வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி…  கமல் ரஜினி இருவரும் இணைந்து நடித்த இருவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம் இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்ரீப்ரியா தன்னை ஏமாற்றி விட்டதாகப் பாடுவார் கமல்.  இதைத்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று கூறுவது.  

 

ட்ராய் (Telecom Regulatory Authority of India – TRAI) அமைப்பின் சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் மொபைல் சேவையில் வோடஃபோன்-ஐடியா நிறுவனம் (32.53%) முதலிடத்திலும் இரண்டாமிடத்தில் ஜியோ (29.08%), மூன்றாமிடத்தில் ஏர்டெல் ( 28.12%) மற்றும் நான்காமிடத்தில் பி எஸ் என் எல் ( 9.98%).  

சரிங்க, இப்போ 6 பைசாக்குக் காரணம் என்ன?  IUC (Interconnect User Charge) அதாவது ஜியோவிலிருந்து ஒருவர் ஏர்டெல் மொபைலை அழைத்தால் ஜியோவானது ஏர்டெல்லுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கொடுக்க வேண்டும்.  ஒரு அழைப்பில் இரண்டு நிறுவனங்களுக்கும் செலவிருக்கின்றன. ஏனென்றால் இரண்டு நிறுவனங்களின் டவர் முதலிய கட்டமைப்புக்கள் பலமாக இருந்தால் அழைப்பு இரு மொபைல்களை இணைக்கும்.  இதிலே குறைந்த சந்தாதாரர்களை உடைய நிறுவனத்துக்குத்தான் இன்னும் செலவு அதிகம். உதாரணத்திற்கு பி எஸ் என் எல்லை எடுத்துக் கொள்வோம். மொத்தமே 10%க்கும் குறைவான சந்தாதாரர்கள். ஆனால் இவர்கள் நாடு முழுவதும் பரவியுள்ளனர். ஆகவே நாடு முழுவதும் டவர்களை நிறுவி பராமரிக்க செலவு அதிகமாகும். 

 

முதலில் இந்த IUC  14 பைசாவாக இருந்தது. இதனை அக்டோபர் 2017 முதல் 6 பைசாவாகக் குறைத்தது ட்ராய். இது மட்டுமல்லாமல் ஜனவரி 2020 முதல் IUC கட்டணத்தை  முழுக்க விலக்கிக் கொள்ளலாம் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது ட்ராய் இந்த ஜனவரி 2020 என்பதைத் தள்ளி வைக்கலாமா என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது. 

 

இங்கேதான் சிக்கல் ஆரம்பம்.  IUC கட்டணம் என்பது எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். மாதக் கடைசியில் நீ எனக்கு எவ்வளவு தரவேண்டும் நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும் என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் தற்போது ஜியோதான் பிற நிறுவனங்களுக்குத் தரவேண்டிய  நிலை. ஜியோவில் மட்டுமே முற்றிலும் இலவசம் என்பதால் இது ஜியோவின் லாபத்தைப் பெருமளவு பாதிக்கிறது. 

முன்பெல்லாம் அழைப்பு வந்தால் 35-35 நொடிகள் உங்கள் போன் அலறிக் கொண்டிருக்கும்.  நீங்கள் நிதானமாக யார் என்று பார்த்து அப்புறமா ஏற்கலாம். இப்போது ஜியோவிலிருந்து நீங்கள் இன்னொரு எண்ணை அழைக்கும்போது 20 செகண்டுகளில் அழைப்பை ஏற்காவிட்டால் உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என்று ஏர்டெல் குற்றம் சாட்டுகிறது.  இதனால் அது இந்தியர்கள் கண்டுபிடித்த மிஸ்டு கால் ஆகிவிடும். அந்த இன்னொரு எண் வேறு ஜியோ அல்லாத எண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் திருப்பி அழைப்பார். இதனால் ஜியோவிற்கு 6 பைசா நஷ்டத்திலிருந்து 6 பைசா லாபமாக மாறுகிறது. இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன பிற நிறுவனங்கள். எல்லா நிறுவனங்களும் ஒரே சீராக 30 நொடிகளாவது அழைக்க வேண்டும் என்று ட்ராயிடம் முறையிட்டன. ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏர்டெல் தனது வெளி அழைப்புக்களை 25 நொடிகளாகக் குறைத்து விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் இனி 5 நொடிகள் மட்டுமே நமது ஃபோன் அலறும் போலிருக்கிறது. பாயும் புலி போல எடுக்காவிட்டால் மிஸ்டு கால்தான். 

 

இன்றைக்கு மொத்த மொபைல் இணைப்புக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நமது மக்கள் தொகையை நெருங்கிவிட்டது. அப்போ எல்லார்கிட்டேயும் மொபைல் போனிருக்குன்னு அர்த்தமா?  டெல்லியில் 100 பேருக்கு 240 மொபைல் இணைப்புக்கள் இருக்காம். பிகாரில் 100 பேருக்கு 60 பேரிடம்தான் மொபைல் இணைப்புக்கள் இருக்கிறது. இன்றைக்கு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் பலருக்கும் 2 சிம் என்பது சர்வ சாதாரணம். 

