனம் பணியில் அமர்த்த உள்ளது. உண்மையில் ஒரு சிறு பகுதி வேலை தான் ரிலையன்சுக்கு போகப் போகிறது. பெரும் பகுதி Defence Research and Development Organisation (DRDO)க்குப் போகப் போகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாகங்கள் மக்கள் பயணிக்கும் விமானத்துக்கானவை தான். போர் விமானத்துக்கு ஆனவை அல்ல. டசால்டின் உலகளாவிய தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகப் பின்னாளில் ரிலையன்ஸ் அமையும். அவ்வளவே!

டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக இந்த ஆப்செட் திட்டத்தில் ஈடுபடும். இந்த நிறுவனத்தில் டசால்ட் பங்கு 49% உள்ளது. ரிலையன்சை தவிர Thales, Safran உள்ளிட்ட சில நிறுவனங்களுடனும் டசால்ட் இதே மாதிரி ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தினால் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ 30,000 கோடி ஆதாயம் பெறும் என்று சொல்லப்படுவது முற்றிலும் தவறு. இந்த ஒப்பந்தத்தில் 25% டசால்ட் நிறுவனத்துக்குப் போகிறது. மீதமுள்ளது Thales, Safran, MBDA மற்றும் இதில் பங்கெடுக்கும் இதர நிறுவனங்களும் பகிர்ந்து கொள்வார்கள். தயாரிப்பில் 72 இந்திய நிறுவனங்கள் இந்த ஆப்செட் விதிப்படி பயனடையப் போகின்றன. அவை HAL, BEL போன்ற நிறுவனங்கள் மேலும் L& T, மகிந்திரா குழுமம், கல்யாணி குழுமம், கோத்ரேஜ் குழுமம். பங்கு பெறுவார்கள். இது ஒரு கூட்டு முயற்சியே. அதனால் டசால்ட் நிறுவனம் ரூ 30,000 கோடி அளவிலான ஒப்பந்தங்களை ரிலையன்சுக்குத் தருகிறது என்பது முற்றிலும் பொய்யானது. மேலும் தொழில் நுட்ப/அறிவியல் பரிமாற்றத்துக்கு ஒரு விலை உண்டு. அதனை DRDOக்கு பரிமாற்றம் செய்வதால் 30% அந்தக் கட்டணத்துக்கு போய்விடும்.

இந்தியாவிற்கு போனஸ்

விலை அதிகம் விலை அதிகம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுவதை விட இதே விமானங்களை மற்ற நாடுகள் எந்த விலைக்கு வாங்கியுள்ளன என்று பார்த்தால் உண்மை விளங்கும். கத்தார் $292 மில்லியனனுக்கு வாங்கியுள்ளது, சேவை ஒப்பந்தம் மற்றும் தளவாடங்களுடன். எகிப்து $246 மில்லியனுக்கு, இந்தியா $243 மில்லியனுக்கு. ஆனால் இந்தியாவுக்கு கத்தாருக்குக் கிடைத்ததை விட அதிகமான சலுகைகள், 50% ஆப்செட் + இந்திய ராணுவத்துக்குத் தகுந்த மாறுதல்களுடநானா விமானம்.. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இது மிக சிறப்பான ஒப்பந்தமாகவே விளங்குகிறது!

ரிலையன்ஸ் டிபன்ஸ் அல்லது ரிலையன்ஸ் குழும நிறுவனம் எதுவுமே பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 36 போர் விமானங்களுக்கான பாகங்கள் செய்யும் ஒப்பந்தத்தைப் பெறவில்லை, இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்று ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் திங்கரா விளக்கம் அளித்துள்ளார். ஆப்செட் விதிப்படி ஒப்பந்தத்தை நிறைவேற்ற டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது. டசால்ட் நிறுவனம் தேர்வு செய்ததற்கும் பாதுகாப்பு அமைச்சகத்தும் இந்த விஷயத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவு படுத்தியிருக்கிறார் குழுமத்தின் தலைவர்.

ராகுலின் பொய்கள்

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டுக் குழுவினை அமைக்க வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். ஒரு தனி நபர் (அம்பானி குழுமம்) பயனடைவதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார். அம்பானியின் மோடியுடனான நெருக்கத்தைக் காரணமாக சொல்வது ஆதாரமற்றது என்கிறார் திங்கரா. 2005ஆம் ஆண்டு ஆப்செட் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 50க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேறி இருக்கின்றன. வெளி நாட்டு நிறுவனம் நேரடியாக உள்நாட்டு பங்குதாரரை முடிவு செய்யும், மக்களை குழப்புவதற்காக இந்த விவகாரம் பெரிதுபடுத்தப் படுகிறது என்று கூறியுள்ளார்.

