
ஒருவழியாக ரஜினி அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டார். சரி நாம அடுத்த போராட்டத்துக்கு தயராவோம்ன்னு பாத்தா, மனுஷன் ஆன்மீக அரசியல்ன்னு ஒரு புது குண்டை போட்டுட்டு போயிட்டார்.
இந்த வாரம் ஞாயிறு தொடங்கியதுமே தமிழக அரசியலில் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது. ரஜினி கிளம்பி விட்டார், காரிலிருந்து இறங்கி விட்டார் என்று லைவ் அப்டேட். எப்படியும் ஒரு குழப்பமான முடிவை எதிர்நோக்கி டீக்கடையில் இருந்த மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏன் அரசியல்கட்சிகள் கூட.
அவர் பேச்சும் அப்படியே. ஹ்ம்ம் வழக்கம் போல என்று நினைத்து சற்றே இளைப்பாறும் பொழுது இரண்டு முத்தான அணுகுண்டுகளை வீசினார். ஒன்று ஆன்மீக அரசியல். இரண்டாவது பாசிடிவ் அரசியல்.
இரண்டுமே இன்றைய தமிழக அரசியலில் இல்லாதது, இன்றியமையாதது. அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிட்டால் அவர் என்று இருந்த மக்கள் இருவருமே இல்லாத நிலையில் ஒரு வெறுமையான, நெகடிவ் அரசியலை (எதிர்மறை) முன்னோக்கி இருந்தனர். முன்னெடுக்கும் அடுத்த வாரிசுகளும் அதை பொய்க்க தவறினர். 15நாளில் கூடங்குளம் போல 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ப்பு, அதை ஒட்டிய போராட்டங்கள் என்று இனிதே நடந்து, மக்கள் ஒரு பண்டிகையை கூட அவநம்பிக்கையுடன் எதிர் கொண்டனர்.
ஆக இன்றைய தேதிக்கு பாஸிடிவ் திங்கிங் (நேர்மறை எண்ணம்) என்னும் தாரக மந்திரம் இன்றியமையாதது. அடுத்து ஆன்மீக அரசியல். ஒருவர் ஆன்மீகவாதி என்று சொல்லவே கூச்சப்படும் அளவுக்கு இங்கே எதிர்மறை திராவிட அரசியல் ஊறி போயிருந்தது.
ஒரு இணையதளத்தில் “எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவருமே செய்ய தயங்கியதை அசால்டாக செய்த ரஜினி” என்று வஞ்சப்புகழ்ச்சி பாடியிருந்தனர். உண்மை. இருபெரும் சக்திகள், சிறந்த பக்திமான்கள் சொல்ல தயங்கிய வார்த்தைகள், மாற்றுமதத்தினரை திருப்திபடுத்தும் அரசியலே அங்கே மேலோங்கி இருந்தது.
இன்று GST விளைவு கூட இங்கே வரி பற்றிய ஒரு அறிவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வரை வரி பற்றி தெரியாத வணிகர்கள், பாமர மக்கள் இன்று GST சதவிகித வகையில் தெரிந்து உள்ளனர். அது போல தான், ஆன்மீக அரசியலை பேச கூச்சப்பட்ட, அச்சப்பட்ட இடத்தில் அதை விவாத பொருளாக்கிய ரஜினி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.
இந்த வாரம் முழுவதுமே தமிழக அரசியல், இந்திய அரசியல் ரஜினியை மையம் கொண்டே இருந்தது. அவர் கருணாநிதியை சந்தித்தது, இராமகிருஷ்ண மடம் சென்றது என்று ஒரு பக்கம், அவர் வருகையை நையாண்டி செய்த அரசியல்வாதிகள், அதை வைத்து விவாதங்கள் என்று மறுபக்கம்.
ஒரு சில அரசியல்வாதிகள் அவரை ஒரு பொருளாக கருதவில்லை என்று சொல்லி நைய்யாண்டி செய்யும் போதே அவர் நினைத்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்று நினைக்கிறேன். கருணாநிதியிடம் ஆசி வாங்கும் போது ஸ்டாலினின் முகபாவமும், அவர் சென்றவுடன் உமிழ்ந்த வெறுப்பும் அதை கோடிட்டு காட்டியது.
