தற்போதைய அரசியல் சூழலில் ரஜினிகாந்த் எதாவது தவறு செய்வாரா? அவர் மீது ஏதாவது குற்றம் சாட்ட முடியுமா? என்று எல்லா கட்சிகளும் ஆவலும் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்த் மீதான வருமானத் துறையின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரும்பப் பெற்றது  ரஜினிக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படும் நிகழ்வாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று The Hindu பத்திரிக்கையில் வெளியான விரிவான செய்தியின் அடிப்படையில் ரஜினிகாந்த் கந்துவட்டி தொழில் செய்கிறார் என்று சமூக ஊடகங்களில் கதறல்கள் கேட்கின்றன. என்னதான் நடந்தது?

 

செய்திச் சுருக்கம் இதோ – 2002-03, 2003-04 & 2004-05 கால கட்டங்களில் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமான வரி படிவங்களை ஆராய்ந்த வருமான வரித்துறை அவரிடம் சில கேள்விகளை எழுப்பியது.  அதாவது ரஜினிகாந்த் அவர்கள் 2004-05ல் தாக்கல் செய்த படிவத்தில் 1.71 கோடி ரூபாய் கடன் திரும்பி வராக் கடன் என்று நஷ்டம் காண்பித்துள்ளார். இதனடிப்படையில் அவர் பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்கிறாரா என 2005 பிப்ரவரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு ரஜினிகாந்த் அவர்கள் இது வெறும் கைமாற்று என்றும் தான் பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்யவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.  அதன் பிறகு ரஜினிகாந்த் அவர்கள் வருமான வரித்துறைக்கு தான் பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும், முன்பு அவ்வாறு இல்லை என்று தெரிவித்தது தவறான புரிதல்களின் அடிப்படையில் என்றும் தெரிவிக்கிறார். திருத்தப்பட்ட வருமான வரி படிவத்தையும் தாக்கல் செய்கிறார். ஆனால் இதனை ஏற்க மறுத்த வருமான வரித்துறை அவர் மீது அபராதக் கட்டணம் விதிக்கிறது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறார் ரஜினிகாந்த் அவர்கள். மேல் முறையீட்டில் ரஜினிகாந்த் மீது விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தை ரத்து செய்யப்படுகிறது.  இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தாக்கல் செய்கிறது. 2019ல் மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் அபராதத் தொகை 1 கோடிக்கும் குறைவாக இருப்பதால் அவர் மீதான வழக்கைத் திரும்பப் பெறுவதாக வருமானவரித்துறை அறிவிக்கிறது. இத்தோடு இந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.

இப்போது கேள்வி என்னவென்றால் பணம் கடன் கொடுப்பதைத் தொழிலாக செய்ய வேண்டும் என்றால் அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.  இவைகளைப் பின்பற்றினாரா என்பது பற்றி வெளிவந்துள்ள செய்திகளில் தெளிவில்லை. இவரது ஆடிட்டர், ரஜினிகாந்த் பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்தாரா எனத் தெரியாது என்று கூறியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.  தொழில் முறையாகப் பணம் கடன் கொடுத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டால் அதனை வருமான வரி படிவத்தில் காண்பிக்க முடியும். அப்படியல்லாமல் நீங்களும் நானும் கைமாற்று கொடுத்து ஏமாந்தால் அது நமக்கு மட்டும்தான் நஷ்டமே தவிர வருமான வரி கணக்கில் நஷ்டமாகக் காண்பிக்க முடியாது.  இங்கேதான் குழப்பம் ஆரம்பிக்கின்றது.

 

இவரது ஆடிட்டர் பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்கிறாரா என்று தெரியாது என்று தெரிவிக்கிறார். ரஜினிகாந்த் அவர்களே முதலில் இது நண்பர்களுக்குக் கொடுத்த கடன்தான் என்று கூறியிருக்கிறார்.  ஆனால் பின்னர் இது கடன் கொடுக்கும் தொழில்தான் என்றும் விளக்கியிருக்கிறார்.

