நான் ஆணையிட்டால்…. அது நடந்து விட்டால்… இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்  எம் ஜி ஆர் படங்களில் ஒரு சூப்பர் ஹிட் படம் எங்க வீட்டுப் பிள்ளை.  இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் எம் ஜி ஆர் என்ற மந்திரம் மட்டுமல்லாது உளவியல் ரீதியான காரணங்களும் இருந்தது.  பல்லாண்டுகளாக ஏமாற்றுப்பட்டு வந்த மக்கள் தங்களை ஏய்ப்பவர்களை வெற்றி கொள்ள ஒருவன் வரமாட்டானா என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்புதான் இந்தப் படத்தின் வெற்றி.  எம் ஜி ஆரைக் கோழையாகவே வளர்த்து அதன் மூலம் அவரது சொத்துக்களை ஆட்டையைப் போடுவார் நம்பியார். எங்க வீட்டுப் பிள்ளையின் மாபெரும் வெற்றியின் இன்னொரு வடிவம்தான் நரேந்திர மோடியின் வெற்றி.

 

இத்தனை நாட்களாக மக்கள் ஏழைகளாகவும் எதற்கும் அரசின் கையை நம்பி இருப்பவர்களாகவுமே வைக்கப்பட்டிருந்தனர். அதன் இன்னொரு பகுதிதான் அயோத்தி.  எப்பொழுதும் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் பதட்டத்திலேயே வைத்திருந்தது அயோத்தி பிரச்சினை. அப்படி என்னதான் பிரச்சினை? அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தை இடித்து விட்டு அதன் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  இதெல்லாம் நடந்து 16ம் நூற்றாண்டில். 

பி ஜே பி அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டு பெரிதாக வைக்கப்படுகிறது.  ஆனால் இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் 1885லேயே கொண்டு போகப்பட்டது என்பது அறிவிலிகளுக்குத் தெரியுமா? பி ஜே பி, ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் இவையெல்லாம் அப்போது இல்லவே இல்லை என்பது தெரியுமா?  

 

இதிலே இரண்டு கேள்விகள் முக்கியமாக வைக்கப்படுகின்றன.  ஒன்று ராமர் கோவில் அங்கே இருந்ததா? இரண்டாவது அங்குதான் ராமர் பிறந்தாரா?  ஒரு விஷயத்தை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லீம்கள் படையெடுப்புக்கு முன்பு இந்த நாட்டின் மதமாக ஹிந்து மதமே இருந்தது.  புத்த ஜைன மதங்களெல்லாம் இருந்தாலும் அவைகளும் ஹிந்து மதத்தின் இன்னொரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. முக்கியமாக மதத்தால் பிரிவினைகளும் பிரச்சினைகளும் இல்லை. காரணம் என் மதத்தைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும், என் கடவுளைத் தவிர பிற கடவுள்கள் எல்லாம் பொய் என்ற வாதம் இங்கே எழவில்லை.  

 

சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களும் எல்லா இந்தியர்களையும் போல எல்லா உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.   ஆனால் ஒரு சில கட்சிகள் ஓட்டுக்காக வேண்டி சிறுபான்மையினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வேரூன்றித் தழைத்து வந்த ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதையும் ஹிந்துக்களை இரண்டாம்தரக் குடிகளாக மாற்றுவதையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எந்த உரிமைகளும் மறுக்கப்படக் கூடாது. அதே சமயத்தில் சிறுபான்மையினர் என்பதாலே அவர்களுக்கு மட்டுமே எல்லா உரிமைகளும் என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ளமுடியாது.  எல்லா இந்தியர்களும் வெறும் இந்தியர்கள் மட்டுமே, சிறுபான்மை பெரும்பான்மை என்ற வித்தியாசமே இருக்கக்கூடாது. இதுதான் உண்மையான சமத்துவம்.

ஹிந்து மதம் என்பதில் இந்த மண்ணில் தோன்றிய தர்ம வழி.  இதற்கு இங்கேயே இடமில்லை என்றால் வேறு எந்த நாட்டில் போய் தேடுவது?  இங்கே இருக்கும் மக்களின் முன்னோர்கள் ஒரு காலகட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பிற மதங்களுக்காக மாறியதால் இந்த மண்ணின் தர்மம் மதிப்பிழந்து விடுமா?   யாவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் அப்படிப்பட்ட உரிமை இந்த மண்ணின் தர்மத்தை அழித்தொழிப்பதில் இருக்க முடியுமா?