ரபேல் டீல் அறிவித்தவுடன் தான் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் பதிவே செய்யப்பட்டது என்கிற குற்றச்சாட்டுக்கு அவர், மூன்று நிறுவனங்களை ரிலையன்ஸ் குழுமம் டிசெம்பர் 2014ல் பதிவு செய்துள்ளது. இதனை முறையாக பங்குச் சந்தை உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிவித்துள்ளோம், 2015பிப்ரவரி மாதம் தான் ரிலையன்ஸ் குழுமம் பாதுகாப்புத் துறையில் நுழைந்தது என்று தெளிவாக்கியுள்ளார். மேலும் மார்ச் 2015ல் ஊடகங்களில் டசால்ட் நிறுவன அதிகாரிகள் 95% டீல் முடிவடைந்து விட்டது என்று அறிவித்ததற்கான ஆதாரம் உள்ளது. அப்படியெனில் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் எந்த தேதியில் பதிவிக்கப்பட்டது என்பது பற்றிய சர்ச்சை எதற்கு என்றும் வினவியுள்ளார்.

36 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர் மோடி ஏப்ரில் 2016ல் பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற போது கையெழுத்திட்டுள்ளார். அனில் அம்பானி பிரான்ஸ் நாடு மற்றும் இதற் நாடுகளின் CEO குழுமத்தைச் சேர்ந்தவர், அதனால் மோடி ரபேல் ஒப்பந்தத்தை அறிவித்தபோது அனில் அம்பானி பேரிஸில் இருந்தது வியப்புக்குரியது இல்லை என்றும் திங்கரா கூறியுள்ளார். மோடியின் பிரான்ஸ் வருகையை ஒட்டி 25க்கும் மேற்பட்ட இந்திய நிறுவன CEOக்கள் அங்கிருந்தனர். அங்கு அவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் HAL நிறுவன சேர்மனும் இருந்தார் என்று சொன்னார்.

இந்த விமானங்கள் செப்டெம்பர் 2019 முதல் 2023க்குள் இந்தியாவுக்குள் வரும். அந்த சமயத்தில் எந்தெந்த உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்னும் தகவலை வெளியிட்டால் போதுமானது. அதனால் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் (தற்போது திருமதி. நிர்மலா சீதாராமன்) எங்கள் இருவரின் ஒப்பந்தம் குறித்துத் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என திங்கரா கூறியுள்ளார். ஆப்செட் ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை இணை செயலாளர் கையெழுத்திடத் தேவையா என்கிற கேள்விக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கும் வெளிநாட்டு விற்பனையாளருக்குமே ஒப்பந்தம் என்பதால் இந்திய ஆப்செட் கூட்டாளிகளுடன் அவர்கள் எந்த ஒப்பந்தமும் செய்யத் தேவையில்லை, கையெழுத்திடத் தேவையில்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 30,000 கோடி ரூபாய்க்குப் பதில் 1.3 லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளதா என்கிற குற்றச்சாட்டுக்கு நிச்சயமாக இதைவிட பொய்யான குற்றச்சாட்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளார். அரசாங்கம் 50 வருடத்துக்கான ஒப்பந்தத்தை ரபேலுடன் செய்யவில்லை அதனால் இந்த அளவிலான தொகையை உடைய வேலைகள் எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

இவை அனைத்தையும் பார்க்கும் போது அனாவசியமாக எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணுகின்றன என்பது தெளிவாகிறது. இந்த ஒப்பந்தத்தினால் பல நன்மைகள் நம் நாட்டுக்கு. விமானங்கள் விரைவில் (2-3 வருடங்களுக்குள்) கிடைக்கின்றன. இதே விமானங்களை இந்தியாவில் உற்பத்தி செய்திருந்தால் பல காலம் ஆகியிருக்கும், பணவீக்கத்தினால் வரும் விலையேற்றத்தைப் பற்றியும் ஒன்றும் சொல்ல முடியாது. பிரதமர் நரேந்திர மோடியும் அன்றைய பாதுகாப்புத் துறை மத்திய அமைச்சர் மனோகர் பரிக்கரும் நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும், விமானப் படையின் தேவையை அறிந்தும், பட்ஜெட்டில் இருக்கும் தொகையை வைத்தும் துரிதமாக செயல்பட்டு இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளார்கள். இவர்களுடைய ஆக்கப்பூர்வமான செயலும் இந்திய தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு எப்பொழுதும் செயல்படுவதும் பாராட்டுக்குரியது.

வாழ்க பாரதம்! வாழ்க தேசத்திற்குத் தொண்டாற்றும் முப்படையினர்! இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்!

~பல்லவி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.