 

இதைக் கையில் எடுத்துக் கொண்டு ரஜினிகாந்த் கந்து வட்டிக்குக் கொடுக்கிறார் என்று எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வரிந்து கட்டிக் கொண்டு ட்ரெண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்தால் அதில் என்ன தவறு?  சட்டத்துக்கு உட்பட்டு வட்டி வாங்குவதில் என்ன குறை கண்டு விட்டீர்கள்? 

 

சச்சின் டெண்டுல்கரைத் தெரியுமா?  உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர். ஆனால் வருமான வரித்துறையின் ஆவணங்களில் அவர் ஒரு நடிகர். ஆச்சரியமாக இருக்கிறதா? விளம்பரங்களில் வந்த வருமானத்தில் பிரிவு80RRன் கீழ் விலக்கு கோரினார் சச்சின் டெண்டுல்கர். அதாவது தான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தாலும் விளம்பரங்களில் நடிக்கும்போது தான் ஒரு நடிகர் என்றும் அதனால் இந்தப் பிரிவு தனக்கு செல்லும் என்று வாதாடி அதனை வருமான வரித் துறையும் ஏற்றுக் கொண்டது.  விளம்பரப் படங்களில் ஏராளமானோர் நடிக்கின்றனர். அவர்கள் தொழில் முறை நடிகர்கள். ஆனால் தோனி, விராட் கோலி போன்றவர்களை அவர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால்தான் விளம்பரங்களில் அவர்களைப் போடுகின்றனர். நம்முடைய மூளைக்குத் தெரிந்தது இவ்வளவுதான். ஆனால் மெத்தப் படித்த அதிகாரிகளுக்கு நிறைய விவரங்கள் தெரியுமாதலால் சச்சின் டெண்டுல்கர் நடிகர் என்று முடிவுசெய்தால் நாம் அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 

 

 

வருமான வரிக்கு ஏராளமான விலக்குகள் உள்ளன. இதனை படித்தவர்களும் விற்பன்னர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவ்வளவுதான்.

சட்டப்படி இது சரி, ஆனால் நியாயப்படியும் தர்மப்படியும் இது சரியா என்று கேட்டால் அதைக் கேட்க நீங்கள் யோக்கியமா என்று குரல் வரும்.

கொள்கை வேறு வியாபாரம் வேறு என்று பள்ளிக்கூடங்களுக்கு ஒருவர் வக்காலத்து வாங்கினாரே ஞாபகம் இருக்கிறதா? அது மாதிரிதான் இதுவும் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?

உடனே சிலர் சிவாஜி சினிமாவை ஞாபகப் படுத்துகின்றனர். அதிலே ரஜினிகாந்த் ஊரிலுள்ள ஆடிட்டர்களையெல்லாம் அழைத்து கூட்டம் போட்டு மிரட்டுவார்.  பௌன்ஸர் பாய்ஸ் உள்ளே போய் அடித்துத் துவைத்ததும் உண்மைகளையெல்லாம் கக்குவார்கள்.

அது சினிமா. ஆயிரம் கொள்கை வசனங்களும் பஞ்ச் டயலாக்கும் பேசலாம் சினிமாவில். அதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வருமா? சினிமாவில் நூறு பேரைக்கூட ஒரு ஆள் அடித்துத் துவைக்கலாம். இதையெல்லாம் நம்பும் அளவுக்கு பச்ச புள்ளயா நீங்க?  

கொள்கை வேறு, சினிமா டயலாக் வேறு. சினிமாவில் பேசுவதையெல்லாம் நம்பிக் கொண்டு கேள்வி கேட்பது நியாயமா எதிர்ப்பாளர்களே?  

சட்டப்படி சரி என்றால் அவ்வளவுதான். நியாயமா தர்மமா என்றெல்லாம் கேட்காதீர்கள்.  நியாயம் தர்மம் இதெல்லாம் இப்போதெல்லாம் சினிமாக்களில் கூட காண்பிப்பதில்லை.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.