 

இப்போது மீண்டும் எங்க வீட்டுப் பிள்ளை படத்தையே எடுத்துக் கொள்வோம்.  அந்தப் படத்தில் நடித்த வில்லன் நம்பியாருக்கு தூக்கி வைத்து யாராவது பேசினால்  உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்? அதேதான், பாபர் என்பவன் இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்து சில  ஆட்காட்டிகளாலும் அடிமைகளாலும் நம்மைத் தோற்கடித்து நம்மை அடக்கி ஆண்ட ஒருவன். அவனைப் போற்றுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் —  மதம் ஒன்றைத் தவிர? இவ்வாறு மதத்தின் அடிப்படையில் தேசத்தின் அவமானத்தை உயர்த்திப் பேசுவதை எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே ராமர் கோவில் இருந்ததா இல்லையா என்பதே இங்கே கேள்வி இல்லை.  பாபர் போற்றப்பட வேண்டியவனா தூற்றப்பட வேண்டியவனா என்பதே கேள்வி.

அடுத்தது ராமர் அங்கேதான் பிறந்தாரா?  ராமர் இந்த நாட்டின் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவருக்கு எங்கே வேண்டுமானாலும் கோவில் கட்டலாம்.  அயோத்தியில் பிறந்த ராமன் தமிழ்நாட்டின் வேதாரண்யம் வரை நடந்து வந்திருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றிருக்கிறார். அவர் இந்த நாட்டின் உத்தம புருஷர். பிற மதத்தினரை சந்தோஷப்படுத்துகிறோம் என்று ராமரை இழிவுபடுத்துவதும் அவர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்று கேலி செய்வதும் இனியும் பொறுத்துக் கொள்ள மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் சின்ன எம் ஜி ஆர் சீனுக்குள் கையில் சாட்டையுடன் வந்து விட்டார். 

 

பெரும்பான்மையினர் மனதில் சிறுபான்மையினர் பற்றிய வெறுப்பைத் தூண்டிவிடும் காரியங்கள் கயமைத்தனமானவை. அதைத்தான் இத்தனை நாளும் சில கட்சிகளும் அமைப்புக்களும் தொடர்ந்து செய்து வந்தன.  இந்த நாட்டின் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அவர்கள் யாரும் வேற்று நாட்டிலிருந்து இறக்குதி செய்யப்பட்டவர்கள் இல்லை. இவர்களது முன்னோர்கள் அனைவரும் இந்த நாட்டின் மைந்தர்கள், ஹிந்துக்களாக இருந்து மதம் மாறியவர்கள்.  எவ்வாறு மதம் மாறியதால் இவர்கள் இந்தியர்கள் என்பது மாறாதோ அவ்வாறே இந்த நாட்டின் அவமானம் எல்லோருக்கும் அவமானம் என்பதும் மாறாது. இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினைக்கு இடமேயில்லை. ஆனால் இத்தனை காலமாக சிறுபான்மையினரை தனிக்குழுவாகவே நடத்தி வந்தன சில கட்சிகள் – ஓட்டுக்காக.  இதுதான் பிரச்சினையின் மூல காரணம்.

முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான், பூர்வகுடிகள்தான். அவர்களுக்கும் இந்த நாட்டின் பாரம்பரியம் பொருந்தும்.  இதை எல்லோரும் ஏற்றுக் கொண்டால் நிரந்தர அமைதி திரும்பும். ஆனால் சிறுபான்மையினரை தனிக் குழுவாக பெரும்பான்மையோடு சேராமல் தனிமைப்படுத்தி வைத்திருப்பதுதான் அரசியல்ரீதியாக லாபம் என்று இத்தனை நாளும் மக்களை ஏமாற்றி வந்திருக்கிறது ஒரு கூட்டம். அந்தக் குள்ளநரிக் கூட்டம் ஒட்டுமொத்தமாக அரசியலை விட்டே வெளியேற்றப்படப் போகிறது விரைவில்.

 

 

ஸ்ரீஅருண்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.