அவரை வெறுப்பதாக சொல்பவர்கள் சொல்லும் நான்கு காரணங்கள்.
1. அவர் கட்சி பேரே வைக்காமல் வந்து அரசியல் செய்ய வருகிறார். அவரிடம் என்ன கொள்கை உள்ளது?
சரிதான், இங்கே படத்துக்கு பெயர் வைக்காமல் அதை ஓர் நாளில் அறிவிக்கும் போது உணர்ச்சிவசப்படும் கூட்டம் இதை எதிர்பார்ப்பது தான் முரண். சரி கொள்கை, திமுகவின் கொள்கை என்ன, அதிமுகவின், அட தினகரனின் கொள்கையாவது தெரியுமா அடித்தட்டு மக்களுக்கு. இங்கே கொள்கை அரசியல் எல்லாம் குப்பையில் போடப்பட்டு வெகுநாளாகி விட்டது. கொள்கை மட்டுமே அரசியல் என்றால் இங்கே கம்யூனிஸ்ட் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். அந்த கம்யூனிஸ்ட் கூட தங்கள் கொள்கையை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கவேண்டிய கட்டாயம் இங்கே.
கூட்டணி பேரங்கள் தான் கொள்கையை முடிவு செய்கின்றன. அப்படி இருக்க ரஜினி மட்டும் அரசியலுக்கு வர போகிறேன் என்று சொல்லும் பொழுதே கொள்கையை எழுதி கையெழுத்திட்டு பத்திரிக்கையாளரிடம் கொடுத்து விட்டு வரணுமா என்ன? அவர் கொள்கை அவருக்குள் இருக்கட்டுமே, வேண்டும் பொழுது வெளியிடட்டுமே, பிடிக்கவில்லை என்றால் ஓட்டு போட மாட்டேன் என்று உறுதியாக!! உள்ளீர்கள் அல்லவா, அப்பொழுது பார்த்து கொள்வோமே. ஏன் அவசரம். அட கமலிடம் கூட இதுவரை இதைபற்றி யாரும் கேட்கவில்லை. ஏன் அவர் எல்லாம் வரமாட்டார் என்ற தைரியமா, இல்லை சொன்னால் புரியாது என்ற பயமா. அதாகப்பட்டது, ரஜினி வந்தால் தாக்கம் இருக்கும் என்ற பயம். தாங்கள் காணாமல் போய்விடுவோம் என்ற பயம். அதுவே காரணம்.
2. அவர் வந்தால், அவர் குடும்பம் ஆட்சியில் மூக்கை நுழைக்கும்.
இது ஒருவகையில் உண்மையே. அவரை வைத்து சினிமாவில் புகழ்தேடும் அவர் குடும்பத்தார் அரசியலிலும் செய்வர் என்ற பயம் இயல்பானதே. அதை அவரது மூர்க்கமான ரசிகன் கூட விரும்பவில்லை என்பது உண்மையே. ஆனால் இதை யார் சொல்வது. வாரிசு அரசியல் செய்ய காஞ்சிமடமா என்ற திமுகவின் வாரிசுகளா, 33 வருடங்கள் கூட இருந்த நண்பர் ஆட்சி செய்யலாம் என்று கூறிய அதிமுகவா, என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று முழங்கிய பாமகவா? இன்னும் சொல்லலாம். காங்கிரஸ் இளவல் சொன்னது போல அது என் உரிமை என்று இன்று அனைவரும் சொல்லிவிட்டு போகின்றனர். வாரிசு அரசியல் இல்லா, திமுக மாவட்ட செயலாளர் ஒருவரை காண்பிக்க சொல்லவேண்டும் முதலில்.

