ஆர் கே புரம் —  டில்லியில் பிரசித்தி பெற்ற ஒரு இடம்.  பெரும்பாலும் அரசு குடியிருப்புக்களாக இருக்கும். அதன் அருகிலேயே முனீர்கா.  இங்கிருந்து 620 என்ற டபுள் டெக்கர் பஸ் தினமும் காலை சுமார் 8 மணிக்குக் கிளம்பும்.  பெரும்பாலும் அரசு ஊழியர்களே பயணிக்கும் அந்த பஸ்ஸில் மாடியில் இடம் பிடிப்பதற்குப் பெரிய போட்டியே நடக்கும். கொஞ்சம் மெதுவாகத்தான் போகும். அந்த வண்டியில் ஏறி உட்கார்ந்தால் டில்லியில் இருப்பது மாதிரியே தெரியாது. ஏதோ மாம்பலத்திலிருந்து பாரீஸ் கார்னர் போகிறா மாதிரித்தான் இருக்கும். ஏன்னா சளசளன்னு ஒரே தமிழ்ப் பேச்சுதான். ஆமாங்க ஆர் கே புரம் தமிழர்களால் நிரம்பியது.  அங்கே ஒரு சிறிய குன்று. குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருப்பான் மொழிக்கிணங்க ஒரு அழகான முருகன் கோவில். மலைமந்திர் என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ள முருகனை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு. தைப்பூசம் முதல் எல்லாத் திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறும். தமிழர்கள் மட்டுமின்றி டில்லியில் இருக்கும் பல வடஇந்தியர்களுக்கும் நம் முருகன் இஷ்ட தெய்வமாகி விட்டார்.  ஏராளமான வடஇந்தியர்கள் கோவிலுக்கு வந்தவண்ணமிருப்பர். இதெல்லாம் எப்படி? 1990கள் வரைக்கும் ஸ்டாஃப் ஸெலக்ஷன் கமிஷன் என்றால் அதில் பெரும்பான்மையாகத் தேர்வில் வெற்றி பெற்று டில்லிக்கு வேலைக்குச் செல்வதில் முதலிடம் நம் தமிழர்கள்தாம் ( நாம் தமிழர்கள்னு தப்பா படிச்சிடாதீங்க). எந்த மத்திய அரசு அலுவலகத்தை எடுத்தாலும் அதில் தமிழர்கள்தான் ஏராளமாக இருப்பார்கள். இத்தனைக்கும் டில்லிக்குப் போகும் வரைக்கும் பல பேருக்கு ஹிந்தியே சுட்டுப்போட்டாலும் வராது. எல்லாம் அங்கே போய்த் தட்டுத் தடுமாறி கத்துக்கிட்டதுதான். மேலே சொன்ன இடங்களில் சலூன், இஸ்திரி, தள்ளுவண்டி, ஹோட்டல், பேச்சுலர்கள் தங்குமிடங்கள், மெஸ் என எல்லாமே தமிழர்கள்தான்.

ஒரு நாள் கூட, இன்று வரைக்கும், தென் இந்தியர்கள் இங்கே எல்லா அரசு வேலைகளையும் ஆக்ரமித்துக் கொண்டனர்.  ஆகவே ஹிந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு வேலை, அதுவும் டில்லியில் வேலை என்று எந்த வடஇந்தியக் கட்சியும் கோஷம் எழுப்பவில்லையே?  ஒருவேளை நம்மை விடவும் வடஇந்தியக் கட்சிகள் பரந்த இதயம் படைத்தவர்களா? வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது பொய்யா? வந்தாரை வாழவைக்கும் டில்லி என்பதுதான் உண்மையா?

 

சில வருடங்களாக ரயில்வேயில் வடஇந்தியர்கள் வேலைக்கு சேருவது அதிகமாகி விட்டது, இதனைத் தடுக்க வேண்டும் என்ற கூக்குரல் அதிகமாகி உள்ளது. தற்போது இது வங்கித் துறையிலும்.  இதற்கெல்லாம் காரணம் என்ன? இதனை எதிர்க்க வேண்டுமா? இதனை எப்படித் தடுப்பது?

