ஸ்ரீராமஜெயம் –  இப்படித்தான் நாம் திருமணப் பத்திரிக்கைகளைத் துவங்குவோம்.  கலியுகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செல்வம், வெற்றி என அனைத்தையும் தர வல்லது ராமமந்திரம் ஒன்றுதான் என்று கூறுவார்கள்.  வேடனாக இருந்த வால்மீகியை ரிஷியாக புனிதராக மாற்றியது ராம நாமமே என்பதை இந்த உலகறியும். பகவனின் ஒன்பது அவதாரங்களில் ராம அவதாரமே  மனிதனுக்கு நெருக்கமானது, ஏனென்றால் ராமாவதாரத்தில் மட்டுமே ஸ்ரீராமன் தன்னை ஒரு கடவுளாகக் காட்டிக் கொள்ளாமல் மனிதனாகவே வாழ்ந்தான். அதனால்தானோ என்னவோ சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தான் – ஒரு சாதாரண மனிதனைப் போலவே.

 

ராமனைப் பற்றி உருகி உருகிக் கீர்த்தனைகள் பாடிய தியாகபிரம்மம் ஒரு முறை யோசித்தாராம் –  அதுதான் ராமன் 14 வருடங்கள் கழித்து திரும்பி வந்துவிடப் போகிறானே, அப்புறம் என்ன தசரதருக்கு கலக்கம் என்று.  ஒரு நாள் அவர் பூஜித்து வந்த ராம விக்ரகம் காணாமல் போனபோது கலங்கித் தவித்தாராம் தியாகைய்யர். அப்போதுதான் அவருக்கு தசரதரின் நிலை புரிந்ததாம்.  தியாகைய்யர் மலை என்றால் நாம் மடுவுக்கும் கீழே. அதனால்தானோ என்னவோ இத்தனை வருட காலம் அயோத்தியில் குழந்தை ராமனை தரிசிக்க நமக்கு பாக்கியம் இல்லாமல் இப்போதுதான் கிடைத்துள்ளது.

சர்ச்சைக்குரிய நிலம் – என்ன சர்ச்சை?  பாபர் மசூதி அங்கே இருந்தது. பாபர் யார்?  வேற்று நாட்டிலிருந்து நம்மைப் படையெடுத்து வந்து அடிமைப்படுத்திய கொள்ளைக்காரன்.  அவனை நினைத்து நாமெல்லோரும் அவமானப்பட வேண்டுமேயல்லாது அவன் புகழ் பாடுவதா தேசபக்தி? பாபர் போன்ற ஆக்ரமிப்பாளர்களின் சுவடுகளைத் தடம் தெரியாமல் மாற்ற வேண்டாமா?   அதை விடுத்து விட்டு கொள்ளைக்காரனின் புகழ் பாடுவதா தேசபக்தி? இதுவா மதச்சார்பின்மை? இதுவா மத நல்லிணக்கம்?

நாங்கள் உங்கள் அடிமைகள் என்று மண்டியிடுவதுதான் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் என்றால் அது இந்த மண்ணில் வேண்டவே வேண்டாம்.  பிரிவினே வேண்டாம் என்று காந்தியடிகள் மன்றாடியபோது முஸ்லீம்களுக்குத் தனி நாடு இல்லையென்றால் ஒட்டுமொத்த பாரதத்தையும் முஸ்லீம்கள் கையில் கொடுத்து விட்டு வெளியேறுங்கள், ஏனென்றால் நீங்கள் முஸ்லீம்களிடமிருந்துதான் இந்த நாட்டைப் பிடித்தீர்கள் என்று கோரியவர் முஸ்லீம்லீக் தலைவர் ஜின்னா என்பதை நாடறியும்.  நல்ல வேளை, இங்கே இருந்த சில தலைவர்களுக்கும் பிரதமர் பதவி மீது ஆசை இருந்ததால் நாடு தப்பியது. இல்லையென்றால் பாக்கிஸ்தான் போல நாம் இங்கே 5% ஆகியிருப்போம்.

மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தின் பக்கமும் சாயாமல் நடுநிலையாக இருப்பது.  மன்மோகன் சிங் கூறியது போல முஸ்லீம்களுக்குத்தான் இந்த நாட்டின் வளங்களின் மீது முதல் உரிமை உள்ளது என்பதல்ல மதச்சார்பின்மை. அது முழுக்க முழுக்க மதவாதம். துரதிருஷ்டவசமாக இதைத்தான் மதச்சார்பின்மையென்று கடந்த 70 வருடங்களில் பெருவாரியாக நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.

அயோத்தி தீர்ப்பில் சட்டத்தை விட, உண்மைகளை விட நம்பிக்கையே பெரிதாகக் கொள்ளப்பட்டுள்ளது என்று புலம்பும் குரல்கள் எழுகின்றன.  என்ன ஆச்சரியம்? சட்டமே பெரிது, மத நம்பிக்கைகள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தவையென்று கூக்குரலிட்டவர்கள் முத்தலாக் தடை சட்ட விவகாரத்தில் மதநம்பிக்கையே பெரிதென்று கோஷமிடவில்லையா?  ஹிந்து மதம் என்றால் மட்டும் சட்டத்தை மதித்து சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும், இஸ்லாம் என்றால் மதச்சட்டங்கள்தான் பெரிது, அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்படத் தேவையில்லையென்ற சட்டவிரோதப் போக்கை இத்தகைய அறிக்கைகள் ஊக்குவிக்கின்றன.

அயோத்தி தீர்ப்பைப் பொறுத்தவரையில் சட்ட நுணுக்கங்கள், வாதங்கள், ஆதாரங்கள், முன்னுதாரணங்கள் இவற்றைக் கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  இதில் உங்களுக்கு உடன்பாடில்லையென்றால் சட்டரீதியான என்ன வழிமுறைகள் உள்ளதோ அதனைப் பின்பற்றலாம். அதை விடுத்து இதில் அரசியல் தலையீடு உள்ளது, இது சமரசத் தீர்ப்பு என்று உள்நோக்கம் கற்பித்து அரைவேக்காடு மாதிரி பேசுவது சமூக விரோதம் மட்டுமல்ல, சட்டவிரோதமும் ஆகும்.

இனியாவது ராம நாமத்தின் துணை கொண்டு இத்தகைய மதவாத தேசவிரோத சக்திகளை வேரோடு களையெடுப்போம். ஸ்ரீராமஜெயம்.

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.