“பாவம் செய்யாதவர் யாரோ அவர் எல்லாம் இவள் மீது கல் எறியுங்கள்” என்ற வாசகம் நினைவில் வந்து தொலைக்கிறது. அவர் தான் ஒரு அணி திரட்டிவருகிறாரே. பார்ப்போம். ஏன் அதற்குள் அவசரம். பிடிக்கவில்லை என்றால், மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம். வாரிசு இல்லாத எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும்தான் அதிகம் ஆட்சி செய்துள்ளார்கள் வாரிசு அரசியல் செய்த கருணாநிதியை விட. ஆனால் இங்கேயும் கெஜ்ரிவாலுடன் அரசியல் பேச தனது வாரிசை கூட அமர்த்திய கமலிடம் யாரும் இந்த பாழாய் போன கேள்வியை கேட்கவில்லை. திரும்பவும் அவ்வளவு நம்பிக்கையா, இல்லை பயமா?
3. இது வரை என்ன செய்தீர் எமக்கு, போராட மட்டும் நாங்கள், ஆட்சிக்கு நேராக நீங்களா (அமீரின் பேட்டியில் இருந்து திருடப்பட்டது).
அரசியலுக்கு வராமல் வலைதளங்களில் பேசிக்கொண்டும் அறிக்கை விட்டு கொண்டும் இருந்தால், சினிமாவில் இருந்துகொண்டு அரசியல் பேச கூடாது, எதுவாக இருந்தாலும் அரசியலுக்கு வந்த பின் பேசவும் என்று ஒரு முழக்கம் கேட்ட ஞாபகம். அதுவே வந்த பின் என்றால் ஏன் நேற்றே செய்யவில்லை என்று ஒரு கூக்குரல். நீங்கள் சரியாக போராடி இருந்தீர்கள் என்றால் நீங்களே போதும் என்று அவர் ஒதுங்கி இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். சரியாக போராடவில்லையா, இல்லை சரியான விஷயத்துக்கு போராடவில்லையா. பின்னது சரி என்று நினைக்கிறேன். இங்கே அரசியல் கட்சிக்களுக்கு குறைவில்லை, நல்ல தலைவர்களுக்கு தான் பற்றாக்குறை. போராட்டம் மட்டுமே இங்கே வெற்றி பெற்றதில்லை. சாதுர்ய அரசியல் தான் இங்கே ஆட்சி பீடம் வழங்கி உள்ளது. ஒரு ஜல்லிக்கட்டு வெற்றி பெற்றதும் அனைத்தும் அவ்வழியே என்ற மனப்பாங்கு இங்கே துடைத்து ஏறியப்பட்டது. அது நியாயமான போராட்டம், மற்றவை உருவாக்கப்பட்டவை. அதற்க்குமுன் கூடங்குளம் கூட எப்படி முடித்து வைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. மக்கள் போராட்டம் மக்களால் எழுச்சியுடன் நடத்தப்பட வேண்டும்.
கிரிக்கட் அணி உருவாக்கும் எண்ணம் கொண்ட தலைவர்கள் தங்கள் போராட்டத்துக்கும் ஸ்பான்சார்கள் பிடித்தால் இப்படி தான் நடக்கும். ரஜினியே சொன்னது போல குளத்தில் இறங்கும் வரை உள்ளே இருப்பவர்கள் சரியாக அவர்கள் வேலையே செய்யட்டும். நீங்கள் செய்யவில்லை என்றால் நாங்கள் இறங்குகிறோம். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் இந்த வாரம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டவர் RK ராதாகிருஷ்ணன் என்னும் தேர்ந்த!! பத்திரிகையாளர். ரஜினிக்கு ஆதரவாக பேசிய அனைவரிடமும் வயது வித்தியாசமின்றி வாடா போடா என்று சரிசமமாக பழகியவர். நல்ல பழக்கம். ஆனால் அவர் கேட்ட கேள்வி தான் சற்று உறுத்தல். 450 மீனவர்கள் காணாமல் போன பொழுது ரஜினி என்ன செய்தார், அவர் ரசிகர்கள் என்ன செய்தனர் என்று சரமாரியாக கேள்வி கேட்டார் சரிதான்.