 

தமிழ்நாட்டில் எஸ் டி பிரிவினர் 1% தான் உள்ளனர். ஆனால் மத்திய அரசுப் பணிகளில் இவர்களுக்கான இட ஒதுக்கீடு 7.5%.  ஆகவே இதனை ராஜஸ்தான், பீஹார், ஜார்க்கண்ட் முதலிய மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அடுத்தது இவர்கள் 10+2 முடித்தவுடன் உடனே எல்லோரையும் போல எஞ்சினீயரிங்க் என்ற மாயையில் விழாமல், எதாவது ஒரு பி.ஏ. படிப்பில் சேருகின்றனர். கூடவே மூன்று வருடங்களும் ரயில்வே வங்கிகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்குக் கடுமையாக பயிற்சி எடுக்கின்றனர்.  பெரும்பாலும் ஹிந்தி மீடியம்தான் இவர்கள் படிப்பது. கேள்வித் தாளும் ஹிந்தியில் இருப்பதால் கடும் பயிற்சியும் உதவுவதால் சுலபமாகத் தேர்வுகளில் வெற்றி பெற முடிகிறது. ஆனால் எல்லாரும் சொல்வதைப் போல இவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதேயில்லை, ஹிந்தியிலேயே பேசுகின்றனர் என்பதெல்லாம் பொய்ப்பிரச்சாரம். காய்கறி வாங்கவும் கடைத்தெருவுக்கு வந்து பொருள் வாங்கவும் ஹிந்தி உதவுமா? அப்படி ஹிந்தியில் மட்டுமே பேசிப் பிழைக்கிறார்கள் என்றால் காய்கறி விற்பவரும் மளிகைக்கடைக்காரரும் ஹிந்தியில் பதில் சொல்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

 

யாரும் திருட்டுத்தனம் செய்து வேலைக்கு வருவதில்லை –  திறமையால் சாதிக்கிறார்கள். கம்ப்யூட்டர் மூலம் தேர்வுகள் வந்த பிறகு, அதுவும் இதனை டி ஸி எஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் நடத்தும்போது ஊழலுக்கு இடமில்லை.  இதனை ஏன் எதிர்க்க வேண்டும்? யாருக்குமே சம்மந்தமில்லாத ரோஹிங்க்யா முஸ்லீம்களை ஏற்போம், ஆனால் நம் நாட்டின் குடிமகனை எதிர்க்க வேண்டுமா?

 

இந்த எதிர்ப்புக்குரலுக்கெல்லாம் காரணம் – எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லையே என்பதுதான். சரி, இன்றைக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கட்டுமானப் பணிகளுக்கு பீகாரிகள்தான். இதனை யாரும் எதிர்க்கவில்லையே? ஹோட்டல்களில் எங்கு பார்த்தாலும் வடகிழக்கு இந்தியர்கள்தான். இதனை யாரும் எதிர்க்கவில்லையே?  சரவணா, ஜெயச்சந்திரன், சென்னை சில்க்ஸ் என்று இந்தக் கடைகளில் கூட பிகாரிகள், ஒடிஸாக்கள் ஏராளம். இதனை ஏற்றுக் கொள்வதற்குக் காரணம் – இந்த பிசாத்து வேலைக்கெல்லாம் நான் போக மாட்டேன்.

                                                         

ஆக, வடஇந்தியர்களுக்கு எதிரான ஒட்டு மொத்த எதிர்ப்பு என்பதல்ல இது. எனக்கு விருப்பமான வேலைகளில் நீ வரக்கூடாது. நான் ஒதுக்கும் வேலைகளுக்கு மட்டுமே நீ வர வேண்டும்.  இதென்ன நியாயம்? ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தியாவில் எந்த மூலையிலும் சென்று வேலை செய்யவோ, குடியேறவோ, தொழில் செய்யவோ உரிமை இருக்கிறது. இத்தனை வருடமாக ஒட்டு மொத்த இந்தியா என்று சொன்னாலும் அது உண்மையல்ல. ஆகஸ்டு 5 முதல்தான் இது உண்மையானது – 370 போன பிறகு,  இதனை எதிர்ப்பது என்பது அரசியல் சட்டத்தை எதிர்ப்பதாகும்.

 

சரி, உங்களுக்கு ரயில்வே வங்கி வேலைதானே வேண்டும்? அப்போ ஒண்ணு செய்ங்க.  இந்த எஞ்சினியரிங்க் மோகத்தை விட்டொழித்து ஏதாவது ஒரு பட்டம் போதும் என்ற அளவில் பி ஏ, பி எஸ் ஸி, பி காம் சேருங்கள். அய்யய்யோ, நான் வாங்கியிருக்கற மதிப்பெண்ணுக்கு எஞ்சினியரிங்க்தான் கிடைக்கும் என்கிறீர்களா? (ஆமாம், இப்போ ட்ரெண்டே வேற) சரி, தபால் மூலம் படிக்கலாமே.  போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும். இதன் மூலம் மூன்றாம் வருடம் தேர்வெழுதிய உடனேயே போட்டித் தேர்வுக்களத்தில் குதித்து விடலாம், அதிகபட்சம் இரண்டு வருடங்களில் ஏதாவது ஒரு மத்திய அரசு வேலையில் சேர்ந்து விடலாம்.