 

ஜியோவைப்போலவே அனைத்து அழைப்புக்களும் இலவசம் என்ற சேவையை ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் வழங்குகின்றன. இது 4ஜி ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும். இன்னமும் 2ஜி ஃபோன் உபயோகிப்பவர்கள் இந்தத் திட்டங்களில் சேராமல் இன்னமும் 10 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்வது, ஒரு நிமிடத்துக்கு 50 பைசா முதல் பலவேறு கட்டணங்களை செலுத்துவது என்று இருக்கிறார்கள். இவர்கள்தான் பிற நிறுவனங்களை நஷ்டமடையாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ரூ.450 கொடுத்து 84 நாட்களுக்குரிய திட்டத்தைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்கள் அல்ல.

 

ஜியோ பயனாளர்கள் மற்ற மொபைல்களை அழைக்க இனிமேல் ஜியோவைத் தவிர்ப்பார்கள்.  ஜியோ மட்டுமே வைத்திருப்பவர்கள்? இதற்கெனவே ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் கூப்பனை வாங்கலாம். அல்லது ஜியோவிலிருந்து வெளியேறலாம்.  நினைவிருக்கிறதா? ஒரு காலத்தில் உள்ளூர் கட்டணத்துக்குக் கால அளவு இல்லை. எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரே கட்டணம்தான். இதனைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மூன்று நிமிடம் என்பது ஒரு அழைப்பு என்று கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் தேவையில்லாத பேச்சுக்கள் நிறுத்தப்பட்டன.  அதுபோலவே முதன்மையான சிம்மாக இல்லாத பயனாளர்கள் ஜியோவுக்கு மட்டுமே ஜியோவைப் பயன்படுத்தலாம் அல்லது டேட்டாவுக்கு மட்டுமே உபயோகிக்கலாம். இதன்மூலம் ஜியோவின் நஷ்டம் குறையும். அடுத்தது இந்த ஜியோ எண்களுக்கு வரும் அழைப்புக்கள் மூலம் வருமானமும் உயரும்.    

இதனால் மற்ற நிறுவனங்களுக்கு என்ன ஆகும்?  ஜியோ அல்லாத எண்களை ஜியோ அல்லாத மொபைல்களிலிருந்து அழைப்பதால் IUC கட்டணங்களை ஏர்டெல், வோடஃபோன் & பி எஸ் என் எல் ஆகிய மூன்றுக்குள்ளும் பகிரவேண்டும். இவையல்லாது ஜியோவை அழைக்கும்போது அந்த அழைப்புக்களுக்கு 6 பைசா தர வேண்டிய கட்டாயம்.

 

ஆக, வரப்போகிற நாட்களில் பல மாறுதல்கள் நிகழப் போகின்றன.  5ஜி வேறு எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் கூடுதல் செலவினனங்களையும் வருமானம் குறைவதையும் நஷ்டத்தையும் பிற மொபைல் நிறுவனங்கள் எப்படி சமாளிக்கின்றன என்பதைப் பொறுத்துத்தான் இந்தியாவில் மொபைல் என்பது ஒரே  நிறுவனத்தின் ஏகபோகமாகிறதா என்பது முடிவு செய்யப்படும். 

அதிகரிக்கும் செலவுகளையும் நஷ்டத்தையும் தவிர்க்க எல்லா நிறுவனங்களும் முழுக்க முழுக்க 4ஜிக்கு மாற வேண்டும். இதனால் 2ஜி பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை எதிர்பார்த்துதான் 4 ஜி போனின் விலை 699 ரூபாய், கணக்கில்லா இலவச அழைப்புக்களுக்கு மாதம் 49 ரூபாய் மட்டுமே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. இதன் மூலம் பிற நிறுவனங்கள் 4ஜிக்கு மாறினால் அதனால் பலனடையப்போவதும் ஜியோதான்.  இதனைத் தவிர்க்க பிற நிறுவனங்களும் ஜியோ போனைப் போல ஒரு குறைந்த விலை 4ஜி மொபைலுடன் இணைவது அவசியமாகிறது. ஜியோவின் சவால் அத்தனை கடினமானதல்ல என்றாலும் போட்டியாளரைக் குறை கூறாமல் சவாலை சாமர்த்தியமாக சமாளிப்பார்களா பிற நிறுவனங்கள்?  

 

ஆனாலும் இந்த 6 பைசாவினால் மக்கள் மத்தியில் ஜியோவைப் பற்றி மேலோங்கியுள்ள கருத்து  — வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி…

 

 

ஸ்ரீஅருண்குமார்

One Reply to “என்னடி மீனாட்சி..”

  1. ரொம்ப நல்ல கட்டுரை இவ்வளவு தகவல்கள் இன்னைக்கு தான் எனக்கு புரியுது

    நன்றி 🙏

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.