இனிமேல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் அனைவரும் புயல் வரும் பொழுது தங்கள் கட்சிக்காரர்களை அரணாக கட்டிவைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட செய்ய வேண்டும். பூகம்பத்தில் கட்டிடம் விழும்பொழுது ஒவ்வொரு கட்சிகாரரும் தங்கள் தோள் கொடுத்து தாங்க வேண்டும்.
அந்த மூத்த பத்திரிக்கையாளர்க்கு ரஜினியை பிடிக்கவில்லை எனில் வேண்டாம். ஆனால் அதற்கு அவர் ரசிகர்களை எதற்கு குற்றம் சொல்லவேண்டும். அவர் பாஷையில் சொல்வதானால் “டேய் முட்டாளே, காணாமல் போனதில் அவர் ரசிகனும் இருந்திருப்பார். உங்கள் வெறுப்பை வேறிடம் காண்பித்து கொள்ளுங்கள், சாவு வீட்டில் ஆதாயம் தேடாதே” என்று. திரும்பவும் ஒரு முக்கிய ட்விட்டர்வாதியிடம் இந்த கேள்வியை யாரும் கேட்கவில்லை. புயல் வந்ததும் துக்கம் சொல்லிவிட்டு காணாமல் போனவர் இப்பொழுது தான் திரும்பி பார்க்கிறார். நம்பிக்கையா இல்லை பயமா?
4. ஆன்மீக அரசியல்
ரஜினி ஒரு படத்தில் சொன்னது போல், ஒரு முறை சொன்ன வார்த்தை நூறு முறை சொன்னது போல் எதிரொலித்தது. மேற்கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் இது தான் மூலகாரணம். பாவி மனுஷன் ஒரு வார்த்தை மாற்றி சொல்லி இருந்தால் திராவிட அரசியல் என்று சொல்லி இருந்தால் இன்று ஆகா ஓகோ என்று பாராட்டு தான். ஆனால் நல்ல வேளை. அப்படி எல்லாம் நடக்கவில்லை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, நடக்கின்றது, நடக்க போகின்றது. ஆன்மீகம் என்று சொன்னாலே கூக்குரலிடுபவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மதசார்பற்ற அரசியலுக்கும் மதநல்லிணக்க அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு எப்படி ஆன்மீக அரசியலுக்கு விளக்கம் தெரியும்.
இந்து என்றால் திருடன் என்று சொல்லிய போது கொதிக்காத மனம் எப்படி ஆன்மீக அரசியல் என்று சொல்லும் பொழுது கொதிக்கிறது. ஒரு இந்து, தான் இந்து என்று சொன்னால் என்ன அவ்வளோ பெரிய பாவமா? அவர் பகவத்கீதையை மேற்கோள் காட்டினால் உங்களுக்கு ஏன் எரிகிறது. அவர் நம்புவதை தானே, படித்ததை தானே சொல்லுகிறார்.
உங்களுக்கு பைபிள் எப்படியோ, குரான் எப்படியோ அப்படி தானே அவருக்கும் பகவத்கீதை. அவர் அரசியலுக்கு வரும்முன்னே அவரிடம் இப்படி கோபப்பட்டு அவர் நம்பியதை, படித்ததை புறக்கணிக்க செல்லுகிறீர்களே, இப்படி உங்களால் ஹமீது அன்சாரியிடம் சொல்ல முடிந்ததா. இல்லை முஸ்லீம் லீக் என்று கட்சியே மதத்தின் பெயரால் வைத்துள்ள கட்சி தலைவர்களிடம் சொல்ல முடிந்ததா?
ரஜினி மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என்று தானே சொல்கிறார். உங்கள் கூற்றுபடி மற்ற இரு மதங்களிலும் ஆன்மிகம் இல்லயா. ஆன்மிகம் என்று சொன்னால் அதற்க்கு பின்னால் பாஜக உள்ளது என்று உமிழும் நீங்கள் தான் இங்கே பாஜகவிற்கு அடித்தளம் அமைத்து கொடுக்கிறீர்கள் என்று நான் சொன்னால் நம்பவா போகிறீர்கள். மோடியும் ரஜினியும் சந்தித்து இருக்க கூடாது என்று சொல்லும் நீங்கள் அண்மையில் கருணாநிதியும் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆசர்வதித்தார் என்றால் கேட்கவா போகிறீர்கள்.