ஒரு காலத்தில் தலைநகரத்திலேயே கொடிகட்டிப் பறந்த நாம் இன்றைக்கு நம் மாநிலத்திலேயே போட்டியிட் முடியலையே ஏன்?  இங்கே நடப்பது என்ன? தமிழிலே தேர்வு நடத்த வேண்டும் என்கிறோம். தமிழைக் கூடப் பிழையின்றி எழுதவோ படிக்கவோ தெரியாத மூடர் கூட்டம் கல்லூரிகளில் இருப்பதைக் காப்பான் நமக்குக் காட்டி விட்டாரே.  இதில் தமிழிலே தேர்வு வைத்தால் மட்டும் அப்படியே அடித்துக் குவித்து விடுவார்களா? இன்னொரு புறம் கட் அவுட் வைப்பதற்கும் பேனர் வைப்பதற்கும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போவதற்கும் ரிபீட் ஷோ போவதற்குமென்றே திரிந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம். எது கிடைக்கும் உடனே போராட்டம் நடத்தலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம்.  சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு கூட்டம். டிக் டாக் வீடியோவில் எத்தனை லைக் வருகிறதென்று காத்துக் கிடக்கும் ஒரு கூட்டம். யாரு ரூட்டு தல என்ற போட்டியில் எவனை எப்படிப் போடலாம் என்று காத்துக் கிடக்கும் ஒரு கூட்டம். மது, புகை என மூழ்கிக் கிடக்கும் ஒரு கூட்டம். என்னமோ ஒரு மூணு வருஷம் காத்துக்கிடந்தால் உலகத்தில் பெண்களே இல்லாமல் போய்விடுவது போல கல்லூரிப் பருவத்திலேயே காதலை முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒரு கூட்டம்.  இந்தக் கூட்டத்திற்கு நடுவே திறமை இருந்தும், ஆர்வம் இருந்தும் போட்டித் தேர்வுகளுக்குப் புத்தகங்கள் வாங்கவோ பயிற்சி நிறுவனத்தில் சேரவோ வசதியில்லாத ஒரு கூட்டம் மாட்டிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றது.

 

இப்போது சொல்லுங்கள் – நன்றாக ஓடுபவனையெல்லாம் ஓடக்கூடாது என்று தடுத்து விட்டு நான் ஜெயிக்க வேண்டும் என்று சொல்வது சரியா?  இதனால் பாதிக்கப்படப்போவது பொதுஜனம்தான். ஏன்னா இவங்கதான் நாளைக்கு ரயில்வேயிலும் வங்கிகளிலும் அமர்ந்து கொண்டு உங்களை வாட்டுவார்கள். 

இந்தியா என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது.  என் மாநிலம், என் மொழி என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருக்க நினைப்பவன் யாராக இருந்தாலும் அவன் தேசத்துக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, உங்களுக்கும்தான் துரோகம் செய்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.  திரைப்பட மோகத்திலிருந்தும், போதைப் பழக்கங்களிலிருந்தும், தேவையற்ற விஷயங்களிலிருந்தும் விடுபட்டு வாழ்க்கையில் உருப்பட வேண்டும், நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், அறிவைக் கூர் தீட்ட வேண்டும் என்று முனைப்புடன் இறங்காதவரைக்கும் ரயில்வேயிலும் வங்கிகளிலும் நமக்கு வெயிட்டிங்க் லிஸ்ட்தான்.  தமிழண்டா என்று மார் தட்டும் நாம் நமது திறமையால் இதனை மாற்ற முடியாதா?  

 

ஸ்ரீஅருண்குமார்

One Reply to “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே…”

 1. more than that,
  The quality of education has faded away in many states and TN is one such.
  we see “Qualified engineers” struggling in their respective challenges
  1. Engineers do not want to appear for any competitive exams
  2.Poor quality of education taking people to high degrees. Hence an MA holder could hardly pass a bank-clerk exam while a simple B.A from IGNOU (with a good quality of educaitno) cracks all these competitions
  3. as said in this article, the CINEMA has taken more strength compared to value system

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.