சன்டிவியில் மைக் கிடைத்த உற்சாகத்தில் பேசிய ஷெலின் என்ற மங்கை!!! பகவத்கீதை எடுத்தால் சமூக விரோதி, மக்கள் விரோதி என்று முழங்கினார். கூடவே ஆரோக்கியராஜ் என்ற கிறிஸ்தவ போராளி ஏன் பைபிளில் இருந்து உதாரணம் சொல்ல கூடாதா என்று கேட்கிறார். இவர்கள் பெயர்கள் போதும் இவர்கள் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று காரணம் கண்டறிய. வாராவாரம் ஞாயிறன்று பைபிளை கொண்டு சர்ச்சில் வணங்குகின்றீர்களே, அதில் புரியாதா ரஜினி சொல்லி கேட்க ஆசைப்படுகின்றீர்கள். புரியாததை சொல்லி கொடுக்க அவர் என்ன கெமிஸ்ட்ரி வகுப்பா எடுக்கிறார். நீங்கள் இப்படி சமூக விரோதி என்று முழங்க யார் கொடுத்த தைரியம் இது. இதற்கு எங்கள் புனிதநூலை பற்றி பேச என்ன தேவை உள்ளது. இதை அனுமதித்த சன் டிவி தங்கள் ஆன்மீக தொடர்களை நிறுத்துமா?
எல்லாம் நன்மைக்கே. இப்படி ஒரு சாரார் மத அரசியலை வெறித்தனமாக முன்னெடுக்கும் போது, மிரட்டும் போது, இதை மக்களுக்கு வெளிக்கொணர இவை தேவைப்படுகின்றது. இந்த ஆன்மீக அரசியல் என்ற வார்த்தை பாஜகவினர் வாயில் இருந்து வந்திருந்தால், இந்த சமூகம் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கும். இது தான் பகவத்கீதையில் சொன்னது, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, நடக்கின்றது, நடக்க இருக்கின்றது. இங்கேயும் யாரும் கேள்விநாயகனிடம் கேட்க இதற்க்கு தேவை இருக்கவில்லை. திராவிட போர்வை போர்த்திய அவரிடம் ஆன்மீகத்தின் தகுதி இல்லை என்பதே நிதர்சனம்.
ஆம் இந்த வார அரசியல், எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறது. ரஜினி அரசியலுக்கு வரலாம், ஒருவேளை கடைசி நேரத்தில் வராமல் போகலாம், இல்லை வந்து ஆட்சி அமைக்கலாம், இல்லை தோற்றும் போகலாம்.
ஆனால் அவர் மூலம் ஈசன் சொல்ல வந்த விஷயம் சரியாக சென்று சேர்ந்துள்ளது. சிறு தீப்பொறி இன்று கனலாக மாறலாம். நாளை ஒரு காட்டுத்தீயாக உருவெடுக்கலாம். இனி ஆன்மீக அரசியல் முன்னெடுக்கப்படுவது உறுதி. இனி வரும் சந்ததி கூச்சப்படாமல் ஆன்மிகம் பற்றி பேசுவர் என்பதில் ஒரு நிம்மதி. ரஜினியின் அரசியல் பார்வை இன்னும் புரியாத புதிர் தான், ஆனால் ஒரு தேவையான மாற்றம் நிகழ்த்த ஒரு காரணியாகி இருக்கின்றார்.
திராவிட அரசியல் முற்று பெற இது ஒரு முற்றுபுள்ளி. ஆன்மீக அரசியலுக்கு ஒரு பிள்ளையார் சுழி. ஆன்மீகம் தெரிந்த அனைவரும் ஒன்று கூட இது ஒரு மைய்ய புள்ளி.
நன்றி
மீண்டும் சந்திப்போம்.
சு.முகுந்தன்.